Sunday, October 11, 2026

இரகசியம் - பரகசியம் (29.01.2024)


கட்சியின் தலைமைத்துவத்துக்கு சகல தரப்புகளையும் அரவணைத்து, ஐக்கியப்படுத்தி, ஒன்றிணைத்துக் கட்சியை முற்கொண்டு செல்லும் பண்பியல்பு முக்கியமானதுதான்.

அதனை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தேர்வான சிறீதரனிடம் கண்டு, விதந்துரைத்திருந்தேன். எனினும் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

எல்லோரையும் அரவணைக்கும் பெயரில் அல்லது நோக்கத்தில் இழுத்த பக்கமெல்லாம் இழுபடுவதும் சிறந்த தலைமைத்துவமாகி விடாது. எடுக்க வேண்டிய முடிவுகளை - தீர்மானங்களை - எடுக்க வேண்டிய நேரத்தில் 'கட் அண்ட் ரைட்' ஆக எடுத்து முன் நகர்வது முக்கியம். எல்லா விடயங்களிலும் எல்லோரையும் கேட்டு, எல்லோரையும் சமாளித்து, எல்லோரினதும் இணக்கத்துடன் முன்னெடுப்பது என்பதும் சாத்தியப்படாததுதான். அத்தகைய சாத்தியப்பாடற்ற விடயத்துக்காக காலத்தை இழுபட விடுவதும் நழுவல் வலுவல் தலைமை ஆகிவிடும்.

தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவு தொடர்பான விடயத்தை அந்தரத்தில் தொங்க விட்டிருக்கும் சிறீதரனின் முடிவு - அதுவும் மாவை சேனாதிராஜாவுடன் சேர்ந்து, அவர் எடுத்திருக்கும் தீர்மானம் - கட்சித் தலைவருக்கான தேர்தலில் தெரிவாகி ஒரு வாரத்துக்குள் இவரும் ஒரு மாவை சேனாதிராஜாதான் என்ற படிமத்தைத் தந்து நிற்கின்றது.

அதுதான் நிலைமை என்றால் 10 ஆண்டுகள் கடந்தும் அந்தக் கட்சிக்கு இன்னும் மீட்சி இல்லை என்பதுதான் அர்த்தம்.

எது, எப்படியோ கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தாமல் இழுத்தடிப்பதன் மூலம் கட்சித் தலைமையில் தாமே தொடர்வதற்கான சின்னத்தன அரசியலை மாவை சேனாதிராஜா தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார் என்று இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்தேன். இவ்வளவுக்குப் பின்னரும் வெற்றிகரமாக மாநாட்டின் வைபவ ரீதியான அமர்வை தள்ளிப் போட வைத்துத் தமது காரியத்தை - இலக்கை - சாதித்துக் கொண்டிருக்கின்றார் மாவை.

இதற்கிடையில் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிழக்கிலங்கையில் - மட்டக்களப்பில் - ஒரு விடயத்தைச் சிலர் கட்டவிழ்கின்றனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் எம்.பியான சிறீநேசனுக்குக் கிடைக்கவிருந்த கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி., முன்னாள் மேயர் சரவணபவன் மற்றும் சேயோன் போன்றவர்களால் முறியடிக்கப்பட்டது என்ற பிரசாரத்தை சிறீநேசன் - அரியநேத்திரன் - யோகேஸ்வரன் - போன்றோரின் தரப்பு, பரப்பி வருகின்றது என்றும், அதன் மூலம் சாணக்கியனுக்கு எதிரான உள்ளூர் பிரதேசவாதத்தைத் தூண்டி விடுவதற்கு அற்பத்தனமான முயற்சிகள் நடைபெறுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கில் சிலரின் மோசமான அரசியல் செயற்பாடு இது.

நேற்று முன்தினம் காலையில் திருகோணமலையில் நடந்த தமிழரசின் மத்திய குழுக் கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவர் குகதாசனின் பெயரை சுமந்திரன் பிரேரித்த போது, பிரதான தலைமை மேசையில் அமர்ந்திருந்த சிறீதரன் எழுந்து சென்று உறுப்பினர்கள் தரப்பில் முதல் வரிசையில் இருந்த சிறீநேசன், யோகேஸ்வரன், அரியநேத்திரன் போன்றோருடன்தான் ஆலோசனை கலந்தார்.

அதன் பின்னர்தான் சிறீதரன் வந்து அந்த முடிவுக்கு மட்டக்களப்புத் தரப்பினர் இசைக்கின்றனர் என அறிவித்தார். அவர் சாணக்கியனோடு அல்லது சரவணபவனுடன் அல்லது சேயோனோடு அது குறித்து பேசி முடிவெடுக்கவில்லை. அந்த முடிவு சிறீநேசன், யோகேஸ்வரன், அரியநேத்திரன் அணியின் இசைவுடன்தான் முன்னெடுக்கப்பட்டது.

பின்னர் அந்தத் தீர்மானம் மத்திய குழுவில் ஏகமனதாக எடுக்கப்பட்ட போதும், அந்த மூவரும் சேர்ந்து, இணங்கி, உடன்பட்டு அதனை அங்கீகரித்திருந்தனர்.

பொதுக்குழுவில் அவ்விடயம் ஆராயப்பட்டபோது அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்க, அந்தக் கூட்டத்துடன் சேர்ந்து களேபரம் பண்ணினர் இந்த மூவரும்.

பொதுக்குழு விவாதத்தின் போது சிறீநேசனின் போக்கு விமர்சிக்கப்பட்டது.

மேற்படி குகதாசன் பொதுச் செயலாளர் என்பது உட்பட்ட நிர்வாகிகள் பட்டியலை மத்திய குழுவில் ஏற்று, அங்கீகரித்த விட்டு, இப்போது இங்கு பொதுக்குழுவுக்கு வந்து அதற்கு முரணாக - மாறாக - செயற்படுகின்றீர்களே என்று சிறீநேசனிடம் சுட்டிக் காட்டப்பட்ட போது அவர் பகிரங்கமாக அதனை ஒப்புக் கொண்டார்.

''ஆம். நான் அங்கு மத்திய குழுவில் அதனை ஏற்று ஒப்புக்கொண்டேன். அதற்கு இணங்கினேன், இப்போது என் ஆதரவாளர்கள் அதனை எதிர்க்கின்றார்கள். அதனால் அதனை நானும் எதிர்க்கின்றேன்'' - என்று வியாக்கியானம் வேறு கூறினார் சிறீநேசன்.

அவரைத்தான் கட்சியின் பொதுச் செயலாளராக்கி, கட்சியைத் தம்மோடு சேர்ந்து வழிநடத்த அழைக்கின்றார் சிறீதரன் போலும்.

அப்படிக் குகதாசனை செயலாளராக்கும் முடிவுக்கு மத்திய குழுவில் அரியநேத்திரன், சிறீநேசன், யோகேஸ்வரன் அணி ஒன்று சேர்ந்து இணங்கி, அங்கீகாரம் அளித்து, செயற்பட்டு விட்டு, அந்தப் பதவி மட்டக்களப்புக்கு கிடைக்காமல் போனமைக்கு சாணக்கியன் மீது இப்போது பழி போடுவது அரசியல் அபாண்டம்.அபத்தம். அற்பத்தனம்.

இன்னொரு விடயமும் உண்டு.

பொதுச் செயலாளர் பதவி கிழக்குக்கு என்ற போது கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைத் தலைவர் சாணக்கியனின் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. எங்கே அவருக்குப் பொதுச் செயலாளர் பதவியை கொடுத்து விடுவார்களோ என்று பயந்த சிறீநேசன், சாணக்கியனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அங்கு விவரிக்கத் தொடங்கினார் பொதுக்குழுவில்.

''சாணக்கியர் ஒரு சண்டியர் போல செயல்படுகின்றார். அவருக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை'' - என்றெல்லாம் சிறீநேசன் விமர்சித்தார்.

மத்திய குழுவில் தாமும் சேர்ந்து, இணங்கி, எடுத்த முடிவை ஓரிரு மணித்தியாலங்களுக்குள் பொதுக்குழுவில் கடுமையாக எதிர்க்கும் அளவுக்கு அரசியல் முட்டாள்தன முதிர்ச்சி கொண்டவர் அல்லர் சாணக்கியன்.

அடுத்த விடயம் - திருகோணமலை போன்ற பேரினவாதக் கொடூரம் அதிகம் உள்ள தமிழர் தாயகப் பிரதேசங்களுக்கு 'ஃபயர் பிராண்ட்' தலைவர்கள்தான் தேவை என்று என் பத்தியில் நான் தொடர்ந்து பிரஸ்தாபித்து வலியுறுத்தி வருகிறேன்.

அதுவும் பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் என்ற அடாவடி அரசியல்வாதிகளுக்கு மட்டக்களப்பில் ஈடு கொடுக்க யோகேஸ்வரன் ஐயா போன்ற திருநீற்று குறிச் சாமியார் போக்குச் சரிவராது என்பது என் கணக்கு.

துணிச்சலும், சீற்றமும், துள்ளி எழும் வேகப் போக்கும் கொண்ட சாணக்கியன் போன்றோரே அத்தகைய இடங்களுக்கு முக்கியம். அவரது நடவடிக்கை சிறீநேசனின் பார்வையில் சண்டித்தனம் என்றாலும், இன்று தமிழினத்திற்கு அந்தச் சண்டித்தனமே தேவைப்படுகின்றது. வெறுமனே தலைவர் பிரபாகரனின் வாரிசுகள் தாங்கள் என்று வேடமிட்டுக்கொண்டு தொடை நடுங்கி அரசியல் செய்பவர்களால் பயனில்லை.


you may also like