- by Editor
- 1 year ago
இரகசியம் - பரகசியம் (14.4.2025)
-
- by Editor,
- 1 year ago
- in இரகசியம் பரகசியம்
உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் விடயத்தில் தேர்தல் ஆணையத்துக்கும் அதற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய சட்டமா அதிபர் தரப்புக்கும் இடையில் வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிரான மனுக்களைக் கையாளும் விவகாரம் தொடர்பில் முரண்பாடு இருந்து வருவதை என் பத்தியிலும், எமது முரசின் செய்திகளிலும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றோம்.
இன்று இந்தத் தேர்தல் தொடர்பில் தமிழர் தரப்பில் முக்கியமான ஒரு விடயத்தை சுட்டிக் காட்டலாம் என்று நினைக்கிறேன். அதனால் இன்று பத்தி சற்று நீண்டு விட்டது. மன்னிக்குக.
இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிப்பு விவகாரத்தில் சட்ட ரீதியில் இரண்டு விடயங்களே முக்கிய பிரச்சினைக்கு உள்ளானவையாக - சர்ச்சைக்குரியனவாக - இருக்கின்றன.
ஒன்று - இளம் வேட்பாளர்களின் வயதை நிரூபிக்கும் பிறப்புச் சான்றிதழின் பிரதி தொடர்பான சர்ச்சை. பிறப்புச் சான்றிதழின் போட்டோ பிரதியை சமாதான நீதிவான் உறுதிப்படுத்தி இருந்தால் அதனை ஏற்கலாம் என்று கருதி சில கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் அவற்றை இணைத்து, வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய, அந்த வேட்பு மனுக்களை சம்பந்தப்பட்ட மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நிராகரித்து விட்டார்கள்.
அடுத்தது - வேட்பாளர்களின் விவரங்களை சான்றுரைக்கும் சமாதான நீதிவானின் உறுதியுரை பற்றிய விவகாரம். இதிலும் பல கட்சிகளும் தரப்புக்களும் சிறு தவறுகள் விட்டமையால் பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்த வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் இரண்டு நீதிமன்றங்களில் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்தன.
ஒன்று - உயர் நீதிமன்றம். மற்றது - மேன்முறையீட்டு நீதிமன்றம்.
உயர் நீதிமன்றத்தை நாடிய தரப்புகள் இரண்டு விதமான விண்ணப்பங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தன.
தங்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து சில தரப்புகள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்தன. குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனைத்தான் செய்தது.
வேறு பல தரப்புகள் தங்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தன.
அதேசமயம் வேறு அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தன.
இதுதான் ஆரம்ப நிலைமை.
இந்த இரண்டு நீதிமன்றங்களும் வழக்குகளை ஏற்று உத்தரவுகளை வழங்கின.
உயர்நீதிமன்றம் தன் முன்னால் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் ஆட்சேபனை தொடர்பான ரிட் மனுக்களை முழுமையாக நிராகரித்தது. அந்த ரிட் மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்பது உயர் நீதிமன்றத்தின் கருத்தாக அமைந்தது.
அதேசமயம் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிக்கும் தனித்துவ அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு மட்டுமே உரியது என்பதால் அடிப்படை உரிமை மீறல் மனுக்களாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்றம் முழுமையாக விசாரித்தது. அந்த விசாரணையின் போது சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் தரப்பில் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பில் இழைக்கப்பட்ட அல்லது இழைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட விடயங்களை அது விரிவாக ஆராய்ந்து தனது தீர்ப்பில் ஒரு முடிவை தெரிவித்து இருக்கின்றது.
பிறப்புச் சான்றிதழின் போட்டோப் பிரதியை சமாதான நீதிவான் சான்றுரைத்து உறுதி செய்திருப்பதை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அது தவறான ஒழுங்கு என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.
அத்தோடு, வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தொடர்பாக சமாதான நீதிவான் வழங்க வேண்டிய சான்றுரைப்பில் எந்தத் தவறும் இல்லாமல் முழுமையாக அது சட்டத்தில் கூறப்பட்டவாறு இருக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்த இரண்டின் அடிப்படையிலும் தன் முன்னால் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உட்பட ஆறு அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
அதே சமயம் உயர் நீதிமன்றத்தினால் பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட ரிட் மனுக்களுக்கு உரிய தரப்புகள் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (சங்கு கூட்டணி), இலங்கை தமிழரசு போன்றவை) உடனடியாகப் புதிதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தன.
இதற்கிடையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தனக்கு முன்னால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை பரிசீலித்து, அவற்றில் பெரும்பாலானவை தொடர்பில் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
பிறப்புச் சான்றிதழின் போட்டோ பிரதி சமாதான நீதிவானினால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அதை ஏற்கும்படியும், வேட்பாளர்களைச் சான்றுரைக்கும் சமாதான நீதிவான்களின் பதிவுகளில் சில தவறுகள் இருந்தால், அவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் வேட்பு மனுக்களை ஏற்கும்படியும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. சுமார் எண்பதுக்கும் அதிகமான இத்தகைய தரப்புகளின் வேட்பு மனுக்களை ஏற்கும்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆயினும், இந்த இரண்டு விடயங்களிலும் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக - மாறாக - மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருக்கின்றது.
இந்தப் பின்புலத்தில்தான் தேர்தல் ஆணையம் தேர்தலை நீதியாகவும், சகல தரப்புக்கும் சமமான அணுகுமுறையிலும் நடத்த வேண்டிய தன் கடப்பாட்டை நிறைவு செய்வதற்காக இரண்டு விடயங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஒன்று - உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உயர் நீதிமன்றுக்கு எடுத்துச் சென்று, மேன்முறையீடு செய்து, சரியான இறுதி உத்தரவு ஒன்றை - எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதான ஒரு நடவடிக்கையை - அது செய்ய வேண்டும்
அடுத்தது - இதே காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட பல வேட்பு மனுக்களின் தரப்புகள் நீதிமன்றங்களுக்கு செல்லவில்லை. ஆகவே அவர்களின் வேட்பு மனுக்களையும் இதே அடிப்படையில் பரிசீலித்து, உரிய முடிவை எடுக்கும் வழிகாட்டலை உயர் நீதிமன்றத்தில் இருந்து பெறவேண்டிய கடப்பாடு தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. அப்போதுதான் இந்தத் தேர்தலை நீதியாகவும், நியாயமாகவும், சகல தரப்புகளுக்கும் சமனான நீதி கிடைக்கும் முறையிலும் தேர்தல் ஆணையம் நடத்தி முடித்ததாக இருக்கும்.
ஆனால், இப்போது, தேர்தல் ஆணையத்துக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் இடையில் கட்டவிழும் சட்ட இழுபறி நிலைப்பாடு, இந்த விடயங்களைத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றின் கவனத்துக்கு எடுத்துச் சென்று திருத்தும் என்ற நம்பிக்கையைத் தரவில்லை. உயர் நீதிமன்றத்துக்கு அது போகும் என்று நம்ப இடமில்லை. ஏதோ ஒப்புக்குத் தேர்தலை நடத்தி முடித்து, சமாளித்து விடும் போக்குதான் தேர்தல் ஆணையத்தின் அணுகு முறையில் தென்படுகின்றது.
இந்த நிலையில்தான் தமிழர் தரப்பில் இரண்டு தலைவர்களின் முக்கிய கடப்பாட்டைக் குறிப்பிட விரும்புகிறேன்.
இத்தகைய தவறு இழைக்கப்படுவதற்கு எதிராக தமிழர் தரப்பில் இரண்டு கட்சிகளுக்கு - அவர்களின் தலைவர்களுக்கு - முக்கிய பொறுப்பு உண்டு என்று நான் நினைக்கிறேன்.
ஒன்று - இலங்கைத் தமிழரசுக் கட்சி, அதன் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்.
அடுத்தது - தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அத்தரப்பின் பதிவு செய்யப்பட்ட கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிஸின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இவரும் ஒரு சட்டத்தரணி.
இந்த இரண்டு பேரில் யாரேனும் ஒருவர் இவ்விடயத்தில் நீதி வேண்டி உயர் நீதிமன்றத்திடம் போனால் ஓர் அமர்விலேயே நீதி நிலைநாட்டப்படுவதற்கான உத்தரவை பெற முடியும் என்று நான் நினைக்கிறேன்.
ஏனென்றால் மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்படி வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லி வழங்கிய பல வழக்குகளில் இவர்கள் இருவரும் எதிர்மனுதாரர்கள்தாம்.
எதிர்மனுதாரர்களுக்கு அறிவிக்காமல் - நோட்டீஸ் உத்தரவு கொடுக்காமல் - மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்குவது சட்டப்படி சரியாக இருக்கலாம். ஆனால் இறுதித் தீர்ப்பை எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பாமலேயே நீதிமன்றம் வழங்க முடியாது. அது மிகப்பெரிய சட்ட தவறு. இப்போது நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருப்பது அதன் இறுந்த் தீர்ப்பு. இடைக்கால உத்தரவு அல்ல. எதிர்மனுதாரர்களான தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஆகிய தரப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பாமலேயே தன் பாட்டில் இத்தகைய பல வழக்குகளில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கி இருக்கின்றது என்ற விவகாரத்தை இந்த இருவரில் ஒருவர் உயர்நீதிமன்றுக்கு எடுத்துச் சென்றால் உடனடியாகவே மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தடை உத்தரவைப் பெற முடியும்.
அப்படியானால் இவர்களில் யார் உயர்நீதிமன்றுக்கு விடயத்தை எடுத்துச் செல்வது பொருத்தமானது என்ற கேள்வி எழுகின்றது.
இலங்கைத் தமிழரசு கட்சியின் ஒரு வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமையை (மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமையை) ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அணுகிய தமிழரசு கட்சி, அதன் மூலம் தன்னுடைய வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ளச் செய்யும் உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்டுவிட்டது. ஆகவே அதை நிராகரிக்கச் செய்யும் அடிப்படையிலான ஒரு வழக்குக்கு தமிழரசு கட்சியோ அதன் பொதுச்செயலாளர் சுமந்திரனோ செல்வது சாத்தியமற்றது. பொருத்தமற்றது.
ஆனால் கஜேந்திரகுமாரின் நிலைமை அத்தகையது அல்ல. அவரது தரப்பின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து அவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்தமையால், அந்த மனுக்களை முழுமையாக விசாரித்து, அவற்றில் உள்ள விடயங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அதனால் அதற்குப் பின்னர் அவர் அந்த விடயத்துக்காக மேன்முறையீட்டு நீதிமன்றுக்குச் செல்ல முடியவில்லை.
ஆயினும், அவரது தரப்பு இழைத்த அதே தவறுகளை இழைத்தமை காரணமாக நிராகரிக்கப்பட்ட பிற வேட்புமனுக்களுக்கு உரியவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்து தங்கள் வேட்பு மனுக்களை தேர்தலுக்கு இணைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுவிட்டனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரை - அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைப் பொறுத்தவரை - உதாரணத்திற்கு நல்லூர் பிரதேச சபையை எடுத்துக் கொள்ளலாம். அங்கு அதன் வேட்புமனு என்ன காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டதோ, அதே போன்ற ஒரு காரணத்துக்காகவே சங்கு கட்சியின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது. ஆனால் சங்கு கட்சி நிவாரணம் பெற்றுவிட்டது. வேட்பு மனுவைத் தேர்தலில் சேர்த்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் மூலம் அது உத்தரவு பெற்றுவிட்டது.
உயர்நீதிமன்ற தீர்ப்பின் காரணமாகத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கப்பட்ட தன்னுடைய வேட்பு மனுக்களை சேர்த்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது.
ஆகவே, தனக்கு வழங்கப்பட மறுத்த நீதியின் அடிப்படையில், இந்த விவகாரத்தை இப்போதைய நிலையில் உயர்நீதிமன்றுக்கு எடுத்துச் சென்று, நீதியை நிலை நாட்டச் செய்ய வேண்டிய கடப்பாடு - பொறுப்பு - தார்மீக ரீதியாக கஜேந்திரகுமாரின் தரப்பில் விழுந்து இருப்பதாக நான் நினைக்கிறேன்.
அவர் ஒரு சட்டத்தரணி. அவர் பக்கத்தில் பல சட்டத்தரணிகள் இருக்கிறார்கள். என்ன செய்யப் போகிறார்கள் கஜேந்திரகுமார் தரப்பினர்? பொறுத்திருந்து பார்த்திருப்போம்!