Saturday, October 10, 2026

இரகசியம் - பரகசியம் (24.07.2024)


அன்பர் ஒருவர் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் அனுப்பி இருந்தார். கவிதை வடிவத்தில் இருந்தது.

அதை வாசித்து முடிப்பதற்கு இடையில் அவரின் தொலைபேசி அழைப்பு வந்தது.

''எல்லா இடங்களிலும் புதிதாகத் திறக்கப்படும் மதுபானச் சாலைகளுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்கள் நடைபெறுகின்றன. எம்.பிமாருக்கு வாகன பெர்மிட் வழங்க முடியாத அரசு, அதில் அவர்கள் உழைக்கும் பணத்துக்கு பதிலாக மதுபான சாலை பெர்மிட்டுகளை நாய்க்கு எலும்புத் துண்டு வீசுவது போல வீசி இருக்கின்றது. ஆளாளுக்கு குறைந்தது இரண்டு. அரசின் கணக்கு இரண்டு படி நாலு கோடி. ஆனால் ஒரு பெர்மிட்டை எட்டு கோடிக்கு விற்ற அசகாய சூரர்களும் இருக்கின்றார்கள். அரசு வாகன பெர்மிட் கொடுத்தால் அரசுக்கு நேரடியாகப் பாதிப்பு. அந்நிய செலாவணி இழப்பு. மதுபான சாலை பெர்மிட்டுகளை விற்று மக்களிடம் இருந்தே நேரடியாகச் சூறையாடிக் கொள்ளுங்கள் என்று எம்பிக்களுக்கு மாற்று வழி சமைத்திருக்கின்றது போலும் அரசுத் தலைமை.

''அனைத்து இடங்களிலும் நடக்கின்றது என்று பார்த்தால் கிளிநொச்சி மாவட்டத்திலும் தாராளம். யாழ். மாவட்ட எம்.பிக்கள், முன்னாள் எம்.பி. என்று எல்லோரினதும் கைவரிசை. சின்ன ஜமீன் வாய் மூடி அமைதி. பேணுவதேன்? - என்று கேள்வி எழுப்பினார் அவர்.

இனி அவரின் வாட்ஸ் அப் செய்தி:-

* கரடிப்போக்கு சந்தியில் எதிரும் புதிருமாக இரண்டு பார்கள்.

* பாரதி ஹொட்டேலுக்கு முன்னால் ஒன்று.

* கனகபுரம் விதியில் சந்தைக்கு முன்னால் ஒன்று.

* பரந்தன் சந்தியில் இரண்டு.

* பூநநகரியில் ஒன்று.

* இதைவிட இரண்டு றெஸ்ரோறண்ட்கள். கரடிப்போக்கு சந்தியில் ஒன்று. பரந்தன் சந்தியில் ஒன்று.

மது விற்பனை தாராளம். முழங்காவிலிலும் திறக்கவுள்ளனர் என்று தகவல்.

- இப்படி அமைந்தது அந்தச் செய்தி.

இன்னொரு விடயத்தையும் அவர் சொன்னார்.

''மன்னாரில் அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிராக உள்ளூர் மக்கள் நெருப்பு எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் எம்.பிமார் அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு காட்ட கிட்டவும் வருகின்றார்கள் இல்லை. இந்த எதிர்ப்பு நடவடிக்கைப் பக்கம் போகாதீர்கள் என்று அரசு அதிகாரிகளுக்கு வேறு நமது எம்.பிக்கள் அழுத்தம் கொடுக்கின்றனர் என்றும் தெரிகின்றது.

நமது எம்.பி. ஒருவர் மட்டும் சூரிய மின்சாரம் மூலம் 250 கிலோ வாட்ஸ் மின்சாரம் விநியோகிப்பதற்கான திட்டத்திற்கு யூனிட் 42 ரூபா என்ற உச்ச விலையில் அரச ஒப்பந்த அனுமதியை பெற்றுக் கொண்டிருக்கிறார். அந்தத் திட்ட இணைப்பு வேலைகள் மற்றும் பௌதிக இயக்கத்துக்கு மின்சார சபையின் இலவச சேவையும் ஒப்பந்தத்தில் உள்ளடக்கம். அதானிக்கு வழங்குவதில் அள்ளித் தெளிப்பது போல ஒரு பகுதி நமது எம்.பிக்கும் கிடைக்கும் போது அவர்கள் எப்படி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சேர்ந்து வருவார்கள்?'' - என்று கேள்வி எழுப்பினார் அவர்.

இன்றைய இரண்டு தகவல்களுக்கும் அவரே மூல இடம். சூத்திரதாரி. நான் வெறும் பிரதிபலிப்பாளன் மட்டுமே.

ரணிலின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மீண்டதோ, என்னவோ, நமது மக்கள் பிரதிநிதிகள் காட்டில் மட்டும் நல்ல மழை. ஒருபுறம் தேசியம் பற்றிய பேச்சு. மற்றப்புறம் உழைப்பும் கொட்டுகிறது என்றால் சும்மாவா...? 

you may also like