- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (28.2.2025)
-
- by Editor,
- 1 year ago
- in இரகசியம் பரகசியம்
வடக்கில் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தின் கீழ் 9 கட்சிகள் கூட்டாகக் களத்தில் குதிக்கத் தயார் எனச் செய்திகள் வெளியாகி உள்ள போதிலும், அந்தக் கூட்டில் பல கட்சிகளின் பங்களிப்பு இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
ஏற்கனவே ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் அக்கூட்டில் இருந்து மெல்ல நழுவி விட்டதான செய்தி வெளியாகி இருந்தது.
விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் இந்தக் கூட்டில் இருந்து வெளியேறும் அறிவிப்பு எந்நேரமும் வரும் என விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சியை இக்கூட்டில் சேர்ப்பதுதான் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி வெளியேறுவதற்கான காரணம் எனக் கூறப்பட்ட போதிலும் அதிலும் விட வேறு காரணங்கள் இருக்கின்றன என்று உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் வேட்பாளராகத் தமது பெயர் அறிவிக்கப்பட வேண்டும், தங்களுடைய கட்சியினருக்கு யாழ் மாநகர சபையில் பத்து வட்டாரங்களில் போட்டியிட இடம் அளிக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை மேற்படி கூட்டுத் தொடர்பாக இடம்பெற்ற இரண்டு சுற்றுப் பேச்சுக்களின் போதும் கோடிகாட்டி இருக்கிறார் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் இப்பேச்சுக்களில் பங்கு பற்றிய முன்னாள் யாழ் மாநகரசபை மேயர் மணிவண்ணன்.
அது பேச்சில் பங்கு பற்றிய மற்றைய தரப்புகளுக்கு அதிருப்தி தந்ததாகக் கூறப்படுகின்றது.
தவிரவும், தங்கள் கூட்டில் போட்டியிட்டு சில ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு, பின்னர் அதனை வேறு தரப்புகளோடு சேர்ந்து அரசியல் லாபமாக்கிக் கொள்ள மணிவண்ணன் குழுவினர் முயலலாம் என்று கருதிய சங்கு கூட்டணியின் பிரமுகர்கள் சிலர், அதன் காரணமாக மணிவண்ணன் குழுவினர் தமது சங்குக் கூட்டில் போட்டியிடுவதானால் அது தொடர்பாக சங்குக் கூட்டு உறுப்பினர் படிவங்களில் கையெழுத்திட்டு, சங்கு கூட்டு உறுப்பினர்களாகத் தங்களைப் பதிந்து கொண்டே அதன் கீழ் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்தனர் என்றும் தெரிகின்றது.
அப்படி சங்கு கூட்டணி உறுப்புரிமையை ஏற்றுக் கொண்டால், தேர்தலின் பின்னர் கூட்டின் முடிவுக்கு மாறாக பிற தரப்புக்களோடு சேர்ந்து செயல்பட முயற்சித்தால், அத்தகையவரை சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியில் இருந்து சங்குக் கூட்டணி இலகுவாக வெளியேற்ற முடியும் என்று சுட்டிக் காட்டப்படுகின்றது.
இதனால் இந்த நிபந்தனைக்கு இணங்க மணிவண்ணன் குழு மறுப்பதாகத் தெரிகிறது.
அத்தோடு மணிவண்ணன் குழுவுக்கு யாழ்ப்பாண மாநகர மேயர் பதவி என்ற உறுதியை முற்கூட்டியே வழங்கினால், தேர்தலின் பின்னர் சங்குக் கூட்டணி பிற தரப்புகளோடு கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்கும் தீர்மானங்களுக்குப் போவது நெருக்கடிக்கு உள்ளாகலாம் என சங்கு கூட்டணித் தரப்பு கருதுவதாகவும் தெரிகிறது.
இந்தக் காரணங்களினால் சங்குக் கூட்டணியில் மணிவண்ணன் தரப்பினரின் தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ப்பதில் சங்கு கூட்டணி பிரமுகர்களுக்கு நெருக்கடியும், அதே போல மணிவண்ணன் தரப்பினருக்கு அதிருப்தியும் இருப்பதாகத் தெரிகிறது.
இந்தக் காரணங்களினால் மேற்படி கூட்டில் மணிவண்ணன் தரப்பினரின் தமிழ் மக்கள் கூட்டணி இடம்பெறாது என்ற அறிவிப்பை அதன் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் விரைவில் பகிரங்கமாக வெளியிடுவார் எனத் தெரிய வருகிறது.