- by Editor
- 2 months ago
இரகசியம் - பரகசியம் (03.09.2024)
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசக் கிடைத்தது. ஏனைய சில பத்திரிகையாளர்களோடும் பின்னர் தனித்தும் அவருடன் உரையாடினேன்.
இடையில் யாழ்ப்பாணத்தில் கூட்ட மேடை ஒன்றிலிருந்த அவருக்கு நான்தான் ஒரு பிரேக்கிங் செய்தியைத் தொலைபேசி மூலம் சொன்னேன்.
''உங்களை ஆதரிக்கும் முடிவைச் சற்று முன்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு எடுத்து விட்டது. இன்னும் சற்று நேரத்தில் பத்திரிகையாளர் மாநாட்டில் அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நினைக்கிறேன்.'' - என்றேன் நான்.
''அப்படியா? மிக்க மகிழ்ச்சி!'' - என்று மகிழ்ந்து போன அவர் ''எதற்கும் ஒரு தடவை குறொஸ் செக் பண்ணி உறுதி செய்ய முடியுமா?'' - என்று உரிமையோடு கோரினார்.
''என் தகவல் வட்டாரங்கள் மிக நம்பகமானவை. இன்னும் சற்று நேரத்தில் ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸ் வரும். செய்தி உங்களுக்கு உறுதியாகும்'' - என்றேன் நான்.
முன்னதாக அவருடன் பேசிக் கொண்டிருந்த போது அரசியல் விடயங்களுக்கு அப்பால் இரண்டு வினாக்களை நேரடியாக அவரிடம் கேட்டேன். அவருக்கு மூக்கு முனை வரை கோபம் வந்தது. எனினும் தன்னைச் சற்று அடக்கிக் கொண்டு கௌரவமாகப் பதில் தந்தார். ஒரு மூத்த பத்திரிகையாளன் என்று என்னைப் பலரும் கருதும் நிலையில் அப்படியான கேள்வியை Blunt ஆக நான் அவரிடம் நேரடியாக கேட்டது நியாயமோ தெரியவில்லை. தமது பதிலின் இடையே அவை முட்டாள்தனமான கேள்விகள் என்று அவர் சொல்லாலும் குறிப்பாலும் உணர்த்தத் தவறவில்லை.
''நீங்கள் தமிழர்களுக்கு நியாயம் செய்வேன் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறுகின்றீர்கள். ஆனால் உங்களின் தந்தையார் அரசியலில் - அதிகாரத்தில் - உச்சத்துக்கு வந்த சமயத்தில் பக்கத்தில் இருந்த தமிழர் ஒருவரே குண்டுத் தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றார். அந்த கோபம் தமிழர்கள் மீது உங்களுக்கு இயல்பாகவே இருக்காதா? அத்தகைய தமிழர்களுக்கு நீங்கள் நியாயம் செய்வீர்களா என்ற சந்தேகம் தமிழர்கள் மத்தியில் மேலோட்டமாக இருக்கின்றதே...!'' - என்ற சாரப்பட என் கேள்வி அமைந்தது.
''முட்டாள்தனமான கேள்வி. ஒரு தமிழர் இழைத்த குற்றத்திற்காக முழு தமிழினம் மீதும் காழ்ப்புணர்வு கொள்ளும் அளவுக்கு விவேகம் அற்ற மனிதன் என்றா என்னை நினைத்துக் கொண்டீர்கள்? என் தந்தையார் மீண்டு வந்தால் கூட தமிழர்கள் மீது காழ்ப்புணர்வு கொள்ளவே மாட்டார். அவர் அரசியலில் மேலெழுந்து வருவதற்கு அவருக்குப் பக்கத்துணையாக இருந்தவர்கள் பஞ்சலிங்கங்களான ஐந்து சிரேஷ்ட தமிழ் அதிகாரிகள் என்றுதான் பலரும் கூறுவர். கொழும்பில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவில் தனிப்பெரும் தலைவராக உயர்ந்தவர் எனது தந்தையார். நீங்கள் கேட்கும் கேள்வியின் சாயலில் ஒரு சந்தேக எண்ணம் கூட எனக்கு என் மனதில் இல்லை. என் தந்தையை விட தமிழர்களின் நெஞ்சத்தை அதிகம் வெல்ல வேண்டும் என்பதுதான் எனது இலக்கு. எனது இந்தத் தேர்தல் வெற்றியின் பின் அந்தப் பெருமிதத்தை நீங்கள் ஒவ்வொருவரும் உணரச் செய்வேன். நான் உண்மையான பௌத்தன். புத்தர் கூறிய உண்மையான அன்பை - நேசிப்பை - அரவணைப்பை - நான் தமிழர்கள் தொடர்பில் நிறைவேற்றிக் காட்டுவேன்...!'' - என்று உறுதிப்படக் கூறினார் அவர்.
அந்தக் கருத்தை அவர் வெளியிட்ட போது அவர் முகத்தில் செய்து காட்டுவேன் என்ற அதீத உறுதி தெரிந்தது. நமது தந்தையாரின் மரணத்திற்கு தமிழினம் மீது வஞ்சக எண்ணம் அவரிடம் கிஞ்சித்தும் கிடையாது என்பதை அந்தத் தெளிவான பதிலும், என் கேள்வி மீதான அவரின் கோபமும் வெளிப்படுத்தி நின்றன.
புறப்படும் சமயம் எழுந்து நின்று பேசிக் கொண்டிருந்தோம். மிகவும் நட்புணர்வோடு - அந்நியோன்னியமாக - பகிடி விட்டுச் சிரித்தார். எங்களையும் சிரிக்கப் பண்ணினார். அதைச் சந்தர்ப்பமாக வைத்து நான் ஒரு கேள்வி கேட்டேன்.
''உங்களைப் போல பல தலைவர்களை சந்தித்து விட்டேன். ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும்போது உங்களுடன் நெருங்கிப் பழக முடிகின்றது. நீங்களும் உங்களுடன் நெருக்கமானவராக எங்களை - பத்திரிகையாளர்களை - அழைத்து, அரவணைத்து உரையாடுகின்றீர்கள். நாளைக்கு நீங்கள் ஜனாதிபதியானால் நாங்கள் இப்படி உங்களுடன் பழக முடியுமா? அவ்வளவு தூரம் இறங்கி வந்து ஊடாடுவீர்களா?'' - என்றேன் நான்.
''உங்களுக்கு என் தந்தையை நன்கு தெரியும். அவருடன் பழகி இருக்கிறீர்கள். நானும் அவர் போலவே அப்படியே நடப்பேன்'' - என்றவர், இக்கேள்விக்குத் தனது உணர்வை எப்படிப் பதிலாக வெளிப்படுத்துவது என்று ஒரு கணம் நினைத்தார். சடார் என தம் காலில் அணிந்திருந்த செருப்புகளை கழற்றிக் காட்டினார். ''இது சாதாரண தோல் செருப்பு. இதே ரகத்தில் - இதே போன்ற - செருப்பைத்தான் என் தந்தையார் எப்போதும் அணிவார். நானும் அதையே அணிகிறேன். அமைச்சராக இருந்த போதும், கட்சித் தலைவரான போதும், எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்ற போதும் அதையே அணிகிறேன. நாளை ஜனாதிபதியானாலும் அதையே அணிவேன். அந்தப் பதவி என்னை - என் பண்பியல்பை - மாற்றி விடாது. அதே பாணியில், அதே நெருக்கத்தில், உங்களுடன் பேசுவேன், பழகுவேன்'' - என்றார் மிக உறுதியாக. பதவி வந்தாலும் தன்னில் மாற்றம் இருக்காது என்பதை மிக அழுத்தமாக உறுதிப்படுத்திக் கூற அவர் முயன்றார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
கடைசியாக ஒரு கொசுறுத் தகவல்.
யாழ்ப்பாணத்தில் அங்கஜன் எம்.பி. இப்போது ரணிலுக்காக வேலை செய்கின்றார். அங்கஜனின் பழைய சகாக்களான அவரது சித்தப்பா ராஜனும் பிள்ளைகளும் அங்கதன் தரப்புடன் முரண்பட்டு நிற்கின்றமை ஊர் அறிந்த இரகசியம்.
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த சஜித் பிரேமதாஸ நேற்று முன்தினம் இரவு ராஜனின் இல்லத்துக்கு போய் அவர்களைச் சந்தித்து பேசினார். சஜித்தின் அணியில் முக்கிய இடம் ராஜன் தரப்புக்கு வழங்கப்படலாம் என சஜித்துடன் யாழ் வந்த அவர்கள் தரப்பு எம்.பி. ஒருவர் தகவல் தெரிவித்தார். மலிந்தால் விடயம் சந்தைக்கு வரும். அப்போது மேல் விவரம் தெரிய வரும். பார்ப்போம்.