- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (15.05.2024)
பலஸ்தீன நிலைமையை ஒட்டி நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரமுகர் எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரையில் நான் அவதானித்த நான்கு விடயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது பொருத்தமானது என நினைக்கிறேன்.
முதலாவது - பாலஸ்தீன நிலைமையை இங்கு இலங்கையில் இடம் பெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலுடன் அவர் ஒப்பிட்டமை.
''நாடுகளில் சில தலைவர்களின் மக்கள் செல்வாக்கு - ஆதரவு - அவர்களுக்கு சரிகின்ற போது அதனை ஈடு கட்டுவதற்கு நாட்டுக்கு தேசிய எதிரி ஒருவர் அந்தத் தலைவருக்கு தேவைப்படுகின்றார்'' என்று சுமந்திரன் குறிப்பிட்டு, விடயங்களைக் குறிப்பால் உணர்த்தினார்.
இஸ்ரேல் ஆட்சியாளர் தமது செல்வாக்கை வளர்ப்பதற்கு நாட்டுக்கு எதிரியான ஹமாஸ் என்று தரப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் என்ற சாரப்பட குறிப்பால் காட்டும் சுமந்திரன், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் விளைவாக அரசியல் செல்வாக்கு ஈட்டி, அதிகாரத்துக்கு வந்த தரப்பைச் சொல்லாமல் சொல்லுகின்றார். இவ்வாறு அதிகாரத்தை ஈட்டும் மார்க்கம் மிகவும் இழிவானது என்றும் சுமந்திரன் சுட்டினார்.
அடுத்தது - ''இஸ்ரேல் ஈவிரக்கமற்ற முறையில் பலஸ்தீனம் மீது நடத்தும் தாக்குதலை இந்த நாட்டிலும் பலர் ஆதரிக்கிறார்கள், அவர்களில் அதிகமானோர் இந்த நாட்டின் கிறிஸ்தவ திருச்சபையைச் சேர்ந்தவர்கள். நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்து கொண்டு அதை விமர்சிக்கின்றேன்'' என்று கிறிஸ்தவத் தரப்பையும் சுமந்திரன் 'ஸேம் சைட் கோல்' அடித்து, ஒரு பிடி பிடித்தார்.
மூன்றாவது - சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்துக்கு எதிராகத் தடை உத்தரவு கொடுத்த நீதிவான் குறித்து அவர் கொடுத்த சாட்டையடிக் கருத்து. ''அந்த நீதிவான் இப்படி ஓர் உத்தரவை எப்படி கொடுத்தார் என்பதை என்னால் நம்ப முடியாமல் இருக்கின்றது'' - என்று குறிப்பிட்டதன் மூலம் அந்த நீதிவானை அவர் நாடாளுமன்றத்தில் மறைமுகமாக வைத்தார்.
நான்காவது - நேற்று அந்த ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை கொண்டு வந்து பிரேரித்த ரவூப் ஹக்கீமுக்கு சுமந்திரன் கொடுத்த சாட்டை.
''அரச பயங்கரவாதம் என்றால் எமக்கு - தமிழர்களுக்கு - நன்கு தெரியும். நாங்கள் அதன் கொடூரத்தை அனுபவித்தவர்கள், அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள்.
நாங்கள் பலஸ்தீன மக்களுடன் உணர்வு ரீதியாக நிற்கிறோம்.
இந்த நாட்டின் நீதி அமைச்சராக இருந்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் எங்களுக்கு - தமிழர்களுக்கு - எதிராக இலங்கை அரசின் பயங்கரவாதத்தை மூடி மறைத்து நியாயப்படுத்தியவர்தான் ஹக்கீம். இப்போது இங்கு வந்து இஸ்ரேல் தலைவர் நெத்தனியாகுவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்கிறார் அவர். ஏன் மஹிந்த ராஜபக்ஷவை நிறுத்தக்கூடாது? ஏன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நிறுத்தக்கூடாது? இந்த வன்முறைகளை இழைத்த தரப்பில் கட்டளை சங்கிலியில் பொறுப்பாக இருந்தவர்களை ஏன் நிறுத்தக்கூடாது?'' - என்று கேட்டார் சுமந்திரன்.
நிச்சயமாக சுமந்திரனின் இந்தக் கேள்விகளுக்கு ரவூப் ஹக்கீமிடம் ''அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பு'' என்ற சமாளிப்புப் பதில் தவிர வேறு நியாயம் ஏதும் இல்லை என்பது மட்டும் எனக்கு தெரியும்.