- by Editor
- 8 months ago
இரகசியம் - பரகசியம் (26.01.2026)
-
- by Editor,
- 8 months ago
- in இரகசியம் பரகசியம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினர் பதவி தொடர்பாகக் கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானத்திற்கு அவர் இணங்க மறுத்தமை பற்றி நேற்று என் பத்தியில் குறிப்பிட்டு இருந்தேன். அதில் கடைசியாக என் குறிப்பு பின்வருமாறு இருந்தது:-
'கூட்டத்தில் பங்கு பற்றிய சிறிதரன் கட்சியின் அரசியல் குழுவுக்கு அதிகாரம் எதுவும் இல்லை என்றும், அத்தகைய குழு தன்னை அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேறுமாறு பணிக்கும் அதிகாரமும் கொண்டது அல்ல என்றும் கடுமையாக வாதிட்டார்.
கூட்டத்தில் பங்கு பற்றிய இன்னொரு உறுப்பினர் சிறிதரன் அவ்வாறு வாதிட்டார் என்பதை உறுதிப்படுத்தினார். அந்த வாதத்தின் அடிப்படையிலேயே அவருக்கு பதிலடி நடவடிக்கையை - தீர்மானத்தை - அரசியல் குழு எடுத்து அதை நடைமுறைப்படுத்தும் என்று கோடி காட்டினார் அந்த உறுப்பினர்.'
- என்று நேற்று இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
சிறிதரன் முன்னெடுத்த வாதத்தின் அடிப்படையிலேயே அவருக்கு இப்போது பதில் நடவடிக்கை அரசியல் குழுவால் எடுக்கப்பட்டிருக்கின்றது.
கட்சியின் அரசியல் குழுவிடமிருந்து தாம் அரசமைப்புக் கவுன்ஸிலுக்கான உறுப்பினர் நியமனத்தைப் பெறவில்லை என்ற அடிப்படையில், தம்மை அந்தப் பதவியில் இருந்து வெளியேறக் கோரும் அதிகாரம் அரசியல் குழுவுக்கு இல்லை என்று சிறிதரன் சுட்டிக் காட்டிய அதே பாணியில், 'ஆம், ஆம் அந்த அதிகாரம் எங்களுக்கு இல்லை. ஆனால் உங்களுக்குத் தந்த நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியை நாங்கள் அதே போன்று திருப்பி எடுக்கலாம்' என்று காட்டி இருக்கிறார்கள் கட்சியின் அரசியல் குழுவினர்.
இந்த விடயத்தை - அரசியல் குழுவின் தீர்மானத்தை - சிறிதரனைக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அகற்றும் முடிவை - உடனடியாக அறிவிப்பதில்லை என்றும், அவருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கி, அதற்குள் அவர் அந்தப் பதவியை விட்டு விலகாமல் விட்டால் அதன் பின்னர் அந்த நடவடிக்கையை எடுப்பது என்றும்தான் அரசியல் குழுவில் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அந்தக் காரணத்தினால்தான் 'தீர்மானகரமான - தீர்க்கமான - முடிவு எடுத்திருக்கிறோம். உரிய சமயத்தில் அதை நடைமுறைப்படுத்துவோம்' -என்று நேற்று முன்தினம் இரவு சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். சிறிதரனைக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கும் அறிவிப்பை வெளியிடுவதில்லை, அவருக்கான ஒரு வார கால அவகாசம் முடிந்த பின்னர் அவர் அரசமைப்பு கவுன்ஸில் உறுப்பினர் பதவியை அந்தக் காலத்துக்குள் ராஜினாமாச் செய்யாவிட்டால், அதற்குப் பின்னர் அந்த நடவடிக்கையை அறிவிப்பது என்றுதான் தலைவரும் செயலாளரும் தங்களுக்குள் தீர்மானித்துக் கொண்டனர் எனத் தெரிகிறது.
ஆயினும், கூட்டத்தில் பங்கு பற்றிய யாரோ மூலம் (அது சிறிதரனாகக் கூட இருக்கலாம்) விடயம் 'லீக்' ஆகி, பல மட்டங்களில் பேசப்பட்டு, நேற்று மதியம் மட்டக்களப்பில் சிறிதரனிடம் ஊடகவியலாளர்கள் நேரடியாக - பட்டவர்த்தனமாக - நோண்டிய போது, வேற வழி இன்றித் தீர்மானத்தைப் போட்டுடைத்து இருக்கின்றார் சுமந்திரன்.
எந்த நெருக்கடி வந்தாலும் அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யமாட்டேன் என்று சிறிதரன் நேற்று முன்தினம் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் தெளிவாகவும், உறுதியாகவும், இறுதியாகவும், திரும்பத் திரும்பவும் கூறிய காரணத்தினால், ஒரு வாரம் காலம் கொடுத்தும் அவர் அந்தப் பதவியை ராஜினாமாச் செய்யவே மாட்டார், கடைசியில் அவரை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து வெளியேற்றுவதுதான் ஒரே வழி என்று தீர்மானித்து, விடயத்தை முற்கூட்டியே வெளிப்படுத்தி இருப்பார் போலும் சுமந்திரன்.
ஆயினும், அது தெரியாமல், ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதை மனதில் வைத்துக் கொண்டு, இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என்று தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று ஊடகவியலாளர்களிடம் கூறியிருக்கிறார். அதனால்தான் கட்சியின் தலைவரும் செயலாளரும் இந்த விடயத்தில் முரண்பாடான நிலைப்பாடு என்ற தொனியில் சில ஊடகங்கள் செய்தி வெளியிடும் நிலைமை ஏற்பட்டது.
கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் தெரிவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில்தானே நடக்க வேண்டும்? அதை அரசியல் குழு எப்படி தீர்மானிப்பது? சம்பந்தனின் காலத்தில் தெரிவான எம்.பிக்கள்தானே தாங்கள் ஒன்று கூடி சம்பந்தனை நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவு செய்தார்கள்? - என்று ஒரு வாதம் சிறிதரனுக்கு ஆதரவான தரப்புகளினால் முன்வைக்கப்படுகின்றது.
அது உண்மைதான். சம்பந்தன் தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்கு தெரிவான எம்.பிக்களின் குழுவுக்கு பல தடவைகள் தலைமை தாங்கி இருக்கிறார். அவர்கள் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டாலும், தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வசித்த நான்கு கட்சிகளின் எம்.பிக்கள். அதனால்தான் அச்சமயத்தில் நாடாளுமன்ற குழுவின் தலைவரை பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த கூட்டமைப்பு எம்.பிக்கள் ஒன்று சேர்ந்து தெரிவு செய்தார்கள். ஆயினும், அன்றும் அந்தத் தெரிவு பற்றிய அறிவிப்பை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அவர்கள் அனைவரும் போட்டியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர்தான் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
ஆனால், இம்முறை தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சி உறுப்பினர்கள் எட்டு பேரும் தமிழரசு கட்சியில் போட்டியிட்ட அதே கட்சியின் வேட்பாளர்கள். அதனால்தான் கட்சியின் உயர் பீடமான அரசியல் குழு கூடி நாடாளுமன்றக் குழுத் தலைவர், நாடாளுமன்ற கொரடா போன்ற பதவிகளைத் தானே தெரிவு செய்து, கட்சிச் செயலாளர் மூலம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவித்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களை அணி சேர்த்து, அரசியல் குழுவின் முடிவுக்கு எதிராக சிறிதரன் தரப்பு தனி ஆவர்த்தனம் வாசிக்க முற்பட்டாலும், கட்சி ரீதியாக அந்த எம்.பிக்கள் நெருக்கடிகளை, சிக்கல்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாக இருக்கும். அரசியல் குழுவின் தீர்மானத்தை, அது, நாடாளுமன்றக்குழுத் தலைவராகத் தேர்வு செய்யும் நாடாளுமன்றக் குழு உறுப்பினரும் கொரடாவும் பின்பற்றும் சூழலில், ஒரு சில எம்.பிக்களை அணி சேர்த்து, தனியாவர்த்தனம் வாசிப்பது பயனுள்ளதாக அமையாது என்றே தோன்றுகின்றது.
அரசியல் குழுவின் தீர்மானத்தை இப்போதைய நிலையில் மாற்றி அமைப்பதாயின், மத்திய குழு மூலம் அதை செய்வதற்கு சிறிதரன் தரப்பு முயற்சி எடுக்க முடியும். ஆயினும் மத்திய குழுவிலும் சிறிதரனின் அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினர் செயற்பாடு தொடர்பில் காட்டமான எதிர்ப்புணர்வு பரவலாக நிலவுகின்றமையால், இன்றைய நிலையில் கட்சிக்குள் சிறிதரன் தனது கையை உடனடியாக வலிமைப்படுத்துவது சாத்தியமானதாகத் தெரியவில்லை.
கட்சியின் வழக்கை விரைந்து முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஓர் இணக்கப்பாட்டுக்கு அவர் சென்று, அதன் பின்னர் கட்சியின் அடுத்த மாநாட்டை கூட்டுவதற்கான ஒழுங்கு ஏற்பாடுகளை முன்னெடுத்து, அந்த மாநாடு மூலம் தன்னுடைய கைகளைப் பலப்படுத்த முடியுமா என்று சிறிதரன் தரப்பு ஆராய்வதுதான் இன்றைய நிலையில் கட்சிக்குள் இருந்து கொண்டு அவர் செய்யக்கூடிய சாத்தியமான - அவருக்கு பலன்கள் தரக்கூடிய - வழிவகையாக இருக்கும். என்ன செய்யப் போகின்றார் என்பதைப் பார்த்திருப்போம்.
இதேசமயம் நேற்று முன்தினம் நடந்த அரசியல் குழுவில் சுவாரஸ்யமான ஒரு சம்பவம் நடைபெற்றது.
சிறிதரனுக்கும் ஏனையோருக்கும் இடையில் வாக்குவாதம் நிகழ்ந்த சமயத்தில் சுமந்திரன் ஒரு கேள்வி எழுப்பினார்.
''சாமர சம்பத், தயாசிறி ஜெயசேகர என்று உங்களுக்கு எதிராகக் கருத்து வெளியிட்ட பல தரப்பினரையும் கண்டித்தும், மறுத்தும், எதிர்த்தும் பல தளங்களிலும் கருத்து வெளியிட்டு வருகிறீர்கள். ஆனால் நீங்கள் கணக்காய்வாளர் நாயகம் தெரிவில் இராணுவ அதிகாரிக்கு ஆதரவாக அரசமைப்புக் கவுன்ஸிலில் செயல்பட்டீர்கள் என்பதை தம்மிடம் ஒப்புக் கொண்டீர்கள் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே முதலில் பகிரங்கமாகக் கூறியிருந்தார். அவருக்கு எதிராக மாத்திரம் ஒன்றும் சொல்லாமல் நீங்கள் அமைதி காக்கின்றீர்களே?'' - என்று சுமந்திரன் கேட்டார்.
அதற்கு சீற்றத்துடன் பதில் அளித்த சிறிதரன் ''கஜேந்திரகுமார் எனக்கு என்ன பொருட்டா? அவரை நான் கணக்கெடுக்கவில்லை!'' - என்ற பாணியில் பதில் கூறியிருக்கிறார்.
இதே சமயம் அப்படித் தாம் இராணுவத் தரப்புக்கு ஆதரவாக வாக்களித்தார் என்பதை சிறிதரன் தம்மிடமும் தனிப்பட்ட முறையில் ஒப்புக் கொண்டார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் இதற்கு முன்னர் வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் கூறியிருந்தார். அதன் பின்னரே அரசமைப்பு கவுன்ஸிலில் இருந்து ராஜினாமாச் செய்யும்படியான பணிப்புரையை சிறிதரனுக்கு வழங்கும் முடிவை அரசியல் குழு எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
கடைசியாக ஒரு கொசுறுச் செய்தி. கட்சியின் முழு அரசியல் குழுவுமே சிறிதரனுக்கு எதிராக அணி சேர்ந்துள்ள பின்புலத்தில் சிறிதரனுக்கான ஆதரவுத்தளத்தை வெளிக்காட்டும் நோக்கோடு கிளிநொச்சியில் சுமார் ஆயிரம் பேருக்கு குறையாத இளைஞர்களை ஒன்று திரட்டி, இலங்கைத் தமிழரசு கட்சியின் கிளிநொச்சி இளைஞர் அணி மாநாட்டைக் கூட்டி, அந்த இளைஞர்கள் சிறிதரனுக்கு பின்னால் பக்கபலமாக நிற்கின்றார்கள் என்பதை நிரூபிப்பதற்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
+++++++++++++++++++++++++
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் சி.மு. இராசமாணிக்கத்தின் 113 ஆவது ஜனன தின நிகழ்வு நேற்று மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சி.மு. இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. அதையொட்டியும் சில சுவாரஸிமான தகவல்கள் உண்டு. அவை பற்றி நாளை பார்ப்போம்.