- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (30.04.2024)
-
- by Editor,
- 2 years ago
- in இரகசியம் பரகசியம்
பெரும் மதிப்புக்குரிய ஈழவேந்தன் ஐயா காலமாகிவிட்டார். அவர் பற்றிய சில நினைவுகள் நிழலாடுகின்றன. அவற்றைப் பகிர விரும்புகிறேன்.
ஈழவேந்தன் இரண்டு தடவைகள் இந்தியாவிலிருந்து இந்திய அரசினால் நாடு கடத்தப்பட்டார். முதல் தடவை 2000 ஆம் ஆண்டு முற்பகுதியில் என்று நினைக்கிறேன். அடுத்த தடவை அவர் எம்.பியாக இருந்த காலத்தில். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 'சார்க்' நாடுகளுக்கு விஜயம் செய்வதற்கான விசா அவசியமில்லை என்ற ஏற்பாட்டை வைத்து, இலங்கையின் இராஜதந்திர கடவுச்சீட்டுடன் தமிழகம் போய் இறங்கிய அவரை, அங்கிருந்து இந்தியா உடனேயே கொழும்புக்குத் திரும்பவும் நாடு கடத்தியது.
இரண்டு தடவையும் கொழும்பில் அவர் வந்து இறங்கித் தடுமாறிக் கொண்டிருந்த போது அகஸ்மத்தாக கட்டுநாயக்காவில் அவரை சந்தித்தவர் 'உதயன்', 'சுடர்ஒளி' நிர்வாக இயக்குனர்தான்.
தமிழ்ப் போராளிகள் சார்பாக செயற்பட்டமைக்காக இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவருக்கு முகம் கொடுக்கவே அந்த யுத்த காலத்தில் கொழும்பில் பலரும் அஞ்சிய சமயத்தில், விமான நிலையத்திலிருந்து அவரை தம்முடன் கூட்டி வந்து, கொழும்பில் தனது இல்லத்திலும், பின்னர் 'சுடர்ஒளி' கொழும்பு அச்சகத்திலும் இடமளித்துப் பராமரித்தவர் 'உதயன்', 'சுடர்ஒளி' நிர்வாக இயக்குனரே.
அந்தச் சமயத்தில் அந்த இரண்டு பத்திரிகைகளின் ஆசிரியராக நான் கடமையாற்றிக் கொண்டிருந்தமையால் எமது அச்சகத்தில் தங்கி இருந்த ஈழவேந்தனுடன் அதிகம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவ்வேளை எங்கள் பத்திரிகையிலும் எழுத்து மூலம் அவர் அவ்வப்போது பங்களிப்பு செய்தார். தினசரி இரண்டு மணித்தியாலங்களாவது எங்கள் உரையாடல் நீடிக்கும்.
பின்னர் 2004 இல் அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பியானார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, 2006 மார்ச் மாதம் அளவில் ஒரு செய்தியை முன் பக்கத்தில் நான் பிரசுரித்தேன். 18 ஆண்டுகளுக்கு முன்னர் அன்று நான் போட்ட தலைப்பு கடைசியில் நேற்றுதான் நிஜமாகி இருக்கிறது.
எனது மோசமான அந்தக் கிண்டல் தலைப்பை நட்போடும் உரிமையோடும் சகஜத்தோடும் கோபிக்காமல் அவர் ஏற்று, நளினத்தோடு உரையாடியமை எனக்கு நினைவுக்கு வருகின்றது. நடந்தது இதுதான்:-
என் நினைவு சரி என்றால் எம்.பி. ரவிராஜ் படுகொலையைக் கண்டித்து நாடாளுமன்றத்துக்குள் ஒரு மரண வீட்டை நடத்திக் காட்டுவது என்று தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் அதிரடியாக தீர்மானித்தனர். இருந்த தமிழ் எம்.பிக்களில் எடையும் உயரமும் குறைந்த, மெலிதான மனிதர் ஈழவேந்தன்தான். ஆக, செத்த வீட்டுக்கு அவரே பிரேதமானார். அவரைப் படுக்க வைத்து, வெள்ளை வேட்டியால் உடல் முழுவதையும் மூடி, பிரேதமாக அவரைச் சுமந்து கொண்டு நாடாளுமன்றத்தின் மையப் பகுதிக்கு வந்து, பிரேத ஊர்வலம் நடத்தி, அழுது புலம்பி, நாடாளுமன்றத்தின் மையத்தில் ஒரு மைய வீட்டையே நடத்திக் காட்டினர் கூட்டமைப்பு எம்.பிக்கள். வேட்டியால் போர்க்கப்பட்ட ஈழவேந்தனின் உடலை தலைப்பகுதியில் செல்வராஜா கஜேந்திரன், அரியநேத்திரன், ஜெயானந்தமூர்த்தி போன்றோர் சுமக்க, கால் பகுதியை செல்வம் அடைக்கலநாதன் உட்பட சிலர் சுமந்து வந்தனர் என்று நினைவு.
நாடாளுமன்றமே பதறிப் போய்விட்டது. அத்தகைய தத்ரூபமான ஒத்திகை நடிப்பு. நாடாளுமன்றப் பதில் செயலாளர் நாயகமாக இருந்த அம்மணி பதறி அடித்துக் கொண்டு வந்து நின்று கலவரப்பட்டார்.
பிரேதமாக அசையாமல் கிடந்தார் ஈழவேந்தன். சுமார் பத்து நிமிடம் நாடாளுமன்றத்துக்குள் செத்தவீட்டு அரங்கேற்றுகை முடிந்து, அவரை நாடாளுமன்ற அவைக்கு வெளியில் சக எம்.பிக்கள் சுமந்து கொண்டு வந்து இறக்கும் வரையில், அவர் ஆட்வோ அசையவோ இல்லை. பிரேதமாகவே இருந்தார். மூச்சு விட்ட அசமாத்தம் கூட இருக்கவில்லை; தெரியவில்லை.
இந்த விடயங்களை எல்லாவற்றையும் நேரில் பார்த்த எனது நாடாளுமன்றச் செய்தியாளர் அங்கிருந்தபடி தொலைபேசியில் எனக்கு 'ரன்னிங் கொமண்ட்ரி' கொடுத்தபடி இருந்தார்.
இந்தச் சம்பவத்தை அழகான - சுவாரசியமான - செய்தியாக்கிய நான், நாடாளுமன்றத்துக்குள் பிரேதமாக நடித்த ஈழவேந்தனை முன்னிறுத்தி ஒரு தலைப்பிட்டேன்.
'ஈழவேந்தன் இழவுவேந்தனானார்' என்பதுதான் அந்தத் தலைப்பு.
பலரும் அதை அங்கதமாக - நகைச்சுவையாக - எடுத்துக் கொண்டனர். எனினும் அப்படித் தலைப்பிட்டமை தவறு என்று என் மீது கோபித்துக் கொண்டவர்களும் இல்லாமல் இல்லை.
ஆயினும் ஈழவேந்தன் அந்தத் தலைப்பை நன்கு ரசித்தார். கனகச்சிதம் என்று பின்னர் அவர் மெச்சினார் என்றும் கூட நினைவு உண்டு. அந்த விவரங்களை மறந்துவிட்டேன்.
விடயம் நீண்டு செல்வதால் இன்னொரு சம்பவத்துடன் முடிக்கிறேன்.
இடம், பொருள், ஏவல், தருணம், சூழல் பார்க்காமல் தமது தமிழ் உரிமைக் கொதிப்பை - பேச்சை - எந்த இடத்திலும் கட்டவிழ்த்துக் கொட்டுவார் ஈழவேந்தன். கள்ளமில்லாத - வஞ்சகமில்லாத - மனதினர். நாடாளுமன்றத்தில் அவருக்கு நான்கு, ஐந்து இருக்கைகள் தள்ளி இருக்கும் சக தமிழ் எம்.பிக்களில் யாரேனும் ஒருவர் திடீரென அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுப்பார். எந்த இலக்கத்திலிருந்து, யாரிடம் இருந்து வருகின்றது என்று அவதானிக்கும் திறமை கூட ஈழவேந்தணிடம் இருக்காது. அவர் தொலைபேசி ஒலித்ததும் எடுத்துப் பேசுவார்.
''ஐயா! நாங்கள் 'இன்ன' ஊடகத்திலிருந்து பேசுகிறோம்'' என்று குறிப்பிட்டு, ஒரு விடயத்தை பற்றி கேள்வி எழுப்புவார் அவரின் சக எம்.பி.
பேசுபவர் தமது பக்கத்தில் இருக்கும் தமது சகா என்று தெரியாமல், அவரை ஏதோ ஓர் ஊடகத்தின் பிரதிநிதி என்று கருதி 5 முதல் 10 நிமிடங்களுக்கு நீட்டி முழக்குவார் ஈழவேந்தன. சக எம்.பிக்கள் இதனை ஒரு கிண்டல் வேலையாக அவ்வப்போது செய்வதுண்டு.
ஒரு தடவை கிளிநொச்சியில் சமாதான செயலகத்தில் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை சந்தித்து, தனியாக ஆற அமர இருந்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்த போது இது குறித்துக் குறிப்பிட்டேன். ஈழவேந்தன் பற்றிக் குறை கூறினேன் நான். தமிழ்ச்செல்வன் குறுக்கிட்டார்.
''அண்ணை... அப்படிச் சொல்லாதீர்கள். அவர் ஓர் அறிவுக்கடல். காட்டாறு போன்றவர். காட்டாறு பெருக்கெடுத்தால் அது ஒழுங்கு முறையில் ஓடாது. அதற்கு அணை, கரை எல்லாம் இல்லை. அது தன் பாட்டில் பாயும். நாங்கள்தான் எங்கள் தேவைக்கு ஏற்ப காட்டாற்றுக்கு அணை கட்டி, அதை வழிப்படுத்தி, நமது தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' - என்றார் தமிழ்ச்செல்வன்.
ஈழவேந்தனின் தமிழ்ப் பற்றையும் தமிழ் மீதான அவரின் அபரிமிதமான வெறியையும் காட்டாறு என்று அன்று தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டமை என் மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டது.
இன்று காட்டாறு அடங்கிவிட்டது. நேற்றுத்தான் ஈழவேந்தன் இழவுவேந்தன் ஆனார்.
ஓர் உண்மை ஈழப் பற்றாளனை தமிழர் தேசம் இழந்துவிட்டது...!