Sunday, October 11, 2026

இரகசியம் - பரகசியம் (25.3.2025)


நேற்று 'மாலை முரசு' முன்பக்கத்தில் தலைப்புக்கு மேல் ஒரு பெட்டிச் செய்தி. 'இலங்கை தொடர்பான பிரிட்டனின் முக்கிய முடிவு அல்லது அறிவிப்பு இன்றிரவு (அதாவது நேற்று இரவு) வெளியாகும்' என்று அந்தச் செய்தி பிரசுரமாகி இருந்தது.

செய்தி வெளியாகி ஓரிரு மணித்தியாலங்களின் பின்னர் மூன்று, நான்கு வாசக நேயர்கள் தொலைபேசி அழைப்பு எடுத்தார்கள்.

'நீங்கள் குறிப்பிட்டபடி இரவாகிவிட்டது. பிரிட்டன் பக்கத்திலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. உங்களுக்கு வந்ததா?' - என்ற சாரப்பட விசாரிப்பு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

'நிச்சயம் அறிவிப்பு வரும், ஆவலுடன் பார்த்திருங்கள்' என்றேன்.

ஏழு மணி அளவில் நண்பர் ஒருவர் அழைப்பு எடுத்தார். கருணா மற்றும் முன்னாள் படைத் தளபதிகள் மூவர் மீது பிரிட்டன் பயணத்தடை அறிவித்திருக்கின்றது என்ற செய்தியைச் சொன்னார்.

'எதிர்பார்த்த விடயம்தான்' என்று நான் கூறினேன்.

'முதலிலேயே - முற்கூட்டியே - உங்களுக்குத் தெரிந்திருந்தால் இந்த விடயங்களை உங்கள் செய்தியில் சற்றுக் கோடி காட்டி இருக்கலாமே?' - என்று அவர் கேட்டார்.

நான் சிரித்தேன்.

'செய்தி மூலங்கள் முக்கியமானவை. அவை பொன் முட்டையிடும் வாத்துக்கள். அவற்றை கழுத்தைத் திருகிக் கொன்று விடக்கூடாது. ஒவ்வொரு முட்டையாக பெறுவதற்குக் காத்திருக்க வேண்டும். அதுபோல இந்தச் செய்தி விடயங்களை - தகவல்களை - நேரடியாக தந்த தரப்புகளுக்கு எங்கள் செய்திகள் மூலம் சிக்கல் வேண்டித் தந்து விடக்கூடாது. ஆகவே விடயம் தெரிந்திருந்தும் அமைதி காத்தேன்.' - என்றேன் நான்.

யார் அந்தச் செய்தி மூலம் என்று கேட்டார்.

'செய்தி மூலத்தைக் காட்டிக் கொடுக்க முடியாது.' என்று நான் சிரித்துக் கொண்டு கூறினேன்.

அவர் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அழைப்பு எடுத்தார்.

'நான் உங்கள் செய்தி மூலத்தைக் கண்டுபிடித்து விட்டேன்!' - என்றார் அவர்.

'அப்படியா? நல்லது. யார் அவர்?' என்று கேட்டேன்.

'நேற்று மாலை உங்கள் மாலை முரசு பத்திரிகை வெளியாகும் சமயத்திற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர்தான் பிரிட்டனில் இருந்து வந்திருக்கின்ற மிக உயர்ந்த மட்ட ராஜதந்திரி பென் முல்லரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் சந்தித்திருக்கின்றார். அந்த விடயத்தை முகப்புத்தகத்தில் அவதானித்தேன். அவர் மூலம்தான் உங்களுக்கு இந்தத் தடை உத்தரவு பற்றிய அறிவிப்பு நேரத்துடன் வந்திருக்கும்' என்றார் அவர்.

நான் ஓமென்றும் பதில் சொல்லவில்லை. இல்லை என்றும் பதில் சொல்லவில்லை. சிரித்து நாசூசக்காகச் சமாளித்துத் தொலைபேசி அழைப்பைத் துண்டித்துக் கொண்டேன்.

சில செய்திகள், தகவல்கள் நேரத்துடன் தெரிய வந்தாலும், செய்தி மூலங்களை நெருக்கடியில் மாட்டி வைக்காமல் இருப்பதற்காக நாங்கள் அமைதி பேணவோ நாசூக்காகக் கோடி காட்டுவதுடன் ஒதுங்விடவோ வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த விடயத்தில் இரண்டு அம்சங்களை மேலதிக ஊகிப்பாக முன்வைத்து இன்றைய பத்தியை முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஒன்று - இத்தகைய தடை உத்தரவு பிரிட்டனுடன் அமைந்து விடப் போவதில்லை. பொறுப்புக் கூறலை நிலைநாட்டவும், சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சட்ட விசாரணைகளை ஆரம்பித்துத் தொடரவும் கொழும்பு மேலும் தாமதிக்குமானால், இத்தகைய தடை உத்தரவுகள் பிரிகேடியர்கள், கேர்ணல்கள் மட்டம் வரை விஸ்தரிக்கப்படலாம். மேலும் பல நாடுகளினால் முன்னெடுக்கப்படலாம்.

அதுவும் பிரிட்டன், கனடா, அமெரிக்கா தாண்டி வேறு சில நாடுகளினாலும் இத்தகைய தடைகள் அறிவிக்கப்படலாம்.

அடுத்தது - துணைப் படையாக இயங்கிய குழுக்களில் கருணா தடை விதிக்கப்பட்ட முதலாவது நபர். அந்தத் தடை அவரோடு அடங்காது. பக்கத்தில் அரசியல் செய்யும் இன்னும் பலர் பக்கமும் அந்தத் தடை பாயக்கூடிய ஆபத்து உண்டு.

ஏற்கனவே முன்னைய ராஜபக்‌ஷ அரசு பொய்யான கடவுச்சீட்டுடன், இலங்கை வெளிவகார அமைச்சின் குறிப்புத் துண்டுடன் கடிதம் அனுப்பி, கருணாவுக்கு வேறு பெயரில் பிரிட்டிஷ் விஸா பெற்றுக் கொடுத்து பிரிட்டனுக்கு அனுப்பி வைத்திருந்தது கொழும்பு. அங்கு குட்டு அம்பலமாகி, ஆறு மாதத்திற்கு மேல் சிறையிலிருந்து விட்டு திரும்பியவர் கருணா.

ஏற்கனவே கிழக்கு இலங்கையில் சில கொலைகள் தொடர்பாக நீண்ட காலம் விளக்க மறியலில் இருந்த இன்னொரு துணைப்படை தலைவர் இத்தகைய தடை பட்டியலில் வருவதற்கு காத்திருக்கின்றார் என்றும் ஒரு தகவல் உண்டு.

அதடை நடைமுறைக்கு வர முன்னர் அவர் மேற்கு நாடுகளை ஒரு தடவை சுற்றிப் பார்த்துவிட்டு வருவது அவருக்கு நல்லது. காலம் தாமதித்தால் அந்த வாய்ப்பே அவருக்கு இல்லாமல் போகலாம்.

you may also like