- by Editor
- 2 weeks ago
இரகசியம் - பரகசியம் (27.2.2025)
-
- by Editor,
- 1 year ago
- in இரகசியம் பரகசியம்
லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் இயக்குநர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க சிறிநாத் அபேவிக்ரம திஸநாயக்க நியமிக்கப்பட்டமையை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றமை குறித்து இரண்டு தினங்களுக்கு முன்னர் என் பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
அதில் ஒரு சிறிய தகவல் தவறு உள்ளது. அதனைத் திருத்திக் கொண்டு, மேலதிக விவரங்களை இன்று தரலாம் என்று நினைக்கிறேன்.
இந்த வழக்குகளை அரசமைப்புக் கவுன்ஸிலில் அங்கத்துவம் பெற்றுள்ள மூன்று சிவில் சமூக பிரதிநிதிகளும் தாக்கல் செய்திருக்கின்றனர் என்று நான் குறிப்பிட்டு இருந்தேன். அது தவறு. அவர்களையும் எதிராளிகளாக குறிப்பிட்டு, வேறு பிரஜைகள் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு முக்கியமான மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தொடுக்கப்பட்டுள்ளது. அவை கவனிக்கத்தக்கவை.
ஒன்று - இந்தப் பதவி, அதாவது லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக் குழுவின் இயக்குநர் நாயகம் பதவி, ஒரு வகையில் நிறைவேற்ற அதிகாரப் பிரயோகம் தொடர்பானது. நீதித்துறையில் - நீதிச் சேவை ஆணைக்குழுவின் கீழ், நீதிபதி பதவியில் இருப்பவர் ஒருவர், மேற்படி பதவியை ஏற்பதற்காக இடையில் நீதிபதிப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அந்தப் பதவியை - லஞ்ச, ஊழல் முறைகேடுகளை விசாரிக்கும் ஆணைக் குழுவின் இயக்குநர் நாயகம் பதவியை - வகித்து விட்டு, பின்னர் மீண்டும் நீதிச் சேவை ஆணை குழுவுக்கு உட்பட்ட நீதித்துறைக்குத் திரும்புவது, நீதித்துறையின் சுயாதீனத்துக்கும் தனித்துவத்துக்கும் இழுக்கௌ ஏற்படுத்தும் என்று சுட்டிக் காட்டப்படுகின்றது. ஏற்கனவே இந்த விடயத்தை உயர் நீதிமன்றம் கவனத்தில் எடுத்து சில உத்தரவுகளை வழங்கி இருப்பது முக்கியமானதாகும்.
அடுத்தது - இந்த இயக்குநர் நாயகம் பதவியை வகிப்பவருக்கு வழக்குத் தொடுநர் (புரொஸிக்கியூஷன்) அனுபவம் அதிகம் வேண்டும். ஆனால் நேரடியாக நீதிபதி பதவிக்கு வந்தவர்கள் ஆரம்பத்தில் வழக்குத் தொடுநர் விவகாரத்தில் அனுபவம் இல்லாவிட்டால், அத்தகைய நீதிபதி பதவியில் இருந்து சென்று, மேற்படி இயக்குநர் நாயகம் பதவிக்கு நியமிக்கப்படுவது பொருத்தமற்றது என்ற நிலைப்பாடும் உயர் நீதிமன்றத்தினால் முன்னர் கவனத்தில் எடுக்கப்பட்ட விடயம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
மூன்றாவது விவகாரம் - முக்கியமானது. மேற்படி பதவிக்கு நீதிபதி ரங்க சிறிநாத் அபேவிக்ரம திஸநாயக்கவும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோனும் போட்டியிட்ட சமயம், அது தொடர்பான அரசமைப்பு கவுன்ஸில் பரிசீலனைகளின் போது தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர் என்ற கருத்து நிலைப்பாடு அரசமைப்பு கவுன்ஸிலின் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அந்த அடிப்படையில் இந்த வழக்கில் வழகாளிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் எதிராளிகளான அரசமைப்பு கவுன்ஸிலின் சிவில் சமூக பிரதிநிதிகள் மூவரும் நிலைப்பாடு எடுப்பார்கள் என்றும் கூறப்படுகின்றது. அவர்கள் சார்பில் முன்னிலையாகும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தமது கட்சிக்காரர்கள் சார்பில் அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பார் என்றே தெரிகின்றது.
அரசமைப்புக் கவுன்ஸிலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் இடம்பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்றக் குழு தலைவர் சிறிதரன் மேற்படி நியமனம் தொடர்பான வாக்கெடுப்பில் ஆளும் தரப்போடு சேர்ந்து வாக்களித்த காரணத்தால் நீதிபதி ரங்க சிறிநாத் அபேவிக்ரம திஸநாயக்க இந்த பதவிக்கு ஐந்துக்கு - நான்கு வாக்குகள் என்ற வித்தியாசத்தில் தேர்வானார் என்பது தெரிந்ததே.
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால் இந்த விடயங்கள் விவரமாக நீதிமன்றத்தில் ஆராயப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விவகாரத்தையொட்டி இன்னொரு விடயமும் கவனிக்கப்பட வேண்டி உள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக இருந்த நிஸங்க பந்துல கரணாரத்ன நெருக்கடி நிலையை அடுத்து நேரத்துடன் ஓய்வில் சென்றமையால் அவரது இடத்துக்கு முகமத் தஹிர் லாவர் மேன்முறையீட்டு நீதிமன்றப் பதில் தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டார். இந்த இரண்டு வார கால பதில் நியமனம் அடுத்த தடவையும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதில் நியமனத்துக்கும் அதற்குப் பின்னரான பதவி நீடிப்பிற்கும் அரசமைப்பு கவுன்ஸில் அனுமதி வழங்கி இருக்கின்றது.
ஆனால் அந்த பதில் நியமனத்திற்கு நாட்டின் பிரதம நீதியரசர் பரிந்துரை வழங்கவில்லை என்று கூறப்படுகின்றது. அத்தகைய சூழ்நிலை நீடித்தால் பிரதம நீதியரசரின் பரிந்துரை பெற்ற வேறு ஒருவரை அப்பதவிக்கு நியமிப்பதே அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் அப்படியல்லாமல் முன்னவருக்கே தொடர்ந்து பதில் நீடிப்பு வழங்கும் முடிவை அரசமைப்பு கவுன்ஸில் அங்கீகரித்து உள்ளது. இப்படி அரசமைப்புக்கு கவுன்ஸில் முடிவெடுப்பதற்கு அந்த கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து தெரிவாகியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதியான சிறிதரன் அரசமைப்பு கவுன்ஸிலின் ஆளும் தரப்பு பிரதிநிதிகளோடு சேர்ந்து ஒத்துழைத்து வாக்களிப்பது ஒரு காரணம் என்று சுட்டிக் காட்டப்பட்டது.