- by Editor
- 1 year ago
இரகசியம் - பரகசியம் (18.01.2024)
நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பார்கள். உண்மை.
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை குழப்பி, அதனைத் தள்ளிப் போட வைக்கும் விடயத்திலும் சம்பந்தப்பட்ட தரப்புகள் திருந்துபவையாக இல்லை. நிமிர்த்த முடியாத நாய் வால் மாதிரித்தான் செயல்படுகின்றன.
இன்னும் மூன்று நாள்களில் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு முன்னோடியான தலைவர் தேர்வுக்குரிய தேர்தல். பத்து நாள்களில் தேசிய மாநாடு. இந்த இரண்டுக்கும் இடையில் குழப்பம் பண்ணக்கூடியதாகக் காய் நகர்த்தல்கள் நடப்பதாகச் சந்தேகம்.
தேசிய மாநாடு தொடர்பில் கட்சியின் மத்திய குழு பல தடவைகள் கூடிய ஆராய்ந்து, தீர்மானங்களை எடுத்துள்ளது. தேசிய மாநாட்டில் பங்கு பற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர்பில் அது தெளிவான முடிவுகளை எட்டி இருக்கின்றது. அவற்றில் இரண்டு முடிவுகள் - தீர்மானங்கள் - முக்கியமானவை.
ஒன்று - கட்சியின் யாப்புக்கு அமைய மாநாட்டை நடத்துவது என்பது.
அடுத்தது - கட்சியின் இரண்டு கிளைகள் சம்பந்தமான விடயங்களில் மட்டும் புறநடை ஒழுங்குகளை மேற்கொள்வது என்ற முடிவு. அவை, முறையே திருகோணமலை மற்றும் கொழும்பு கிளைகள். அவற்றின் சார்பிலான பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு குறித்துக் குழப்பங்கள் நிலவுகின்றமையால் அவற்றை தீர்ப்பதற்காக திருகோணமலைக்கு மேலும் ஆறு உறுப்பினர்களையும் கொழும்புக்கு மேலும் மூன்று உறுப்பினர்களையும் மட்டும் பொதுக்குழுவிற்குச் சேர்த்துக் கொள்வது என்பது.
இவைதான் மத்திய குழு எடுத்த தீர்மானம்.
ஒவ்வொரு (தொகுதிக்) கிளையின் சார்பிலும் தலா ஐந்து உறுப்பினர்கள் மற்றும் திருகோணமலை மற்றும் கொழும்பு கிளைகளின் சார்பில் மேலதிகமாக 9 உறுப்பினர்கள், அத்தோடு மற்றும் தற்போதைய மத்திய குழுவின் உறுப்பினர்கள். - இவர்கள்தான் பொதுக்குழுவிலன் பிரதிநிதிகளாக கூட்டத்தில் பங்கு பற்ற முடியும். வாக்களிக்கவும் உரிமை உள்ளவர்கள்.
இதுதான் மத்திய குழுவின் முடிவு. இதற்கு மாறாக, கட்சியின் தற்போதைய தலைவர் தம்மிஷ்டப்படி பொதுக்குழுவுக்கு பிரதிநிதிகளை நியமிப்பது, அதற்கு அனுமதிப்பது என்பன எல்லாம் கட்சியின் யாப்பில் இல்லாத விடயங்கள்.
முன்னைய காலங்களில் கட்சி நிர்வாகிகள் தேர்வு வாக்கெடுப்பு வரை செல்லாத நிலையில் அப்படி தலைவர்கள் தமக்கு விருப்பமான சிலரை பொதுக்குழு கூட்டங்களுக்கு அழைப்பதை அனுமதிக்கும் முறைமை அவ்வப்போது இருந்தமை உண்டு.
ஆனால் அது யாப்பு ரீதியான ஏற்பாடோ, ஒழுங்கோ அல்ல. வாக்களிப்பு இல்லாமல் கட்சி நிர்வாகிகள் தெரிவுகள் நடைபெறுகின்றமையால் அப்படி சில உறுப்பினர்கள் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தலைவரின் விருப்பத்துக்கு இணங்க பிரசன்னமாகி இருக்கின்றமை பெரிய குழப்பத்தைத் தராது என்ற அடிப்படையில் அது அனுமதிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இம்முறை நிலைமை வேறு. போதாக்குறைக்கு யாப்பின்படியும், மத்திய குழுவின் வழிகாட்டல் படியும் தேசிய மாநாட்டை நடத்தி முடிப்பது என்று இறுக்கமான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணி புரிந்தும் - இந்த வகைக்குள் அடங்காத ஒரு சிலர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களையும் பொதுக்குழுவுக்கு அழைக்கும்படி - அதாவது ஞாயிறன்று நடக்கும் தலைவர் தேர்வு வாக்களிப்புக்கு அவர்களுக்கும் இடமளிக்கும்படி - கட்சியின் பொதுச் செயலாளருக்கும் நிர்வாகச் செயலாளருக்கும் அழுத்தம் கொடுக்கின்றார் கட்சித் தலைவர் என்று தெரிகின்றது.
அப்படித் தகுதியற்ற 5 முதல் 10 பேர் வாக்களிப்பில் கலந்து கொண்டால், முடிவுகளை ஒட்டிக் குழப்பம் வரும் அல்லது முடிவுகளை ஒட்டி யாராவது நீதிமன்றத்துக்குப் போக, தேசிய மாநாட்டுக்குத் தடை விதிக்கப்படும். தாம் தலைவர் பதவியில் தொடர முடியும் என்று கட்சியின் தற்போதைய தலைவர் மனக்கணக்குப் போடுகின்றார் போலும்.
ஆனால் இதில் எதிர்பாராத திருப்பம் ஒன்று இருக்கின்றமையை அவர் (கட்சித் தலைவர்) புரிந்து கொள்ளாமல் இருக்கிறார். தப்பித் தவறி அப்படி நேர்ந்து, கடைசி நேரத்தில் கட்சி செயல்பட முடியாத இக்கட்டு வந்தால், அது கட்சியை மட்டும் பாதிக்காது. அந்த நிலைமையை கட்சிக்கு ஏற்படுத்தியமைக்காக நிதி அபராத தண்டனை உட்பட சில நெருக்கடிகளை அவரே எதிர்கொள்ள நேரும்.
அவரின் தவறான வழிகாட்டுதல்களுக்கு இணங்கிப் போகும் கட்சியின் தற்போதைய நிர்வாகிகளும், அந்தத் தவறுகளுக்கு அவருடன் சேர்ந்து பொறுப்பேற்க வேண்டி ஏற்படும்.
எது, எப்படி என்றாலும் ஞாயிறன்று நடைபெறவிருக்கும் தலைவர் தேர்வுக்கு முதல் நாள் - நாளை மறுதினம் - திருகோணமலையில் கட்சியின் மத்திய குழு இறுதியாகக் கூடவிருக்கின்றது. அதில் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தவறான நகர்வுகளுக்கு 'செக் மேட்' வைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.