- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (16.09.2024)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா. கடந்த பொதுத் தேர்தலில் தமிழரசின் வீட்டுச் சின்னத்தில் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் தலைமை வேட்பாளர் அவர்தான்.
ஆனால், யாழ் மாவட்ட மக்கள் தமிழரசு பட்டியலின் தலைமை வேட்பாளருக்கு ஆறாவது இடத்தை தந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அந்த மக்களின் முடிவு சரியானதுதான் என்பதை அவர் இப்போதும் திரும்பத் திரும்ப செயலில் நிரூபித்து வருகின்றார்.
பொது வேட்பாளர் என்று கூறப்படுபவரை ஆதரிப்பது இல்லை என அவரது தமிழரசுக் கட்சியின் கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க மத்திய குழு தீர்மானித்திருக்கின்றது. பொது வேட்பாளரை போட்டியிலிருந்து விலகும்படியும் அது தீர்மானம் மூலம் கோரி இருக்கின்றது.
தவிரவும், ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கவும் கட்சியின் மத்தியகுழு தீர்மானித்திருக்கிறது.
அப்படி இருக்க, சஜித்துக்கு எதிரான ரணில் விக்கிரமசிங்கவைத் தமது வீட்டுக்கு வரவேற்று 'டீல்' பேசுகின்றார் மாவையர்.
கட்சி தேர்தலில் இருந்து விலகக் கோரிய பொது வேட்பாளரைத் தாம் தேடிக்கென்று சந்தித்துத் தமது கட்சியை இழிவுபடுத்துகிறார்.
ரணிலுடன் செய்து கொண்ட டீல் படியான வரும்படிக்கு நன்றியாக கட்சியின் மத்திய குழுவின் அறிக்கையை மாற்றி வேறு அறிக்கை ஒன்றை வெளியிடத் துடியாய்த் துடிக்கின்றார்.
தந்தை செல்வாவுக்கும் தளபதி அமிருக்கும் பக்கத்தில் இருந்து அரசியல் படித்திருந்தால் இப்படிச் சுத்துமாத்துப் பண்பு வந்திருக்காது.
இன்று மாவையிடம் பிரதிபலிப்பது மேற்படி மகத்தான மனிதர்களுடன் - அரசியல் தலைவர்களுடன் - பழகியமையால் வந்த நற்பண்புகள் அல்ல.
மாறாக, அரசியல் சுயநலமும், பதவி ஆசையும், நோட்டுக்களுக்கு பின்னால் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரியும் இழிந்த பண்புகள்தான்.
இவர் தலைமையில் தமிழரசு இனிமேல் உருப்படப் போவதில்லை என்பது நிச்சயம்.
தமிழரசு வரலாற்றில் - இல்லை, இல்லை... தமிழர் வரலாற்றில் - ஒரு கட்சித் தலைவர் எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு மாவை ஒருவரே நல்ல உதாரணம்.
***
நாடாளுமன்றத் தேர்தலில் காற்றுக் கழன்று போன ஒருவருக்கு ஆளுநர் பதவியில் கண் வந்துவிட்டது என்று உள்வீட்டுத் தகவல் ஒன்று கசிந்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ளாமல் பதவியை ருசிக்கு ஆசை. ரணில் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் தமக்கு அது கிட்டுமென்று நம்புகின்றாராம்.
ரணிலின் வெற்றியை உறுதிப்படுத்த சஜித்தை வீழ்த்த வேண்டும் என்பது தமிழர் தரப்பில் சில பிரகிருகளின் கணக்கு. தத்துவம். நாம் குறிப்பிடும் பிரகிருதியும் அதற்கு விதிவிலக்கு அல்லர்.
சஜித்தை விழுத்தி, ரணில் மீதான விசுவாசத்தைக் காட்டுவதற்காக தமது கட்சியின் முடிவுக்கு மாறாக, தமது தொகுதிக் கிளை ஆதரவை பொது வேட்பாளருக்கு திருப்பி விட்டதாக அறிவித்திருக்கின்றார்.
தொகுதிக் கிளை தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். வாக்களிப்பு முடிவுகள் வெளியாக அவருக்கு விடயம் புரியும் என்று நம்புவோம்.