Sunday, October 4, 2026

இரகசியம் - பரகசியம் (18.3.2025)


இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பான முக்கிய வழக்கு ஒன்று இன்று யாழ். மாவட்ட நீதிமன்றுக்கு வருகின்றது.

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிவமோகன் தாக்கல் செய்த மனுவே இன்று நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுக்கப்பட இருக்கின்றது.

கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து மாவை சேனாதிராஜா விடுவிக்கப்படுகின்றமைக்கு எதிராக சிவமோகன் முதலில் ஒரு வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். அது தொடர்பில் அவர் கோரிய இடைக்கால தடை உத்தரவை நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்து வழங்க முன்னரே, மாவை சேனாதிராஜா தலைமைப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அந்தப் பதவிக்கு பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் நியமிக்கப்பட்டு விட்டார்.

அதனால் தான் தொடுத்த அந்த வழக்கை கை வாங்கினார் சிவமோகன்.

ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் கடைசி வாரத்தில் மாவை சேனாதிராஜாவை தலைமை பதவியில் இருந்து இறக்கும் முடிவை எடுத்த கட்சியின் மத்திய குழு, அதே கூட்டத்தில் மருத்துவர் சிவமோகனைக் கட்சியிலிருந்து இடை நிறுத்தவும் முடிவு எடுத்திருந்தது.

அதற்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு கோரி சிவமோகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, வழக்காளி தரப்பு பிரசன்னத்துடன் மட்டும் பரிசீலித்த யாழ் மாவட்ட நீதிமன்றம் அந்த இடைக்காலத் தடை உத்தரவை வழங்க மறுத்துவிட்டது. அத்தகைய உத்தரவு வழங்குவதற்கான நியாயமோ, முகாந்திரமோ வழக்கின் முகத்தோற்றத்தில் கூட இல்லை என்று யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. அதே சமயம் அந்த வழக்குத் தொடர்பில் எதிராளிகளுக்கு அழைப்பாணை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் கட்சியின் பதில் தலைவரான சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த மருத்துவர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளரான குலநாயகம் ஆகியோரோடு நான்காவது எதிராளியாக சிறிதரன் எம்.பியின் பெயரை வழக்காளி சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்குக்கு இப்போதுதான் எதிராளிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. இன்னமுமே எதிராளிகள் இந்த வழக்குத் தொடர்பான தங்கள் ஆட்சேபனையையோ, பிரதிபலிப்புகளையோ காட்டவில்லை. ஆனால் நான்காவது எதிராளியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சிறிதரன் மட்டும் வழக்காளியின் வழக்கு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முழு விடயங்களையும் தாம் அப்படியே ஏற்றுக் கொள்கின்றார் எனவும், வழக்காளி கோரும் சகல நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கும் தமது தரப்பு பதில் மனுவையே விழுந்தடித்து நீதிமன்றில் தாக்கல் செய்து விட்டார்.

எந்த அடிப்படையில் இந்த வழக்கில் சிறிதரன் எதிராளியாகச் சேர்க்கப்பட்டார் என்ற பிரச்சினை வழக்கில் எழக் கூடிய சாத்தியம் ஒரு புறம் இருக்கையில், கட்சி ரீதியாக சிவமோகனை இடைநிறுத்தும் முடிவை கட்சியின் மத்திய குழு எடுக்க, அதற்கு எதிரான சிவமோகனின் வழக்கு நிலைப்பாடு அனைத்தையும் அப்படியே ஏற்று அங்கீகரித்து, அவர் சார்பான நிலைப்பாட்டை சிறிதரன் எடுத்திருக்கின்றமை கட்சி மத்திய குழுவில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

மத்திய குழுவின் அடுத்த கூட்டத்தில் - பெரும்பாலும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுற்ற பின்னர் கட்சியின் மத்திய குழு கூடும் போது - இந்த வழக்கு விடயத்தில் சிறிதரனின் நிலைப்பாடு பிய்த்து உதறப்படும் என எதிர்பார்க்கலாம்.

எனினும், அதற்கு முன்னர் இன்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படும் போது, முதல் மூன்று எதிராளிகள் சார்பிலும் ஆஜராக இருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த வழக்கில் நான்காவது எதிராளியாக சிறிதரன் சேர்க்கப்பட்டமையில் தொடங்கி, அவரது பதில்மனுத் தாக்கல் செய்யப்பட்டமை, அதில் உள்ள விடயங்கள் வரையில் சட்ட ரீதியாக பிய்த்துதற வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

வழக்காளி தரப்பு சட்டத்தரணி குருபரனும், சிறிதரனின் சட்டத்தரணியும் அதனை எப்படிச் சமாளிப்பர் என்பதும் சுவாரஸியமாக இருக்கும்.

இன்று வழக்கு பரிசீலனைக்கு எடுக்கப்படும் போது பல திருப்புமுனை விடயங்கள் வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இருந்து பார்ப்போம்.

you may also like