- by Editor
- 7 months ago
இரகசியம் - பரகசியம் (19.6.2025)
-
- by Editor,
- 1 year ago
- in இரகசியம் பரகசியம்
சுட்ட மண் ஒட்டாது. இது நமக்குத் தெரிந்ததுதான்.
ஆயினும் அரசியல் என்றால் அதுவும் ஒட்டும் போலவே தோன்றுகின்றது.
சைக்கிள் கட்சியில் இருந்து முரண்பட்டு மோதி பிரிந்தவர்கள் மணிவண்ணன் அணியினர். இப்போது அவர்களின் செல்வாக்கில்தான் மான் கட்சி இருக்கின்றது.
அதனால் சைக்கிளும் மானும் சுட்ட மண் போல என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் அரசியலில் பதவி ஆசை என்றதும் சுட்ட மண்ணும் ஒட்டுகிறது. சைக்கிளும் மானும் பதவிக்காக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
காரைநகரில் ஆட்சி அதிகாரத்தைப் பங்கிடுவது தொடர்பான உடன்படிக்கையில் மான் கட்சியினரும் சைக்கிள் கட்சியினரும் இணக்கம் கண்டு ஒப்பமிட்டு இருக்கின்றனர்.
சைக்கிள் கட்சியில் இருப்பவர்கள் ஏற்கனவே கொள்கை ரீதியாக ஒன்று பட்டுவிட்டவர்கள் என்று தங்களைப் பீற்றிக் கொள்பவர்கள்.
அவர்களோடு இந்த ஆட்சிக்கான உடன்படிக்கையில் மான் கட்சியில் ஒப்பமிட்ட வரதராஜன் பார்த்திபனோடு நேற்று இரவு உரையாடினேன்.
''நாங்கள் கொள்கை - கோட்பாட்டுக்காக உடன்படிக்கை செய்யவில்லை. அப்படிச் செய்தோம் என்று கூறப்போவதுமில்லை. ஆட்சி அதிகாரத்தை ஒன்றுபட்டு எடுப்பது, அதை எங்களுக்குள் பங்கிட்டு கொள்வதற்குதான். அதற்கான உடன்படிக்கையையே காரைநகரில் சைக்கிள் கட்சியில் வென்றவர்களுடன் செய்திருக்கிறோம்.'' - என்று பட்டவர்த்தனமாகவும் வெளிப்படையாகவும் கூறினார் அவர்.
கொள்கைக் கோட்பாட்டு அரசியல் பற்றி பல தரப்புகளுக்கும் பாடம் எடுத்தவர்கள், இப்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் - கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதனால் பதவி கதிரை ஆசையைப் பகிர்ந்து கொள்வதற்கும் - உடன்பாடு செய்கிறார்கள். சமரசம் செய்கின்றார்கள்.
கொள்கை - கோட்பாடு ரீதியாக சுட்டமண் போல ஒட்ட முடியாதவர்கள், பதவி ஆசை என்றதும் பச்சை மண் ஆகிவிட்டார்கள். எல்லாம் பதவி சுகம் செய்கின்ற இச்சைகள்தான்.
ழூ ழூ ழூ
வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் திருகுதாளம் பண்ணிய தமிழரசு கட்சி பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக இரண்டு மணி நேரத்துக்குள் ஒழுக்காற்று நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. ஒரு வாரத்தில் அவர் பிரதேச சபை உறுப்பினர் பதவியை இழப்பது தொடர்பான கடிதம் கட்சியின் செயலாளரினால் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்குப் பறக்கும் என்று தெரிகிறது.
ஏற்கனவே கட்சிக்குள் காங்கேசன்துறை தொகுதிக் கிளையில் குழப்பம் பண்ணிக் கொண்டிருந்தவர் இவர் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
நேற்றைய தெரிவில் மீண்டும் வலி. வடக்கு பிரதேச சபைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சுகிர்தன்தான் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிக் கிளையின் செயலாளராகவும் நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றி வருபவர். தமது மகனை அரசியலில் முன் தள்ளுவதற்கு அங்கு சுகிர்தன் இடைஞ்சலாக இருக்கின்றார் என்று கருதிய கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா, தாம் காங்கேசந்துறைத் தொகுதிக் கிளைத் தலைவர் என்ற முறையில் தொகுதி கிளையின் செயலாளரான சுகிர்தனுக்கு தெரியாமல், சத்தம் சந்ததடியின்றி ஒரு கூட்டத்தை நடத்தி, அதில் இப்போது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கும் பொன்னம்பலம் இராசேந்திரனைத் தொகுதி கிளைச் செயலாளராகவும், தந்தை செல்வநாயகத்தின் பேரனான இளங்கோவை தொகுதிக் கிளைப் பிரதி தலைவராகவும் அறிவித்தார்.
ஆயினும் தமிழரசுக் கட்சி பதிவுகளின்படியும், கட்சி நிர்வாகத்தின் தற்போதைய அங்கீகரிப்பின்படியும் சுகிர்தனே அந்தத் தொகுதிக் கிளை செயலாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தொகுதிக் கிளைத் தலைவரான மாவை சேனாதிராஜாவின் மறைவு காரணமாகத் தொகுதிக் கிளைத் தலைவர் பதவி இப்போதும் வெற்றிடமாகவே உள்ளது.
ஆயினும், மாவை சேனாதிராஜாவின் மறைவுக்குப் பின்னர் தொகுதி கிளையின் பிரதி தலைவர் என்ற முறையில் தாமே இப்போது தலைவர் எனக் கருதி, தம்மை முன்னிறுத்தி இளங்கோவும், செயலாளராக பொன்னம்பலம் இராசேந்திரனும் அவ்வப்போது சில கடிதங்களை கட்சி பிரமுகர்களுக்கு அனுப்பி கொண்டிருந்தார்கள். ஆனாலும் அவை கவனத்தில் எடுக்கப்படவில்லை.
எது, எப்படியாயினும், பொன்னம்பலம் இராசேந்திரனுக்கு இந்த முறை தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆயினும், அவர் கிடைத்த அந்தப் பதவியை தனது குசும்புத்தனத்தால் கோட்டை விடப் போகின்றார் என்றே தோன்றுகின்றது.