Thursday, October 8, 2026

இரகசியம் - பரகசியம் (27.02.2024)


தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபராக நியமிக்கும் அரசமைப்புக் கவுன்ஸிலின் நாடகத்தில் சபாநாயகரின் செயற்பாடு குறித்து இன்று எட்டாம் பக்கத்தில் நமது கருத்து என்ற ஆசிரியர் தலையங்கப் பகுதியில் விலாவாரியாக விளக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்தை வழங்கும் அரசமைப்பு கவுன்ஸில் நாடகம் நேற்று நடத்தி முடிக்கப்பட்டமைக்கு ஒரு காரணம் உண்டு.

தேசபந்து தென்னக்கோன் நேற்று வரை பதில் பொலிஸ்மா அதிபர் பதவியிலேயே இருந்தார். அந்தப் பதவியில் அவரை நியமித்தமையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட இருக்கையில், அதனால் விபரீதம் ஏதும் நேரம் முன்னர், அவருக்கு அந்தப் பதவியை முழுமையாக வழங்கி, அதனை உறுதிப்படுத்துவதற்காகவே அரசமைப்புக் கவுன்ஸிலை நேற்றுக் கூட்டி, அந்த நாடகத்தை அரங்கேற்றினர் என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

உயர்நீதிமன்றம் என்றதும் ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது.

உயர்நீதிமன்றத்தின் முக்கிய நீதியரசர் ஒருவர் வரும் முதலாம் திகதி வெள்ளியன்று ஓய்வு பெறுகின்றார். அவர் விசாரித்து முடித்துத் தீர்ப்பு வழங்க வேண்டிய பல வழக்குகள் நிலுவையில் நிற்கின்றன. அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் அந்த வழக்குகளின் தீர்ப்புகளை அவர் வழங்காவிட்டால் அந்த வழக்குகள் எல்லாம் மீண்டும் திரும்பவும் வேறு நீதியரசர்கள் ஆயத்தின் முன்னால் ஆரம்பத்தில் இருந்து விசாரணை செய்ய வேண்டி நேரும் என சட்ட வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

நிகழ்நிலைக் காப்புச் சட்ட விவகாரத்தில் சபாநாயகரின் நடத்தையை ஒட்டி அவருக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்பதா என்ற விடயத்தை விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்த நீதியரசர் இவர்தான். ஓய்வு பெற முன்னர் அந்த வழக்கு விவகாரத்தில் தமது முடிவை அறிவித்து விட்டு அவர் செல்வாரா அல்லது அவர் ஓய்வு பெற்ற பின்னர், புதிய நீதியரசர் ஒருவரை ஆயத்தில் சேர்த்து, மீண்டும் ஆரம்பத்தில் இருந்து வழக்கைப் புதிதாக விசாரணை செய்வதா என்பது தெரியவில்லை.

ரிஷாத் பதியுதீனின் இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து முஷாரப் எம்.பி. வெளியேற்றப்பட்டமையை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முழுதாக விசாரித்த பிரதான நீதியரசர் அவர்தான். இத்தகைய வழக்குகளில் இரண்டு மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது சட்ட ஏற்பாடு. சுமார் ஒருவருடம் தாண்டியும் தீர்ப்பை நீதியரசர் இன்னும் வழங்கவில்லை. ரிஷாத் பதியுதீனின் கட்சி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையாகி வாதாடியிருந்தார். விசாரணை நடந்து ஒரு வருடம் தாண்டியும் தீர்ப்பை வழங்காத நீதியரசர், இப்போது அம்போ என்று விடயத்தை அப்படியே போட்டு விட்டுச் சேவையிலிருந்து கையை வீசியபடி, ஓய்வு பெற்றுச் சென்றால் வழக்கை முதலாவது அடியிலிருந்து திரும்பவும் ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்த வேண்டியிருக்கும்.

இந்த வழக்கு விசாரணை முடிந்த பின்னர்தான், அமைச்சர் நஸீர் அகமட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பான உயர்நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. அதில் தீர்ப்புக் கூறி, நஸீர் அகமட் பதவி இழந்து, ஏழெட்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் அதற்கு முன்னர் முடிவுற்ற முஷாரப் தொடர்பான வழக்கு விசாரணைத் தீர்ப்பு வெளியாகவில்லை. நீதியரசர்கள் தீர்ப்பை வைத்து அடைகாத்துக் கொண்டிருக்கின்றார்களோ என்னவோ....!

இதைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை. நீதியரசர்களின் இத்தகைய போக்குக் குறித்து தட்டிக் கேட்கக் கூடாதா, வழக்கு போட முடியாதா என்று சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரிடம் எரிச்சலுடன் கேட்டேன். அவர் சிரித்தார். அந்த வழக்கையும் பத்து வருடங்களாக இழுத்தடித்து வழக்குப் போட்டவரைச் சாகடித்து விடுவார்கள் என்றார் அந்தச் சட்டத்தரணி.

இலங்கையின் சட்டத்துறை எங்கு செல்கின்றது? ஆண்டவனுக்குதான் வெளிச்சம்...!

வழக்கு என்றதும் தமிழரசுக் கட்சியின் உள்வீட்டுச் சர்ச்சை விவகாரம் நினைவுக்கு வந்தது.

வழக்கு விவகாரங்கள் மேலும் இறுகும் விடயம் இன்றும் கூட நடக்கலாம்.

வழக்கை சமரசமாக தீர்க்கும் முயற்சி எடுக்கப்பட்டாலும், அது வெற்றி பெறுமா என்பதுதான் கேள்வி.

வழக்கில் வழக்காளிகள் ஒரு பக்கம். எதிராளிகள் - அதாவது கட்சி பிரமுகர்கள் - பலர். அவர்கள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. அப்படி அவர்களை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வந்து, வழக்கை ஒற்றுமையாக அணுகும் முயற்சியும் எதிராளிகள் பக்கத்தில் - குறிப்பாகக் கட்சி நிர்வாகிகள் பக்கத்தில் - இல்லை. எதிராளிகள் பல தரப்பினராக பிரிந்திருக்கும் போது வழக்கில் இணக்கத்திற்குச் சுமுகமாக வருவதற்கான வாய்ப்புகளும் குறைவுதான்.

வழக்கின் எதிராளிகளான கட்சியும் அதன் பிரமுகர்களும், தங்களுக்குள் ஒற்றுமை பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதற்கான கலந்துரையாடலைக் கூட இன்னும் முன்னெடுக்கவில்லை. நாளை மறுதினம் வழக்கின் முதல் தவணை. அப்படி இருக்கையில் வழக்கில் சமூகத் தீர்வு என்பது முயல் கொம்புதான். அங்கு வழக்காளிக்கும் எதிராளிகளுக்கும் இடையிலான வாதப் பிரதிவாதம் ஒருபுறமிருக்க, எதிராளிகள் தரப்பில் ஒற்றுமைப்பட்ட நிலைப்பாடு எடுக்கப்படாமல் பிய்ச்சல் பிடுங்கல் சந்தி சிரிக்க அரங்கேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை....! 

you may also like