Saturday, October 10, 2026

இரகசியம் - பரகசியம் (05.06.2024)


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நரித் தந்திர அரசியல் விவகாரம் ஒன்று குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பிரிஸ் இப்போது புட்டுப்புட்டு வைத்திருக்கின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் 69 லட்சம் வாக்குகளை - 62 வீதமான வாக்காளர்களின் ஆதரவை - பெற்ற ஜனாதிபதி கூட தாம் பதவியிலிருந்த போது அனுபவித்த - பிரயோகித்த - அதிகாரங்களை விட அவரின் எஞ்சிய பதவிக் காலத்துக்குச் செயற்பட வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகமான அதிகாரங்களை அனுபவிக்கின்றார் என்று சுட்டிக் காட்டுகின்றார் பேராசிரியர்.

நிறைவேற்றதிகாரம் மூலம் தாம் கொண்டிருக்கும் அதிகாரங்களை விட, கடந்த ஐந்தாறு வருடங்களாக மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடத்தப்படாதமையால் அவற்றின் அதிகாரங்களையும், இப்போது ஒன்றரை வருடமாக உள்ளூராட்சித் தேர்தல்களை திட்டமிட்டு நடத்த விடாமல் தடுத்ததன் மூலம் அந்த அதிகாரங்களையும் அவர் கைப்பற்றி வைத்துத் தம் வசம் பேணிப் பிரயோகித்துக் கொண்டிருக்கிறார். உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை விடுவிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை உதாசீனப்படுத்தி, தேர்தலை நடத்த விடாமல் செய்து கொண்டு, உள்ளூராட்சி மன்ற நிர்வாகங்களையும் தமது வழிகாட்டுதல்களின் கீழ் கொண்டு வந்துள்ளார் அவர்.

இப்போது பொருளாதார மாற்றங்களுக்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அதன் மூலம் தற்போது பல்வேறு அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் போன்றவற்றின் கீழ் இயங்கும் பல முக்கிய பொருளாதார நிறுவனங்கள் மற்றும் கட்டமைப்புகளையும் நேரடியாக ஜனாதிபதியான தமது கட்டுப்பாட்டின் கீழ் மாற்றுவதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று பேராசிரியர் பீரிஸ் எச்சரிக்கின்றார்.

தோலிருக்க சுளை விழுங்கக் கூடிய அரசியல் நரித் தந்திரசாலி ரணில். அவர் இதுவும் செய்வார், இன்னமும் செய்வார். சட்டவாக்கல் துறையினர் எல்லோரும் அவரது இந்த நகர்வு குறித்து 'அலேர்ட்' ஆக இருப்பது நல்லது. 

you may also like