- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (23.06.2024)
'மலை விழுங்கி மகாதேவன்கள்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். தோலிருக்கச் சுளை விழுங்கும் எமகாதகப் பேர்வழிகள் அவர்கள். அத்தகையோர் பற்றிய ஒரு தகவல் இது:-
இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவும் இந்தியப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்படுவதும், நீதிமன்ற உத்தரவில் அவற்றில் சில விடுவிக்கப்படுவதும், எஞ்சியவை அரச உடமையாக்கப்பட்டு, பின்னர் ஏலத்தில் விடப்படுவதும் வழமை.
இருந்த போதும் இரண்டு ஆண்டுகளிற்கு முன்பு இவ்வாறு ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, ஏலத்திற்காகக் கூடிய போதுதான், அப்படி ஏலம் விடப்பட வேண்டிய இந்திய மீனவர்களின் பல படகுகள் அவை கட்டப்பட்டிருந்த இடங்களிலிருந்து மாயமாய்ப் போயிருந்தமை தெரிய வந்தது எனபதெல்லாம் பழைய கதை.
இப்போதைய புதுக் கதை என்னவென்றால் மன்னாரில் நல்ல நிலையில், கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த - ஒவ்வொன்றும் கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான - நான்கு இந்திய இழுவைப் படகுகள் கடலில் மூழ்கி விட்டன எனக் கடற்படையினரால் நீதிமன்றத்திற்கு 'கணக்கு' விடப்பட்டிருப்பதுதான். மன்னிக்கவும், 'கணக்கு' காட்டப்பட்டிருப்பதுதான்.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் மன்னார் மாவட்டத்தை ஒட்டிக் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட படகுகள் மன்னார் கடற்படை முகாம்களில் உள்ள இறங்கு துறைகளை ஒட்டியே தரித்து வைக்கப்படுகின்றன.
இவ்வாறு கடற்கரையை அண்டி நிறுத்தப்பட்டிருந்த இந்திய இழுவைப் படகுகளில் நான்கே கடலில் மூழ்கிவிட்டன எனத் தலைமன்னார் கடற்படையினரால் மன்னார் நீதிமன்றிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
தாழ்வுப்பாடு மற்றும் தலைமன்னார் பகுதிகளில் தரித்து நின்ற தலா இரு படகுகள் வீதம் நான்கு படகுகளே மூழ்கின என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இவற்றில் ஒர் படகு மட்டும் வழக்கு விசாரணை முடிந்து அரசுடைமையாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
எஞ்சிய மூன்று படகுகள் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் தற்போதும் நீடிக்கின்றன.
இவ்வாறு வழக்கு இடம்பெறும் படகுகள் மூன்றும் கடலில் மூழ்கிவிட்டன என்று கடற்படை கையை விரிக்கின்றமையினால் அவை தொடர்பான வழக்கை எவ்வாறு தொடர்ந்து நடத்துவது என மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தலையைப் பிய்க்கின்றனர்.
அந்த ட்றோலர் படகுகள் ஒவ்வொன்றும் பதினைந்து அடிக்கு மேல் உயரம் கொண்டவை. கரையை அண்டிக் கட்டியிருந்தவை. கடலில் மூழ்கினாலும் சிறு பகுதியாவது கடலுக்குள் தெரியும்.
இதன் காரணமாக ட்றோலர் படகுகள் கடலில் மூழ்கியிருப்பின் அவற்றின் ஒளிப்படங்களையாவது மன்றில் சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் நீரியல்த் திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளின் கோரிக்கைக்கு அடுத்த தவணை வழக்கின்போது கடற்படையினர் என்ன பதில் அளிக்கின்றனர் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.
பல கோடி ரூபா பெறுமதியான படகுகள் 'கால் முளைத்து நகர்ந்த பின்னர்' கடலில் அவற்றின் தடம் தேடுவது அர்த்தமற்றது என்கின்றன விடயமறிந்த தரப்புகள்.
இந்த விடயம் மீண்டும் இலங்கை, இந்திய மீனவர்களின் பேசு பொருளாக மாறும் என்பதில் மட்டும் ஐயம் இல்லை.