Sunday, October 4, 2026

கால்வாய்க்குள் வீழ்ந்த பெண் குழந்தை மரணம்


புத்தளம் - மதுரங்குளியில் கால்வாய்க்குள் வீழ்ந்த ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று புத்தளம் பகுதிக்குப் பொறுப்பன திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

குழந்தையின் வீட்டுக்கு அருகிலுள்ள கால்வாய்க்குள் வீழ்ந்தே குழந்தை உயிரிழந்துள்ளது.

நேற்றுப் பிற்பகல் குழந்தையின் தாய் மற்றும் அம்மம்மா ஆகியோர் வீட்டு வளவைத் துப்புரவு செய்துகொண்டிருந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சந்தர்ப்பத்திலேயே அந்தக் குழந்தை வீட்டுக்கு அருகிலுள்ள கால்வாய்க்குச் சென்றுள்ளது எனக் கூறப்படுகின்றது.

தமது வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டில் சேகரித்த குப்பைகளைக் கொட்டுவதற்காகக் கால்வாய்க்கு அருகே வந்த போதே குழந்தை நீரில் மிதந்துகொண்டிருப்பதைத் தாய் அவதானித்துள்ளார்.

இதையடுத்து, அயலவர்களின் உதவியுடன் அந்தக் குழந்தை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எனினும், அந்தக் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நீரில் மூழ்கியதில் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகக் குழந்தை இறந்துள்ளது என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

you may also like