- by Editor
- 4 months ago
இரகசியம் - பரகசியம் (15.01.2024)
அவர் ஒரு மூத்த ஊடகவியலாளர். தமிழர். எழுபதுகளில் தமிழ் ஊடகத்துறையில் இணைந்தவர். பிற்காலத்தில் ஆங்கில ஊடகத்துறையில் - பத்திரிகையில் - அதுவும் நீதிமன்ற செய்திகள் வரைவதில் கொடிகட்டிப் பறந்தவர்.
எழுபதுகளின் கடைசியில் பேனாவும் கையுமாக நான் பத்திரிகை துறைக்குள் புகுந்த போது நான் சேர்ந்த அந்தக் கொழும்புப் பத்திரிகையில் அவர் எனக்கு சீனியர். அவர் உதவி ஆசிரியர். நான் பயிற்சிச் செய்தியாளன்.
அந்த நேரத்தில் ரோய்ட்டர், பி.ரி.ஐ. போன்ற செய்தி நிறுவனங்களின் டெலிப்பிரண்டரில் வரும் செய்திகளை கோவையாக்கி, உலகச் செய்திகளை வரைவது அவரது பொறுப்பு. சில செய்திகளை என்னிடமும் தருவார். ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யும் பயிற்சி. அது ஒன்றும் எனக்குரிய வேலை அல்ல. என்னை அத்துறையில் பயிற்றுவிப்பது அவரது பொறுப்பும் அல்ல. எனினும் இளைஞனான என்னுடைய இயல்பான ஈடுபாட்டைக் கண்டு, தாமாகவே அரவணைத்து, எனக்குப் பயிற்றுவித்தார் - எந்தப் பிரதியுபகாரமும் எதிர்பார்க்காமல்.
அடுத்த ஆண்டில் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சையில் பல்லாயிரம் பேருடன் போட்டியிட்டு, நூற்றியைம்பது பேரில் ஒருவனாக அனுமதி பெறும் தகுதியை நான் ஈட்டுவதற்கு அந்த மொழிபெயர்ப்பு பயிற்சிதான் எனக்கு உரிய வாண்மையைப் பெற்று தந்தது என்பேன்.
எழுதும் செய்தியில் தகவல் பிழை இல்லாமல் கனகச்சிதமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் பெரும் கறார் பேர்வழி. பிழை, தவறு என்பவற்றை நெற்றிப்பொட்டில் ஆணி அடித்தால் போல நேரடியாகச் சுட்டிக்காட்டிக் கூறுவார்.
சில தினங்களுக்கு முன்னர் திடீரென அழைப்பு எடுத்தார்.
''நீங்கள் ஓரளவு சட்டம் தெரிந்த பத்திரிகையாளர்தானே? சட்டம் படித்தவர்தானே?'' - என்று கேள்வி எழுப்பினார்.
நான் சிரித்துச் சமாளித்தேன். பத்திரிகையில் ஏதோ தவறு நடந்து விட்டது, அவரின் கண்ணில் அது பட்டுவிட்டது என்பதை மட்டும் ஊகித்துக் கொண்டேன்.
''சில தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி வெளியிட்டீர்கள். 'வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி வழக்கு; 3 எம்பிக்கள் உட்பட எழுவரை விடுவித்தது நீதிமன்றம்' என்ற தலைப்பில் ஒரு முன் பக்க செய்தி வெளியாகி இருந்தது'' என்றார் அவர்.
''ஆமாம் கடந்த 8 ஆம் திகதி மாலை முரசில் வெளியிட்டிருந்தோம்.'' - என்றேன்.
''முன்னுக்குப் பின் முரணாக செய்தி வெளியிட்டிருக்கின்றீர்கள்'' - என்றார் அவர்.
எனக்கு புரியவில்லை. அவரே தெளிவு படுத்தினார்.
''இரண்டு வழக்குகள் குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளீர்கள். இரண்டு வழக்குகளையும் கிடப்பில் போட்டு பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரினார் என்றும், இதனை அடுத்து இரண்டு வழக்குகளையும் கிடப்பில் போட உத்தரவிட்ட நீதிமன்றம், பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்து பணித்தது என்றும் செய்தி வரைந்து உள்ளீர்கள். அது தப்பு. வழக்கு கிடப்பில் போடப்பட்டால் அதன் பிரதிவாதிகளின் பெயரும் கிடப்பில் இருக்கும். அவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டார்கள் என்று அர்த்தம் அல்ல. வழக்கு மீண்டும் பரிசீலனைக்கு எடுக்கப்படும் போது பிரதிவாதிகளும் வழக்குக்கு வர வேண்டியிருக்கும். வழக்கின் பிரதிவாதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டிருந்தால் வழக்கு கிடப்பில் இராது. வழக்கு முடிந்து விட்டதாக இருக்கும். இப்போது வழக்குக் கிடப்பில் போடப்பட்டிருப்பதால் அது மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படாத வரையில் பிரதிவாதிகள் வழக்குக்கு வர வேண்டிய தேவை இல்லை. அதுதான் அர்த்தம். அது விடுதலை என்று அர்த்தம் அல்ல. அவ்வளவுதான். வழக்கை நடத்திய சட்டத்தரணிகளுக்கு ஒரு 'பூஸ்ட்' கொடுப்பதற்காக அவர்கள் தரப்பு அப்படி நீதிமன்ற உத்தரவுக்கு அபத்தமான அர்த்தத்தைக் கற்பித்து செய்திகளைத் தந்திருக்கக் கூடும். ஆனால், நீங்கள் சட்டம் தெரிந்த - புரிந்த - ஆசிரியர். அத்தகைய தவறுக்கு அனுமதித்திருக்கக் கூடாது.'' - என்றார் எனது பழைய குரு. அவர் சொன்னவை முற்றிலும் சரி. தவறு என் பக்கத்தில்தான்.
1979 ஆம் ஆண்டு அவருக்கு முன்னால் பவ்யமாக நின்று, ஆங்கிலச் செய்தியை மொழிபெயர்ப்பது குறித்துக் கேட்டுப் படித்த அதே பணிவுடன், இப்போதைய அவரின் கருத்தையும் உள்வாங்கிக் கொண்டேன். தவறை ஒப்புக் கொண்டு ஏற்றுத் திருந்துபவன்தானே மனிதன்...!