Friday, October 9, 2026

இரகசியம் - பரகசியம் (10.05.2024)


டயானா கமகே எம்.பியின் பதவி நீக்கத்தை ஒட்டிய தீர்ப்பில் உயர் நீதிமன்றம் சில சாட்டையடிகளை நாசூக்காக வைத்திருக்கின்றது. அதனால் இது போன்ற விடயங்களில் இனிமேல் குற்றச்சாட்டுக்கள், முறைப்பாடுகள், புகார்கள் வந்தால் விட்டேத்தியாக - பொறுப்பைத் தட்டிக் கழித்து - காலத்தை இழுத்தடித்து - அதிகாரிகள் நடந்து கொள்வது சாத்தியமாகாது என்று சுட்டிக் காட்டப்படுகின்றது.

இந்தப் பின்புலத்தில் இந்தத் தீர்ப்பால் நமது அரசியல்வாதிகள் சிலருக்கு 'திருடனுக்குத் தேள் கொட்டிய நிலையாக' நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் சில வட்டாரங்களில் குசு குசுக்கப்படுகிறது.

அதில் இருவர் தமிழர்கள். ஒருவர் கனடாவில் இருந்து வந்து குதித்தவர். இன்னும் வெளியே தெரியாமல் கனடா பிரஜாவுரிமையைப் பேணுகின்றார் என்று கேள்வி. சட்டபூர்வமான ஆதாரங்களை வெளி ஆள்களினால் கனடா அரசிடமிருந்து பெற முடியாது என்ற தைரியத்தில் இவ்வளவு காலமும் காலத்தை ஓட்டி விட்டார் அவர் என்று கேள்வி. இனியும் அது தாக்குப் பிடிக்குமா என்பது தெரியவில்லை.

அடுத்தவர் நேரடியாக திடீரென லண்டனில் இருந்து வந்து குதித்தவர்.

மலிந்தால் விடயம் சந்திக்கு - சந்தைக்கு - வரும். அப்போது பார்த்துக் கொள்ளலாம்.

***

ஜனாதிபதித் தேர்தல் வரும் செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை தேர்தல்கள் ஆணைக் குழு விசேட அறிவிப்பாக நேற்று திடுதிப்பென வெளியிட்டிருக்கின்றது.

அரசமைப்பின்படி, இதுதான் - இந்த தினங்களுக்கு இடையில்தான் - ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற ஒழுங்கு இருப்பது அரசமைப்பைப் புரிந்த எல்லோருக்கும் ஏற்கனவே தெரியும். ஆணைக்குழு நேற்று அதை அறிவித்துத்தான் மக்களுக்கு இவ்விடயம் புதிதாகத் தெரிய வேண்டும் என்பது அல்ல.

இப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டிய கால எல்லை குறித்து நேரத்துடன் முன்னறிவித்தல் கொடுக்க வேண்டும் என்ற சட்டக் கடப்பாடு - பொறுப்பு - ஏதும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாது.

அரசமைப்பு ஏற்பாடுகளின்படி -

வரும் ஜூலை மாதம் அளவில், ஜனாதிபதி தேர்தல் திகதி, வேட்பு மனு ஏற்புத் திகதி ஆகியவற்றை தேர்தல் ஆனைக்குழு அறிவித்தால் போதும்.

அப்படி இருக்க, ஜனாதிபதித் தேர்தல் என்ன காலத்துக்குள் நடத்தப்பட வேண்டும் என்ற ஒரு திடீர் அறிவிப்பை ஆணைக்குழு வெளியிட்டிருக்கின்றது. அப்படி வெளியிட்டமை ஒன்றும் சட்டத்தவறு அல்ல. ஆயினும், தனக்கு பணிக்கப்படாத ஒரு விடயத்தை தன்பாட்டிலேயே தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்திருப்பதில் ஏதேனும் சூத்திரம் பொதிந்திருக்கும் என்று ஊகிக்கப்படுகின்றது.

'இப்படி ஒரு பெரிய தேர்தலுக்கு நாங்கள் தயாராகிறோம்,

அதை முற்கூட்டியே அறிவித்து விட்டோம், அதற்குள் பொதுத்தேர்தல் போன்ற ஒன்றையும் சேர்த்து நடத்தும் இக்கட்டை எங்களுக்குத் தந்து விடாதீர்கள்!' என்பது போன்ற தகவலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குச் சூசகமாகச் சொல்லும் செய்திதான் இந்த அறிவித்தலோ தெரியவில்லை.

கொஞ்ச நாள் செல்ல விடயம் தெளிவாகும். அப்போது பார்க்கலாம்.

you may also like