Saturday, October 10, 2026

இரகசியம் - பரகசியம் (04.11.2023)


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று மாலை 5:30 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரம் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தார். மாவை சேனாதிராஜா தமக்கு சாட்சியமாக தன்னுடன் கட்சியின் பொருளாளர் கனகசபாதியையும் கூட்டிச் சென்றிருந்தார் - வேலிக்கு ஓணான் சாட்சியம் போல என்று எண்ணியோ என்னவோ..!

கட்சியின் பெருந்தலைவர் இரா சம்பந்தன், கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, பொருளாளர் கனகசபாபதி எல்லோருமே கட்சியில் மூத்தவர்கள்தான். மூவருமே எண்பது வயது தாண்டியவர்கள். மூவரும் என்ன பேசி இருப்பார்கள், என்ன புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது தெரியவில்லை.

நாளை வவுனியாவில் கட்சியின் மத்திய குழுக் கூட்டம். இச்சந்திப்புத் தொடர்பில் மாவை சேனாதிராஜா அங்கு அவிழ்த்து விடும் கதைகளைப் பார்ப்போம்.

***

அரசு அதிகாரிகளின் - அதுவும் உயர் பொறுப்புகளில் இருக்கும் அரச அதிகாரிகளின் - பிரச்சினைகள் வெவ்வேறு வடிவானவை. சாம்பிளுக்கு ஒன்றைத் தரலாம் என்று நினைக்கிறேன்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அவர் அரசின் ஓர் உயர்ந்த நிலை அதிகாரி. அவரின் கீழ் பணியாற்றிய ஒரு பிரிவின் மூத்த பெண் அதிகாரி ஒரு சில தினங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றுச் சென்றார். இதற்கான பிரியாவிடை வைபவம் அந்தச் செயலகத்தில் நடந்தது.

அரச உயர் அதிகாரி அங்கு பேச வேண்டிய நிலைமை. அந்தப் பெண் அதிகாரியும் ஓய்வில் சென்று விட்டால் அந்தப் பிரிவை இனி எப்படி இயக்குவது என்று ஆதங்கம் - விசனம் - தலையிடி - அவருக்கு. அவரது அன்றைய உரையில் அது அப்படியே பிரதிபலித்தது. அந்தப் பிரிவை பெயர் குறிப்பிட்டு - சுட்டி - அவர் உரையாற்றினார்.

''எனது செயலகத்தின் இந்தப் பிரிவைப் தற்போது 'நட்'டுக் கழன்றவர்களையும் சில்லு கழன்றவர்களையும் வைத்துத்தான் இயக்க வேண்டிய அவலத்தில் நாம் (நான்) இருக்கிறோம். இந்தச் சீத்துவத்தில் நாங்கள் தங்களுக்கு முறையாகச் சேவையாற்றுவோம் என மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர். இது எப்படிச் சாத்தியம்?'' - என்று பெருமூச்சுடன் கூறினார் சிவனின் அந்த அழகு மகன்.

பாவம்... எத்தனை பிரச்சனைகளை இந்த அதிகாரிகள் சமாளிக்க வேண்டியுள்ளது...?

***

மொட்டு கட்சிக்கு ( ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு) நேற்று ஏழு வயது பூர்த்தியானது. இதனை ஒட்டி கொழும்பு பத்திரமுல்லவில் நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று மாலை விசேட நிகழ்வுகள் இடம் பெற்றன. கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்‌ஷ மற்றும் நாமல் ராஜபக்‌ஷ எம்.பி. உட்பட கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் அதிகமான பிக்குகள் பிரித் ஓதும் நிகழ்வில் பங்குபற்றினர். மகா சங்கத்தினருக்கு தானம் வழங்கும் நிகழ்வு இன்று இடம் பெறுகின்றது.

இந்தப் பிறந்தநாள் நிகழ்வுகளை அடுத்து, கட்சிக்கு வலுவூட்டும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட உள்ளன என்று கட்சி பிரமுகர் ஒருவர் நேற்றுத் தெரிவித்தார். 

you may also like