- by Editor
- 6 months ago
இரகசியம் - பரகசியம் (09.3.2026)
இலங்கை அரசியல் தலைவர்கள் மற்றும் படைகளின் தளபதிகள் வழமையாகப் பேசும் பேச்சு பெரும்பாலும் 'ஊருக்கடி உபதேசம், உனக்கு இல்லையடி' என்ற மாதிரித்தான் அமைந்திருக்கும்.
அதினின்றும் தாமும் வேறுபட்டவர் அல்லர் என்பதை முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷர் சரத் பொன்சேகா இப்போது தெளிவு படுத்தி இருக்கிறார்.
''எதிரி சரணடைந்தால் எவரும் அவரைச் சுடவே கூட முடியாது'' - என்று அவர் இப்போது கருத்து வெளியிட்டிருக்கிறார்.
ஈரானிய கப்பல் மாலுமிகளை இலங்கை மீட்டெடுத்தமை தொடர்பாக இலங்கை அரசை மெச்சம் விதத்தில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயங்களை சுட்டிக் காட்டி இருக்கிறார்.
''அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான பகுதியில் ஓர் அமெரிக்கக் கப்பல் இருந்திருந்தால் கூட, சர்வதேச சட்டத்தின்படி அவர்கள் ஈரானியப் படையினரைக் காப்பாற்றியிருக்க வேண்டும். அதுவே சர்வதேச நியதியாகும்.
''போர்க்களத்தில் எதிரணி சரணடைய முன்வந்தால் கூட, அவர்களைச் சுட்டுக்கொல்வதற்குச் சர்வதேச சட்டத்தில் இடமில்லை. அவ்வாறிருக்கையில், விபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றுவது கட்டாயமானதாகும்.'' - எனத் திருவாய்ந்தமளித்திருக்கின்றார் அவர்.
நல்லது. அவர் தளபதியாக இருந்த இலங்கை இராணுவம் யுத்தத்தின் இறுதி கட்டத்தில் அப்படி நடந்து கொண்டதா என்பதை அவர் தம் மனசாட்சியைத் தொட்டு வெளிப்படையாக பதில் அளிக்க வேண்டும்.
ராஜபக்ஷக்களின் தர்பாரின் கீழ் இராணுவத் தளபதியாகப் பணியாற்றிய அவர், பின்னர் ராஜபக்ஷக்களோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர்களை அம்பலப்படுத்துகிறேன் என்ற பெயரில் யுத்தத்தின் இறுதி கட்டத்தில் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை பகிரங்கமாக வெளியிட்டார். ஆயினும், பின்னர் அந்த விடயத்தில் இருந்து மெல்ல நழுவிக்கொண்டார்.
இப்போதும் கூட யுத்தத்தின் இறுதி கட்டத்தில் அவர் தலைமை வகித்த இராணுவம் உட்பட இலங்கைப் படைகள் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டன, சரணடையும் படையினர் தொடர்பான நியாயபூர்வங்களை பேசும் அடிப்படைத் தகுதி அவர் தலைமை வகித்த அந்தப் படைக்கும், அந்தப் படை இந்த விடயத்தில் நடந்து கொண்ட விதம் காரணமாக அவருக்கும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான்.
இப்போதும் கூட நாட்டின் உச்சச் சட்டங்கள், நியதிகள், நீதிகள் பற்றி அதிகம் பேசுகின்றனர். அவர்கள் யுத்தத்தின் இறுதி கட்டத்தில் தமது படைகள் எப்படி நடந்து கொண்டன என்பதை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கும் முயற்சிக்குப் பகிரங்க அழைப்பு விடுக்கும் துணிச்சல் உள்ளவரா என்று கேட்க விரும்புகின்றேன்.
ஈரான் விவகாரத்தில் நீதி,நியாயம் பிளக்கும் அவரும் அவர் போன்ற தென்னிலங்கை தலைவர்களும் தமிழர்களுக்கு எதிரான விடயத்தில் இந்த நீதி எங்கு போய்விட்டது என்பதை தங்கள் மனதில் நிறுத்தி வெளிப்படுத்த முன் வர வேண்டும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்திய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரின் அழைப்பை ஏற்று புதுடில்லி சென்றிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் 21 உறுப்பினர்களில் ஏழு பேர் தமிழர்கள். இன விகிதாசாரப்படி மூன்றில் ஒரு பங்கை தமிழர்கள் பெற்றிருக்கின்றனர்
இலங்கையிலிருந்து சென்றுள்ள 21 சட்டத்தரணிகளில் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே ஜனாதிபதி சட்டத்தரணி தகுதியுடையவர்.
இந்தக் குழுவினர் நாளை செவ்வாய்க்கிழமை புதுடில்லியில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அமர்வின் போது சட்டத்தரணிகள் அணியில் அமர்ந்து உச்சநீதிமன்ற விசாரணைகளைப் பார்வையிடுவர் எனத் தெரிகின்றது.
இந்திய சட்டத்தரணிகள் மட்டுமே இந்திய நீதிமன்றங்களில் பிரசன்னமாக முடியும் என்ற நிலையில் இலங்கைச் சட்டத்தரணைகளை இந்திய உச்ச நீதிமன்றத்தின் அமர்வின் போது சட்டத்தரணிகள் வரிசையில் பிரசன்னமாகி இருப்பதற்கு இந்தியப் பிரதம நீதியரசர் அழைப்பும் அனுமதியும் வழங்கியிருக்கிறார் என அறிய வந்தது.
நாளை அந்த அமர்வின் போது நடைபெறக்கூடிய விடயங்கள் பற்றிய செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன். அப்போது அது பற்றிய தகவல்களைத் தருவேன்.