- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (17.03.2026)
-
- by Editor,
- 6 months ago
- in இரகசியம் பரகசியம்
மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராய்ந்து, பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழு இன்று காலை 11 மணிக்கு முதல் தடவையாக நாடாளுமன்றத்தில் கூடுகின்றது.
12 பேர் கொண்ட இந்தத் தெரிவுக் குழுவின் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத். அவர் உட்பட எண்மர் அரசு தரப்பினர். எதிர்க்கட்சிகள் தரப்பில் மனோ கணேசன், இரா.சாணக்கியன், நிஸாம் காரியப்பர், ரஞ்சித் மத்துமபண்டார ஆகிய நால்வர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்தத் தெரிவு குழு அமைக்கப்பட்டபோது அதன் முதல் கூட்டத்தில் இருந்து மூன்று மாத காலத்துக்குள் அது தனது பரிந்துரையை முன்வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால் இன்றைய கூட்டம் முதலாவது அமர்வு. வேறு இழுபறிகள், காலம் கடத்தல்கள் இடம்பெறா விட்டால் சரியாக ஜூன் 17ஆம் திகதிக்கு முன்னர் இந்தத் தெரிவு குழு தனது பரிந்துரையை முன் வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இதற்கு முன்னர் இருந்த மாகாண சபை தேர்தல் சட்டத்தை அப்படியே மீண்டும் கொண்டுவந்து அதன் கீழ் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு வழி செய்யும் விதத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சமர்ப்பித்துள்ளார். அது இரண்டாம் வாசிப்பின் பின்னர் நிலுவையில் உள்ளது. அதனை எடுத்து, சட்டமாக்கி, அதன் கீழ் தேர்தலை நடத்துவதற்கு வழி செய்யும்படி இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நால்வரும் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
******************************
சாவகச்சேரி நகர சபை, சாவகச்சேரி பிரதேச சபை ஆகியவற்றுக்கான உள்ளூராட்சித் தேர்தல்களின் போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை நிராகரிக்கும்படி உத்தரவிடக்கோரி, யாழ்ப்பாணத்தில் இயங்கும் வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீது நேற்று தீர்ப்பு அளிக்கப்பட இருந்ததாக நேற்றைய பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
தீர்ப்பு வழங்குவதை நீதிபதி சூசைதாசன் ஏப்ரல் இரண்டாம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார். இதற்கு முன்னைய திகதியிலும் தீர்ப்பு தவணை இடப்பட்டு, நேற்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. இப்போது தீர்ப்பு இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
******************************
''நாங்கள் இருவரும் எதிர்க்கட்சியில் இருந்தபோது அநுரகுமார திஸநாயக்க வாரம் ஒரு முறையாவது இரவு 10 மணிக்கு பின்னர் எனக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திப் பேசுவார். நாங்கள் பல்வேறு விடயங்கள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடுவோம். ஆனால் அவர் ஜனாதிபதியாகஒ பதவியேற்ற பின்னர் நான் அவருக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தினாலும் கூட அவரிடமிருந்து எந்தப் பதிலும் வருவதில்லை. அது பரவாயில்லை.'' - என்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்று கலந்து கொண்டு உரையாற்றும்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அலுத்துக் கொண்டு கவலை வெளியிட்டிருந்தார்.
அது பற்றிய செய்தியை நேற்று முன்தினம் எங்கள் பத்திரிகையில் இடம்பெறச் செய்தபோதே மனோ கணேசன் இலக்கு வைத்து வலை விரிக்கின்றார் என்பதை உணர்ந்து கொண்டேன்.
என் எதிர்பார்ப்புச் சரியாக வேலை செய்திருக்கிறது. நேற்று முன்தினம் அந்த செய்தி வந்ததும், அதன் மொழிபெயர்ப்பு ஜனாதிபதியை அடைந்ததை அடுத்து, நேற்றுக் காலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவே மனோ கணேசனுக்கு அழைப்பை எடுத்திருக்கிறார். அதைத்தானே மனோ காணேசன் எதிர்பார்த்து அந்த வலையை அப்படி விரித்திருந்தார்.
தம்மை தொலைபேசியில் பிடிக்க முடியவில்லை என்று தமது பழைய - நீண்ட நாள் - நெருங்கிய - நண்பர் பகிரங்கமாக குறிப்பிடும் அளவுக்கு தமது நிலைமை போய்விட்டது குறித்து தனது நண்பர் மீது பொய்க் கோபத்துடன் பாய்ந்திருக்கிறார் ஜனாதிபதி.
''உங்களுக்குப் பல தடவைகள் தொலைபேசி அழைப்பு எடுத்தேன். பிடிக்க முடியவில்லை. உங்கள் செயலாலருக்கும் எடுத்துச் சொன்னேன். அப்போதும் தொடர்பு கிடைக்கவில்லை'' - என்று மனோ கணேசன் கூறிய போது ஜனாதிபதி உடனடியாகக் குறுக்கிட்டார்.
''நீங்கள் என்னுடன் பேசுவதற்கு இடையில் ஏன் என் செயலாளர்? உங்களுக்கு என்னோடு தொடர்பு கொள்ள பழைய நட்பும் உரிமையும் என்றும் உண்டு'' - என்று பொய் கோபத்துடன் பாய்ந்தார் ஜனாதிபதி.
''இல்லையே நான் பல தடவைகள் உங்களோடு பேச முயற்சித்து முடியாத விடத்து வாட்ஸ் அப்பில் செய்தி கூட அனுப்பி இருந்தேனே...!'' - என்றார் மனோ கணேசன்.
''வாட்ஸ் அப்பில் நிறைய செய்திகள் வருகின்றன. அவற்றையெல்லாம் சில பல சமயங்களில் பார்க்க முடிவதில்லை. நீங்கள் உடனடியாகத் தொலைபேசியில் என்னைப் பிடிக்க முடியாவிட்டால் எனக்கு எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி அனுப்பி இருந்தால் நானே அதைப் பார்த்து, நேரம் கிடைக்கும்போது நிச்சயமாக தொலைபேசி அழைப்பு எடுத்து பேசுவேன்'' - என்று உரிமையுடன் கூறினார் ஜனாதிபதி.
எது, எப்படியோ மனோ கணேசன் விரித்த வலையில் ஜனாதிபதி சரியாக விழுந்துவிட்டார்.
மனோ கணேசனின் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தூத்துக்குழுவை அடுத்த வாரம் சந்திப்பதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
எப்படி சமயோசிதமாக அரசியல் காய் நகர்த்த வேண்டும் என்பதற்கு மனோ கணேசனின் இந்த அணுகுமுறை ஒரு நல்ல முன் உதாரணம்தான்.
******************************
முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரை நியமிப்பது தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் இழுபறிப்படுகின்றமை தொடர்பான சுவாரசியமான தகவலை இன்று பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
முல்லைத்தீவு, கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தம்மை வெளியேற்றி, அந்த இடத்துக்கு பிறிதொரு உறுப்பினரை நியமிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்குத் தடை உத்தரவு வழங்கக் கோரி அச்சபையின் முன்னாள் தவிசாளர் சின்னராசா யோகேஸ்வரன் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கைத் தாக்கல் செய்த மனுதாரர் வழக்கு விசாரணை முடியும் வரை தமது இடத்துக்குப் பிறிதொரு உறுப்பினரைத் தமிழரசுக் கட்சி நியமிப்பதற்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவும் பெற்றிருந்தார்.
ஆயினும், கடந்த மாதம் 19 ஆம் திகதி இந்த வழக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர் மனுதாரரான தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அனுசரணையுடன் சட்டத்தரணி நிரான் அங்கிட்டல் முன்னிலையாகி வாதிட்டார். அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சின்னையா யோகேஸ்வரனின் மனுவை அன்றைய தினம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே கரைத்துரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட சின்னராசா யோகேஸ்வரனின் இடத்துக்குப் பதிலாகப் பிறிதொருவரை உறுப்பினராகத் தமிழரசுக் கட்சி நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது என்று 'மாலை முரசு' பத்திரிகை கடந்த 19 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றே செய்தி வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அடுத்த நாளே - அதாவது கடந்த மாதம் 20ஆம் திகதியே - கரைத்துரைப்பற்று பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர் ஒருவரை நியமிக்கும் கடிதத்தை சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் அனுப்பி வைத்துவிட்டார்.
தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரனை எதிர்மனுதாரராகக் குறிப்பிட்டு, அவரின் கொழும்பு, வெள்ளவத்தை விலாசத்தை பதிவு செய்து, அதன் அடிப்படையில் இந்த வழக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாரரான சபையின் முன்னாள் தவிசாளர் சின்னராசா யோகேஸ்வரன் தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் சுமந்திரனின் கொழும்பு விலாசம் அமைந்துள்ள பிரதேசம் மவுண்ட்லவேனியா மாவட்ட நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் வருவது. அதனையே சுமந்திரனின் சட்டத்தரணி நிரான் அங்கிட்டல் கொழும்பு மாவட்ட நீதிமன்றுக்குச் சுட்டிக்காட்டி வாதிட்டார்.
''உங்களின் நியாயாதிக்க எல்லைக்குள் வராத ஒரு வழக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விசாரிப்பதோ தடை உத்தரவு கொடுப்பது தவறானது'' என்ற சுமந்திரனின் சட்டத்தரணியின் வாதத்தை ஏற்று அந்த வழக்கையே அப்போது கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதை அடுத்து புதிய உறுப்பினர் ஒருவரை நியமிக்கும் கடிதத்தை தமிழரசு கட்சியின் செயலாளர் உரிய அலுவலருக்கு அடுத்த நாள் அனுப்பி விட்டார்.
அது நடந்து இரண்டு வாரங்களின் பின்னர், இப்போது, கடந்த ஆறாம் திகதி, புதிய வழக்கு ஒன்றை முன்னாள் தவிசாளர் சின்னராசா யோகேஸ்வரன் மவுண்ட்லவேனியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அதன் மீது தடை உத்தரவு ஒன்றை பெற்றிருக்கிறார். அதாவது தமது இடத்துக்கு புதிய ஒருவரை தமிழரசுக் கட்சியின் செயலாளர் நியமிக்க கூடாது என்று அந்த உத்தரவு பெறப்பட்டுள்ளது.
அந்த வழக்கு வரும் இருபதாம் திகதி வெள்ளிக்கிழமை நீதிமன்றத்திற்கு வருகின்றது
அந்த நீதிமன்றம் இம்மாதம் ஆறாம் திகதி மேற்படி இடைக்காலத் தடை உத்தரவை விதிப்பதற்கு முன்னரே, போன மாதம் இருபதாம் திகதியே அந்த இடத்துக்குப் புதிய உறுப்பினர் ஒருவரை நியமிக்கும் கடிதத்தை தாம் அனுப்பிவிட்டார் என்று சுமந்திரன் தமது சட்டத்தரணி மூலம், அல்லது தாமே நேரில் ஆஜராகி, நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தி, வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடிப் பயனில்லை...!