- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (18.08.2024)
இந்தத் தேர்தல் களேபரங்களுக்கு மத்தியில் முக்கிய நிகழ்வு ஒன்றை நம்மில் பலர் மறந்து விட்டனர்.
அது ஜெனிவாவில் நடக்கவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அடுத்த கூட்டத் தொடராகும்.
வரும் செப்டம்பரில் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் அதே சமயத்தில்தான் ஜெனிவாவில் 57 ஆவது அமர்வுக்காக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூடவிருக்கின்றது.
இலங்கையில் செப்டம்பர் 21 இல் ஜனாதிபதித் தேர்தல். ஆனால் ஜெனிவா அமர்வு தேர்தலுக்கு 12 நாள்களுக்கு முன்பு செப்டம்பர் 9 ஆம் திகதி ஆரம்பமாகிவிடும். ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை அது நீடிக்கும்.
இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அவதானிப்பு அறிக்கை ஜெனிவாவில் 57ஆவது கூட்டத் தொடரின் ஆரம்பத்திலேயே வெளியாகிவிடும்.
அதன்படி, இங்கு தேர்தலுக்கு 12 நாள்களுக்கு முன்னர் அது வெளியாகி நாட்டின் நிலைமை சந்தி சிரிக்கும் விவகாரமாகும் என்று எதிர்பார்க்கலாம்.
தேர்தல் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் இருக்கும்போது இந்த அறிக்கை வெளியாகி தேர்தல் மேடைகளை இன்னும் சூடாக்கும்.
இலங்கை தொடர்பாக 2021 இல் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 51 ஆவது அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்த செப்டெம்பரில் பூர்த்தியாவதால் இனி வரப் போகும் அமர்வில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை ஒன்று தீர்மானமாக முடிவெடுப்பதற்காக இணை அனுசரணை நாடுகளினால் வழமை போல முன்வைக்கப்படும்.
அதற்கான கலந்துரையாடல்கள், நாடுகளுக்கு இடையிலான கருத்துப் பரிமாறல்கள் போன்றவை செப்டம்பர் மாத இறுதியில் உச்சம் பெறும். ஒக்டோபர் 7 ஆம் திகதி இலங்கை விவகாரம் பெரும்பாலும் விவாதத்துக்கு வரும்.
ஆக, செப்டம்பர் 21 தேர்தலை அடுத்து தெரிவாகும் இலங்கையின் புதிய ஜனாதிபதி, தாம் பதவியேற்ற கையோடு கையாள வேண்டிய சூடான சர்வதேச விவகாரமாக ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸிலின் அமர்வு அமையும் என்பது திண்ணம்.
புதிய அதிபருக்கு அவரது ஆட்சிக் கட்டை அவர் கொண்டு நடத்துவதற்கான முதல் விஷப் பரீட்சையாக அது இருக்கும் என்பதும் உண்மை.