Saturday, October 10, 2026

எல் நினோ வலுப்பெற வாய்ப்பு - நீர் முகாமைத்துவத்திற்கு விசேட கவனம்


பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது ஆரம்ப கட்டத்தில் பலவீனமாக காணப்பட்டாலும், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அது வலுப்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய காலநிலை முன்னறிவிப்புகளின் அடிப்படையில், இந்த எல் நினோ நிலை காரணமாக இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் காலநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களம் முன்னதாக வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டு நவம்பர் முதல் 2027 ஜனவரி வரையான காலப்பகுதியில் எல் நினோ நிலை தீவிரமடைவதற்கு 63 சதவீத வாய்ப்புகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA), இந்த நிலை எதிர்பார்த்த அளவில் தீவிரமடையாமல் இருப்பதற்கும் மூன்றில் ஒரு பங்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

எல் நினோ தாக்கம் காரணமாக தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை குறைவடையக்கூடும் என சுட்டிக்காட்டிய மெரில் மெண்டிஸ், எனினும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்கால மழைவீழ்ச்சி நிலைமைகளை கருத்தில் கொண்டு, நீர் வளங்களை மிகவும் கவனமாக முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, விவசாய நடவடிக்கைகள், மின்சார உற்பத்தி மற்றும் குடிநீர் தேவைகளுக்காக நீரை சிக்கனமாகவும் திட்டமிட்ட முறையிலும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, எல் நினோ தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைத்து, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விசேட வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்திகே தெரிவித்துள்ளார்.

மேலும், எல் நினோ காரணமாக ஏற்படக்கூடிய சவால்களை குறைக்கும் வகையில், எதிர்வரும் பெரும் போக விவசாய நடவடிக்கைகளை உரிய காலத்திற்கு முன்னதாக ஆரம்பிக்குமாறு விவசாயிகளிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

you may also like