- by Editor
- 2 weeks ago
இரகசியம் - பரகசியம் (21.01.2024)
-
- by Editor,
- 2 years ago
- in இரகசியம் பரகசியம்
எல்லாம் எதிர்பார்த்தபடி - திட்டமிட்டபடி - நடந்தேறினால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் யார் என்ற விடயம் இன்று பிற்பகலில் தெரிய வந்து விடும்.
இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று திருகோணமலையில் நடைபெறும் என்று நேற்று இப்பத்தியில் குறிப்பிட்ருந்தேன். ஆனால் கூட்டம் நடக்கவில்லை. இறுதி நேரத்தில் அது ரத்தானது என்பதை நேற்றுக் காலையில்தான் அறிந்து கொண்டேன்.
கட்சியின் பதில் பொதுச் செயலாளர் டாக்டர் சத்தியலிங்கம் சுகவீனம் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார் என்று தெரிகின்றது. அதனால் நேற்றைய மத்திய குழு கூட்டத்திற்கு உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை. அழைப்பு அவர்களுக்கு அனுப்பப்படவில்லை.
டாக்டர் சத்தியலிங்கம் இன்றும் கட்சியின் பொதுக்குழுவின் கூட்டத்தில் தலைவர் தேர்தலின் போது பிரசன்னமாகி இருக்க மாட்டார்.
ஏற்கனவே இந்தத் தேர்தலை திருகோணமலையில் நடத்துவதற்கு மாவட்டந்தோறும் ஒருவர் வீதம் எட்டு மாவட்டங்களுக்கும் பிரமுகர்களை தெரிந்து ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கான பொறுப்பு கட்சியின் பதில் பொதுச் செயலாளரிடம் வழங்கப்பட்டும் இருந்தது.
அதன்படி மாவட்டம் தோறும் தலா ஓர் உறுப்பினரைத் தேர்வு செய்து அவர்கள் மூலம் இன்றைய தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார் கட்சியின் பதில் பொதுச் செயலாளர்.
அந்த எண்மரின் விவரம் வருமாறு:-
* யாழ்ப்பாணம் - கனகசபாபதி
* கிளிநொச்சி - குருகுலராஜா
* முல்லைத்தீவு - சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா
* மன்னார் - பரஞ்சோதி
* வவுனியா - கருணாநிதி
* மட்டக்களப்பு - சரவணபவன்
* அம்பாறை - கோடீஸ்வரன்
* திருகோணமலை - குகதாசன்
இவர்களே இன்றைய தேர்தலை நடத்தும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அத்தோடு இன்றைய தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானோர் என 337 பேர் அடங்கிய பட்டியலையும் குழுவிடம் கையளித்துள்ளார் பதில் பொதுச் செயலாளர் டாக்டர் சத்தியலிங்கம்.
அதில் கட்சியின் கிளைகள் சார்பாகப் பொதுக்குழுவில் பங்கு பெறும் பிரதிநிதிகளின் பெயர்களும்இ ஏற்கனவே மத்திய குழுவில் இடம் பெற்றிருக்கும் 47 உறுப்பினர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சில பெயர்கள் அந்தப் பட்டியலில் இரண்டு இடங்களில் இருப்பதால் அவையவற்றில் ஒன்று நீக்கப்படும் எனத் தெரிகிறது.
அத்தகைய சூழலில் இன்றைய தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானோர் எண்ணிக்கை 330இலும் சற்று குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களே தமிழரசின் தலைவிதியை இன்று நிர்ணயம் செய்யவுள்ளனர்.