- by Editor
- 2 months ago
இரகசியம் - பரகசியம் (11.07.2024)
நேற்றிரவு நிகழ்நிலையில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்திற்குக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா சமுகம் தரவில்லை. ஏன் வரவில்லை என்று யாருக்கும் தெரியவில்லை. வர மாட்டேன் என்று யாருக்கும் அவர் அறிவிக்கவுமில்லை. அவர் தலைமையில்தான் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. கூட்டம் நடைபெறுவது பற்றி நேரத்துடன் பொதுச்செயலாளர் அவருக்குத் தகவல் கொடுத்திருந்தார். எனினும் நேற்றுக் கூட்டம் ஆரம்பமான நேரத்தில் இருந்து பல தடவைகள் தொலைபேசி மூலம் அவருடன் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கப்பட்ட போதிலும் அவர் இணைப்பில் வரவில்லை.
அதற்கு முன்னதாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், அந்த பேட்டியினூடாக, அன்று (நேற்று) பகல் நடைபெறும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்றக் குழுத் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்படுவார் என்று கோடி காட்டி இருந்தார். ஆனால் நாடாளுமன்றக் குழு அதற்கு மாறாக முடிவு எடுத்திருந்தது. அந்தக் கோபத்திலோ என்னவோ அவர் நேற்று இரவு நடைபெற்ற அரசியல் குழு கூட்டத்தில் தலை காட்டவில்லை.
செல்வம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழுவின் தலைவர் பதவியை பெற்றிருப்பாரானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயிரோடு இருப்பதாகக் கருதி, காட்டி, நாடாளுமன்றுக்கு வெளியில் அதன் தலைமைப் பதவியை - சம்பந்தரின் இடத்தில் தாமே இருந்து கொண்டு - கொண்டு நடத்த முடியும் என்ற மாவை சேனாதிராஜாவின் கனவு நேற்று பிற்பகல் நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் முடிவினால் அடிபட்டுப் போய்விட்டது.
நேற்று இரவு அரசியல் குழுக் கூட்டத்திற்கு அவர் சமுகம் தராமல் விட்டமைக்கு இந்த அதிருப்தி காரணமோ, என்னவோ தெரியவில்லை.
அரசியல் குழுவின் நேற்றைய கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்ட சிறிதரன், மேற்படி தலைமைப் பதவியை செல்வமும் சுமந்திரனும் பகிர்ந்து செய்யலாம் என்பதைத் தான் காலையில் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் குறிப்பிட்டடிருந்தமையைச் சுட்டிக் காட்டினார். ஆயினும் செல்வம் கூட்டமைப்பில் இல்லாத காரணத்தினால் அது பொருந்தி வரவில்லை என்று சொல்லிய சிறிதரன் தானும் சுமந்திரனும் அதைப் பகிரலாம் என்றும், தான் அந்தத் தலைமைப் பதவியில் தொடர, சுமந்திரன் சம்பந்தனுக்கு ஆற்றிய முறைமையில் தொடர்ந்தும் சம்பந்தப்பட்ட வேலைகளை முன்னெடுக்கலாம் என்றார்.
எனினும் அது குறித்து, அதை ஒட்டியோ, வெட்டியோ, அந்த யோசனையை வரவேற்றோ, எதிர்த்தோ கூட்டத்தில் ஒருவரும் கருத்து கூறாமல் போகவே, சிறிதரனுடைய கருத்தோடு அந்த யோசனை நின்று போயிற்று.
ஆயினும் அச்சமயத்தில் குறுக்கிட்ட துரைராஜசிங்கம் இப்பொறுப்பை சுமந்திரனிடமிருந்து பறிப்பது என்றால் சுமந்திரன் அப்பதவியில் இருந்து கீழிறக்கப்படுகின்றார் என்றும், மற்றொருவர் மேல் உயர்த்தப்படுகின்றார் என்றும் அர்த்தம் வரும், அவற்றையும் கவனத்தில் கொண்டு விடயங்களை தீர்மானியங்கள் என்று சொன்னார் என அறிய வந்தது.
கூட்டமைப்பு ஒற்றுமைக்காக செல்வத்துக்கு அந்த பதவியை விட்டுக் கொடுத்து, அவருக்காக அப்பணியை சம்பந்தனுக்கு ஆற்றியமை போல் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்று கட்சி எதிர்பார்க்குமானால் அதைச் செய்வதற்குத் தான் தயார் என்று கூறிய சுமந்திரன், ஆயினும் சம்பந்தனுக்காக அந்தப் பணியை செய்வதற்கும், வேறு ஆட்களுக்காக அவ்வேலையைத் தாம் செய்வதற்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு என்பதையும் சுட்டிக்காட்டினார் எனத் தெரிகிறது.
இதற்கிடையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அறியவந்தது.
தமிழரசுக் கட்சியின் வழக்கு விடயம் வரும் 19ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்திற்கு மீண்டும் வருகின்றது.
அது தொடர்பில் ஒத்த நிலைப்பாட்டை எதிராளிகள்அனைவரும் எடுப்பது குறித்த முடிவை மேற்கொள்வதற்கு நேற்று மாலை சுமந்திரன் உட்பட எதிராளிகளின் சட்டத்தரணிகள் ஒன்று கூடி பேசினர்.
சட்டத்தரணிகளின் இணக்கத்தை கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரத்தோடு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்காகவே ஞாயிற்றுக்கிழமை மத்திய குழு கூட்டம் முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது மத்திய குழுக் கூட்டம் ரத்தாகிவிட்டது. அடுத்த வழக்கு தவணைக்கு முன்னர் அது மீண்டும் கூடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியாயின் வழக்கு வரும் 19ஆம் திகதி எடுபட்ட பின்னர் மேலும் குறைந்தது ஒரு தவணைக்காவது தள்ளிப் போவது தவிர்க்க முடியாததாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
***
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மகளிர் இல்லம் தொடர்பான ஆளுநர் தரப்பின் மேம்போக்கான அறிக்கை வந்துவிட்டது.
அது தொடர்பில் காட்டமான சில விடயங்களை கவனிக்க வேண்டியுள்ளது. அவற்றை நாளைய பத்தியில் பார்ப்போம்.