Friday, October 9, 2026

இரகசியம் - பரகசியம் (25.08.2024)


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரமுகர் அரியநேத்திரன் கட்சியின் அனுமதியின்றி வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்டமைப்பின் சார்பில் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களம் இறங்கியமை தொடர்பில் அவரிடம் விளக்கம் கேட்டிருக்கின்றது தமிழரசுக் கட்சி.

அவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையின் ஆரம்பம் அது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் -

அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து, பிரசார முஸ்தீபுகளை மேற்கொள்கின்றார் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன்.

இதேசமயம் 'தமிழ்ப் பொது வேட்பாளர் மூலம் தமிழர்களின் சட்ட பூர்வமான அபிலாசைகளை சர்வதேசத்திற்கு முன் கொண்டு செல்வோம்' என்ற ஏற்பாட்டில் வரும் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறும் கருத்தரங்கில் பிரதான கருத்துரை வழங்குவதற்காக தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களான சிறிதரனும், சார்ள்ஸ் நிர்மலநாதனும் லண்டன் செல்கின்றனர்.

அரியநேத்திரனிடம் விளக்கம் கேட்டிருக்கும் கட்சி சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் விடயத்தில் என்ன செய்யப் போகின்றது?

பொறுத்திருந்து பார்ப்போம்.

***

தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

ஆனால் இந்தத் தேர்தல் முடிவடையும் வரையாவது பொதுக் கட்டமைப்பு கட்டுக்குலையாமல் தாக்குப் பிடிக்குமா என்ற கேள்வி பல வட்டாரங்களிலும் எழாமல் இல்லை.

பொதுக் கட்டமைப்பில் இடம்பெறும் ஐந்து கட்சிகளின் கூட்டமைப்பான ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி இன்று காலை வவுனியாவில் கூடுகின்றது.

இன்று மாலையில் தமிழ் பொதுக் கட்டமைப்பின் கூட்டம் நடைபெறலாம் என்று தெரிகின்றது.

பொதுக் கட்டமைப்பில் தொடர்ந்து நீடித்துப் பிரசாரத்தில் ஈடுபடுவதா என்பது குறித்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் கட்சிகள் இந்த வாரத்தில் முடிவெடுக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தீர்க்கமான முடிவு ஒன்று விரைவில் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் அனைவருடனும் தொடர்ந்து பேச வேண்டும் என்று கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் சில எடுத்துள்ள நிலைப்பாடு, தேவைப்பட்டால் பொது வேட்பாளர் ஒழுங்கை இடையில் 'கட் ' பண்ணி விடும் எதிர்பார்ப்புக்கான ஆயத்தமா என்று சில விடயம் அறிந்த வட்டாரங்கள் கேட்கின்றன.

ஓரிரு வாரங்களில் விவகாரம் தெளிவான கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கலாம். 

you may also like