- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (19.11.2024)
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து தாம் ராஜினாமாச் செய்து விட்டார் எனத் தெரிவித்து, அதனால் கட்சித் தலைமைப் பதவியை ஏற்கும்படி சிறிதரனைக் கோரி, மாவை சேனாதிராஜா எழுதிய கடிதம் தொடர்பில், தொடர் நடவடிக்கைகளை எடுக்கத் தமிழரசுக் கட்சி தீர்மானித்திருக்கின்றது.
இது பற்றிய முடிவை கட்சியின் பொதுச் செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் தெரிவித்திருக்கின்றார்.
தேர்தல் சமயத்தில் அப்படி தலைமைப் பதவியை விட்டு விலகுகிறார் என மாவை சேனாதிராஜா தம்பாட்டில் அறிவித்தமை கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாகத் தெரிவித்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் மாவை சேனாதிராஜாவைக் கடுமையாக வைதனர். ஆயினும் அவை எவற்றுக்கும் உருப்படியான பதில் எதையும் வழங்காமல் மாவை சேனாதிராஜா அக்கூட்டத்தில் சிவனே என்று இருந்தார் எனத் தெரிகின்றது.
தலைமைப் பதவியை ராஜினாமாச் செய்து விட்டார் என அறிவித்திருந்த அவர், நேற்று முன்தினம் மேற்படி அரசியல் குழு தேசியப் பட்டியல் எம்.பி. குறித்துத் தீர்மானிப்பதற்காகக் கூடியதும், கூட்டத்தின் தலைவர் பதவிக் கதிரையில் தாமே வந்து அமர்ந்து கொண்டார்.
மேற்படி ராஜினாமா கடிதத்தை மாவை சேனாதிராஜா சிறிதரனுக்கு முகவரியிட்ட அதேசமயம் செயலாளர் சத்தியலிங்கத்திற்கும் அதன் பிரதியைக் குறிப்பிட்டு அனுப்பி வைத்திருந்தார் என்று கூறப்படுகின்றது.
தலைவரின் ராஜினாமாக் கடிதம் முறையாக செயலாளருக்கு முகவரியிட்டு அனுப்பப்படவில்லை. ஆயினும் தேர்தல் காலத்தில் அந்தக் கடிதப் பிரதி கிடைக்கப்பெற்றதால் அது தொடர்பில் தாம் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விடயங்களைத் தள்ளிப் போட்டார் என நேற்று முன்தினம் அரசியல் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த செயலாளர் சத்தியலிங்கம், இப்போது தேர்தல் முடிந்து விட்டமையால் அந்தக் கடிதம் தொடர்பில் தொடர் நடவடிக்கைகளை தாம் எடுக்கவிருக்கிறார் எனக் கூட்டத்தில் அறிவித்தார்.
அதன்படி, இந்த கடிதத்தின் பிரகாரம் தலைவர் பதவியில் நீங்கள் இருக்கிறீர்களா அல்லது இல்லையா என்பதை தெளிவு படுத்துங்கள் என்று பதிவுத் தபால் மூலம் மாவை சேனாதிராஜாவிடம் செயலாளர் விளக்கம் கோருவார் எனத் தெரிகிறது. அத்தகைய கடிதம் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டதாகவும் ஒரு தகவல் தெரிவித்தது.
தலைவர் பதவியில் இருந்து கொண்டு அப்பதவிக்குரிய தகைமை நிலையை இழந்த ஒருவராக மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சிக்குள் பார்க்கப்படுகிறார். கடந்த பத்துப் பன்னிரண்டு வருடங்களாக கட்சியின் தலைவராக இருந்து, தமது சுயநலனை முன்னிறுத்திய செயற்பாடுகளினால் தமிழர்கள் மத்தியில் அந்தக் கட்சியின் தனித்துவத்தைக் கெடுத்ததைத் தவிர, அவர் வேறு எதுவும் உருப்படியாகச் செய்யவில்லை எனக் கட்சியின் பல வட்டாரங்களும் குறை கூறி வருகின்றமை தெரிந்ததே.
***
காஸ் சிலிண்டர் கூட்டணியின் தேசியப் பட்டியல் எம்.பியாக ரவி கருணாநாயக்கா நியமிக்கப்பட்ட விடயம் கட்சிக் கூட்டணிக்குள் பெரும் குத்துவெட்டாகக் களேபரத்தை ஏற்படுத்தி இருப்பதாக அறிய வருகிறது. கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் இந்த நியமனம் ஒருதலைப் பட்சமாக முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது. இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
***
தேசிய மக்கள் சக்தி அரசு தமது நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்து சுமுகமாகக் கொண்டு நடத்துவதற்கு ஆரம்பத்தில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கப் போகின்றது என்பது திண்ணம். நாடாளுமன்ற சரித்திரத்தில் முதல் தடவையாக தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்ற தனி கட்சி என்ற அந்தஸ்தை எட்டியிருக்கின்றது. அது மாத்திரமல்ல. இந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர் புது முகங்கள். இது நாடாளுமன்ற சரித்திரத்தில் ஒரு முக்கிய விடயம்.. அதிலும் ஆளும் தரப்பில் பெரும்பாலானோர் புதிய முகங்கள்.
தேசிய மக்கள் சக்தி தரப்பில் தெளிவான 159 உறுப்பினர்களின் 150 பேர் வரை புதியவர்கள். நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள், நடைமுறைகள், விதிமுறைகள், ஒழுங்குகள், செயற்பாடுகள் பற்றி முன் அனுபவம் இல்லாதவர்கள். இத்துணை எண்ணிக்கையில் அனுபவம் இல்லாதவர்களை வைத்துக் கொண்டு நாடாளுமன்ற நாளாந்தக் கடமைகளை முன்னெடுப்பது மிக சிரமமான விடயம்.
இதனால் இவர்களுக்கு நாடாளுமன்ற அமர்வுக்கு முந்திய பயிற்சிகளை - நாடாளுமன்ற விவகாரங்களை எப்படி அணுகி எதிர்கொள்வது என்பதை விளக்கும் விதத்தில் - மூன்று நாள் வகுப்பெடுக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை நேற்று முதல் நாடாளுமன்றத் தொகுதியில் இடம் பெறும் அதே சமயம், புதிதாகத் தெரிவான எம்.பிக்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளை விளக்கி வகுப்பெடுக்கும் விரிவுரைகளும் மூன்று நாள்களுக்கு தொடர்ந்து நடைபெற இருக்கின்றன. முன்பின் நாடாளுமன்றத்தையே கண்டறியாத 150 க்கும் அதிகமான புதிய முகங்களை வைத்துக்கொண்டு அரசை ஆரம்பத்தில் வழி நடத்துவது நெருக்கடியான விடயமாகத்தான் இருக்கும். நாட்டின் பொருளாதார நெருக்கடி, அரசியல் நிர்வாகம் போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள முன்னர், இத்துணை எண்ணிக்கை புதிய உறுப்பினர்களை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தை ஒழுங்கு முறையாக நடத்துவதில் ஆளும்தரப்பு நெருக்கடிகளை எதிர்கொள்ளப் போகின்றது என்பது தவிர்க்க முடியாத சிக்கல்தான்...!