Friday, October 9, 2026

இரகசியம் பரகசியம் (05.8.2024)


ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பிரிந்து, பெரும் எண்ணிக்கை யான எம்.பிக்கள் ஜனா திபதி ரணில் விக்கிரமசிங்கவின் பின்னால் அணிவகுத்துள்ளனர் என்று கூறப்படும் நிலையில் - ஆளுந்தரப்பு நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறப்படும் சூழலில் - ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதங்களே இருக்கும் நிலையில் - அதற்கிடையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த அரசை வீழ்த்தும் எண்ணம் ஏதும் இல்லை என்று மொட்டுக் கட்சியின் தலைவர்கள் கோடி காட்டி வருகையில் - மிக முக்கியமான கட்டத்தில் நாளை நாடாளுமன்றம் மீண்டும் கூடுகின்றது. மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தை மீள நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு வழி செய்யும் - எம்.ஏ. சுமந்திரனின் தனி நபர் சட்டமூலப் பிரேரணையான - மாகாண சபைகள் தேர்தல் சட்ட மூலம் நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பு விவாதத்துக்கு எடுக்கப்படுவதாக நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிகழ்ச்சி நிரலின்படி அதற்கு - அந்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு - அரசினால் ஆக முப்பது நிமிடங்கள் தான் வழங்கப்பட்டுள்ளன.

அந்த 30 நிமிடங்களில் தமது சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்ற சுமந்திரனுக்கு ஆக ஒரு பத்து நிமிடம் வழங்கப்பட்டால், அடுத்த 20 நிமிடங்களுக்குள் அதிக விவாதமின்றி அந்தச் சட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டு விடுமா என்ற கேள்வி எழுகின்றது. எல்லா தரப்புக்களும் சேர்ந்து ஏகமனதாக செயற்படுமானால் அந்த குறுகிய நேர இடைவெளியில் சட்டமூலத்தை நிறைவேற்றுவது சாத்தியமானதே.

ஏற்கனவே, இருக்கும் மாகாண சபை தேர்தல் சட்டத்தை மீளக் கொண்டு வந்து, மாகாண சபை தேர்தலை விரைந்து மீளவும் நடத்த வேண்டும் என்ற விடயத்தில் பெரும்பாலும் ஒரு நிலைப்பட்ட கருத்தமைவு அனைத்து கட்சிகளிடமும் காணப்படுகின்றது. அரசியல் நிலைப்பாடுகள் துறந்து, இந்தச் சட்ட மூலத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அரை மணி நேரத்தில் அந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றி விடயத்தை ஒப்பேற்றி விடலாம் எனக் கருதித்தான், அப்படி ஆக 30 நிமிட நேரம் மட்டுமே அந்த சட்டமூலத்திற்கு வழங்கப்பட்டதா என்றும் கேட்கப்படுகின்றது.

ஆளும் தரப்பு என்ன நிலைப்பாட்டில் இந்தச் சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்புக்கு ஆக 30 நிமிட நேரத்தை மட்டுமே ஒதுக்கியது என்ற கேள்விக்கு நாளை முற்பகல் பதில் தெரிந்து விடும். அதுவரை பொறுத்திருப்போம்.

*******

மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் ரணில் விக்கிரமசிங்கவின் பின்னால் அணி வகுத்தமையை அடுத்து, மொட்டுக் கட்சியின் மாவட்ட தலைவர்கள் பலரும் புதிதாக நியமிக்கப்படுகின்றார்கள். அந்த வரிசையில் முன்னர் எஸ்.எம்.சந்திரசேன தலைவராக இருந்த அநுராதபுரம் மாவட்டத்திற்கு நாமல் ராஜபகக்‌ஷ, தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் பொதுத்தேர்தலில் மொட்டுக் கட்சியின் அனுராதபுரம் பகுதி தலைமை வேட்பாளர் அவரே என்று மொட்டுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

you may also like