Saturday, October 10, 2026

இரகசியம் - பரகசியம் (01.06.2024)


நேற்று முன்தினம் 'மாலை முரசு' உலகச் செய்திப் பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இராட்சத பலூன்கள் மூலம் தென்கொரியாவில் குப்பைகளைக் கட்டி இறக்கியது வடகொரியா என்று செய்தி இருந்தது.

முதல் கட்டத்தில் பலூனில் குப்பையைக் கட்டி வான் வழியாக அனுப்பி இறக்குகின்றார்கள். அடுத்து என்ன வருமோ என்ற திகில் தென்கொரியாவில் இருந்து பிரதிபலித்தமையை உணர முடிந்தது.

இதை வாசித்த போதும் எனது உணர்வு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எங்களின் நிலைமையை நினைவூட்டியது.

அது 90களின் முற்பகுதி. யாழ்ப்பாணக் குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அரச படைகள் வான் வழியாக வந்து புலிகளின் நிலைகள் என்ற கணக்கில் கண்மூடித்தனமாகக் குண்டு வீசிப் போன மோசமான காலம் அது.

வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி, அலுவலகத்துக்கு அலுவலகம் பதுங்கு குழிகள், பங்கர்கள் தாராளம். குண்டு வீச்சு விமானச் சத்தம் கேட்டதும் மக்கள் அடித்துப் புரண்டு ஓடி, பங்கருக்குள் தஞ்சம் புகும் நினைவழியா நாள்கள் அவை.

எங்கள் அலுவலகத்தின் புறூவ் ரீடர் ஒருவர் விடியும் வேளையில், குண்டு வீச்சு விமானச் சத்தம் கேட்டதும் நித்திரைப் பாயிலிருந்து கண் விழித்துக் கூடப் பார்க்காமல், அரக்கப் பறக்க, சுய சிந்தனையே இல்லாமல், தன்னிலை மறந்து, பங்கரை நோக்கி ஓடிவந்த கோலம் என் கண் முன்னே விரிகின்றத. கொஞ்சம் ஆபாசம் என்பதால் விவரிக்காமல் விட்டு விடுகிறேன். அச்சத்துக்கும் பீதிக்கும் நடுவில் ஒருபுறம் நடுக்கத்துடனும், மறுபுறம் நகைச்சுவையாகவும் கழிந்த விடயங்கள் அவை.

குண்டு வீச்சு விமானங்கள் அப்போது இரண்டு வகை. வேகமாக வந்து இலக்கை நோக்கிக் குத்திப் பதிந்து, குண்டுகளை வீசிச் செல்லும் சுப்பசோனிக் போன்றவை ஒரு ரகம். அவை தாக்குதல் நடத்தும் இலக்குப் பகுதிதான் குண்டு வீச்சில் பெரும் சேதம் அடையும்.

இன்னொன்று - வானத்தில் மிக உயரத்திலிருந்து பெரும் குண்டு பரல்களை உருட்டி விடுவது. அந்த பரல் 4 அல்லது 5 நிமிடங்கள் வானத்தில் விமானத்தின் பயண வேகத்தில் பறந்து, காற்றைக் கிழித்து கொண்டு வந்து விழுந்து வெடிக்கும். பெரிய பரல் குண்டு என்பதால் வெடித்த பிரதேசம் முழுவதும் சின்னாபின்னமாகும். வீடுகள், கட்டடங்கள் தகரும். பெரும் உயிரிழப்புக்கள், நாசங்கள் ஏற்படும்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியை அண்டியிருந்த எமது ஆசிரியர் பீட அலுவலகத்துக்குப் பக்கத்திலும் நள்ளிரவு வேலை அப்படி ஒரு பரல் விழுந்தது. அச்சமயத்தில் விமானச் சத்தம் கேட்டதும் நாங்கள் - பத்திரிகை அலுவலக இரவு நேரப் பணியாளர்கள் எல்லோரும் - பங்கருக்குள் தஞ்சம் புகுந்து நடுக்கத்துடன் பதுங்கி இருந்தோம்.

அந்த பரல் குண்டு காற்றைக் கிழித்துக்கொண்டு வரும் சத்தம் துல்லியமாகக் கேட்டது. எங்கள் பங்கரில் இருந்து ஒரு 30 மீற்றர் தொலைவில் 'டோம்' என்ற பெரும் சத்தத்துடன் அது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அது வெடிக்கவில்ல. எங்கள் அலுவலக எல்லைச் சுவரோடு இருந்த பக்கத்து வீட்டுக் கிணற்றுக் கட்டில் மோதி, சுமார் 30 மீற்றர் தூரம் அது உருண்டு போய்க் கிடந்தது. அது வெடித்திருந்தால் அன்று எங்கள் அலுவலகமும் காலி, எமது பங்கரும் கூட முழுதாகப் புதையுண்டு போயிருக்கலாம்.

அடுத்த நாள் புலிகள் வந்து வெடிக்காத அந்த வெடிகுண்டு பரலை மீட்டு எடுத்துச் செல்வதைக் கண்டேன்.

அதிலிருந்த வெடி மருந்துகளைப் பின்னர் புகையிலை சிப்பங்களுக்குள் பதுக்கி, கொழும்புக்குக் கடத்தி, அங்கு கொண்டு போய், அந்த வெடிமருந்தில்தான் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேயரத்தினவை குண்டுத் தாக்குதல் மூலம் புலிகள் கொன்றார்கள் என்றும், அது கொள்கை ரீதியான ஒரு நடவடிக்கை என்றும் புலிகளின் மூத்த பிரமுகர் ஒருவர் எனக்கு பின்னர் சொன்னார்.

அதுவல்ல இன்று கூற வரும் விடயம். இப்படி வெடிகுண்டு பரல் உருட்டும் விமானம் சீன தயாரிப்பு ரகம். 'வை - 8' என்று அதற்குப் பெயர். அதே சமயம் 'வை- 12' ரக சிறிய விமானங்களும் இருந்தன. இந்த ரக விமானங்களை அவற்றின் பெயர்களை வைத்து செய்தி எழுதுவது - அழைப்பது - வாசகர்களுக்கு புரியாது என்று நாம் குழம்பிக் கொண்டிருந்த காலம் அது.

இந்த விமானம் முதல் பரல் உருட்டியமை பற்றிய செய்தி விவரம் உண்டு. ஆரம்பத்தில் இந்த விமானத்திலிருந்து உருட்டப்பட்ட பிளாஸ்டிக் பரல்கள் நகர மத்தியில் விழுந்து சிதறின. அவற்றில் வெடிகுண்டுகளோ, வெடிப் பொருள்களோ இருக்கவில்லை. ஒரே கழிவு நாற்றம். கழிவுப் பொருள்களை ஏற்றி வந்து நகரில் விமானப்படையினர் பரல் மூலம் கொட்டுகிறார்கள் என்று ஆரம்பத்தில் செய்தி எழுதிய நினைவும் உண்டு. கொட்டப்பட்ட கழிவில் மனித மலமும் இருந்ததாகக் கூடப் பேசிக் கொண்டார்கள்.

இந்த வை-8 ரக விமானம், வண்டு ரீங்காரம் இடுவது போல உறுமிக் கொண்டுதான் வரும். அதனாலும், அது கொட்டிய கழிவு பற்றிய பேச்சினாலும் அந்த விமானத்துக்கு 'பீ வண்டு' என்று மக்கள் பெயரிட்டுப் பேசிக்கொண்டார்கள். ஆனால் அந்தப் பெயரை நாம் பத்திரிகையில் பயன்படுத்த முடியாது. ஆகையினால் வேறு வழி தேடி தேடினோம்.

அது சீனத் தயாரிப்பு விமானம். மிகப்பெரியது. பின்பக்கத்தில் கதவு திறக்க அதற்குள் ஒரு வான் போன்ற வாகனத்தை கூட ஏற்றிக்கொண்டு செல்ல முடியும். பிற்காலத்தில் இராணுவம் யாழ்.குடா நாட்டைக் கைப்பற்றிய பின்னர் அதில்தான் ஆரம்பத்தில் பலாலி - இரத்மலானை பயணிகள் விமான சேவை நடந்தது. பக்கவாட்டில் பலகைத் தட்டை நீள சீற்றாக அடித்திருப்பார்கள். அதையொட்டி நீண்ட கம்பியில் பஸ்ஸில் கைப்பிடி தொங்குவது போல கைபிடிகள் தொங்கும். விமானத்தின் பக்கச் சுவரோடு சாய்ந்து அமர்ந்தபடி, அந்தக் கைப்பிடியைப் பற்றியவாறுதான் விமானப் பயணம். விமானம் ஏறும் போது பின் பக்கமாகவும், இறங்கும்போது முன் பக்கமாகவும்பயணிகள் ஒருவரோடு ஒருவர் முண்டியபடி விமான சரிவுக் கேற்ப அந்த நீள தட்டு சீற்றில் இழுபடுவர். விமானம் ஓடு பாதையில் ஓடத் தொடங்கிய பின்னர் தான் பின்பக்கக் கதவை மூடுவார்கள். அது போல விமானம் இறங்கியதும் அது ஓடு பாதையில் ஓடி நிற்க முன்னரே பின் கதவைத் திறந்து விடுவார்கள். ஓடுபாதை தெரியும். அது பிற்காலத்தில் அதில் பயணம் செய்த அனுபவம்.

அது குடாநாட்டில் எங்களுக்கு வெடிகுண்டு பரல் வீசிய காலத்துக்கு வருவோம். நானும் எங்கள் ஆசிரியர் கானமயிலநாதனும் கதைத்து அந்த விமானத்திற்கு ஒரு பெயர் சூட்டினோம். அது சீனத் தயாரிப்பு விமானம். தேர் போல பெரியது. அதனால் அதற்குச் 'சீனச் சகடை' என்று நாமாவளி செய்தோம். அந்த விமானத்தை 'சீனச் சகடை விமானம்' என்று பெயர் குறிப்பிட்டு எழுதத் தொடங்கியதும், அதுவே குடா நாட்டு மக்களின் வாயில் நுழைந்து கொண்டது. 'பீ வண்டு' என்ற பெயரை மக்கள் மறந்து போனார்கள். 'சகடை' என்றே அதைக் குறிப்பிடத் தொடங்கினர். அந்த நாள் வாசகர்களுக்கு இந்தப் பெயர் நன்கு நினைவிலிருக்கும்.

அந்தச் சீனச் சகடையில் இருந்து உருட்டி விடப்படும் பரல்களின் வேகம், அவை சென்றடையும் இலக்கு, தூரம் போன்றவற்றை விமானத்தில் பறந்தவாறே கணக்கிடுவதற்காகவே ஆரம்பத்தில் கழிவுகள் அடங்கிய பரல்களை நகரின் மீது உருட்டி, விளையாடி, கணக்கிட்டார்கள் விமான படையினர் என்பது பின்னர்தான் தெரிய வந்தது.

அந்தக் கணக்கீடுகளின் அடிப்படையில் தான் பின்னர் பேரழிவுதரும் பாரிய பரல் வெடிகுண்டுகள் சீனச் சகடையிலிருந்து உருட்டி விடப்பட்டன.

ஒரு தடவை அது பலாலிலிருந்து புறப்பட்டு நகரப் பக்கம் வந்தால், மூன்று, நான்கு வெடிகுண்டு பரல்களையாவது உருட்டி விட்டுத்தான் போகும். அவை காற்றில் அசைந்து வருவதைப் பார்த்து குலை நடுங்கும் மக்களின் அவலம் இப்போது நினைத்தாலும் அடிவயிற்றை பிசைகின்றது.

தென்கொரியா மக்களே..! கவனம் இப்போது பரீட்சார்த்த முயற்சியில் குப்பைகள் வருகின்றன. இவற்றிற்குப் பின்னர் அடுத்தது வெடிகுண்டோ தெரியவில்லை. ஆகவே கவனம்.

அனுபவத்தில் கூறும் எச்சரிக்கை இது...!

you may also like