Friday, October 9, 2026

இரகசியம் - பரகசியம் (03.03.2024)


வெளிநாட்டிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புலம்பெயர் ஆதரவாளரான இளைஞர் ஒருவர் அழைப்பு எடுத்தார்.

தமிழரசுக் கட்சியில் தமிழ்த் தேசியம் வென்றதாக ஆர்ப்பரிப்பவர்களில் அவரும் ஒருவர்.

இப்போது நீதிமன்ற நடவடிக்கையின் அணுகுமுறையால் வீட்டு சின்னம் முடக்கப்படலாம் என்று என் பத்தி எழுத்துக்களில் எச்சரிக்கப்பட்டிருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. எரிச்சலைத் தந்திருக்கும் போல.

''உதயசூரியனை சங்கரி முடக்கிய போது நம் கைவசம் வீட்டுச் சின்னம் இருந்தது. இப்போது வீட்டுச் சின்னம் முடக்கப்பட்டாலும் நாங்கள் குத்துவிளக்கிடம் போகத் தேவையில்லை. அவசரத்துக்கு எங்களிடம் இரண்டு சின்னங்கள் உண்டு.'' - என்று அவர் திமிர்த்தனமாக - துடுக்குத்தனமாக - பேசினார். நான் அவர் பாணியிலேயே பதில் கொடுத்தேன்.

''தம்பி... நீங்கள் சொல்லுவது நல்லது. நமது புலம்பெயர் மகா வர்த்தகப் பிரமுகர் இலங்கை அரசியலிலும் மூக்கை நுழைத்துள்ளார் என்பதை நானும் அறிவேன். அவர் இரண்டு அரசியல் கட்சிகளை விலைக்கு வாங்கியுள்ளார் என்றெல்லாம் பேச்சடிபடுவதும் எனக்குத் தெரியும். அதைத்தான் நீங்களும் குறிப்பிடுகின்றீர்கள் என்று நினைக்கிறேன். விட்டுச் சின்னம் முடக்கப்பட்டால் அந்தரம் ஆபத்திற்கு அவரின் கட்சியையும் சின்னத்தையும் பயன்படுத்தும் திட்டமோ அல்லது அவரது கட்சியிலும் சின்னத்திலும் தமிழரசைக் கொண்டு போய் மாட்டுவதற்காக இப்படி எகத்தாளமாக நீதிமன்றத்தில் விடயத்தை அணுகுகிறார்களோ யானறியேன்.

ஆனால் நீங்கள் கூறும் வர்த்தகப் புள்ளி இரண்டு கட்சிகளை வாங்கிய விடயத்தில் தேர்தல் ஆணையம் உஷாராகி, மூக்கை நுழைத்துக் குழப்பம் பண்ணுவதாக ஒரு பேச்சுடிபடுகின்றது. அந்தச் சின்னத்துக்கு அங்கீகாரம் பெறுவதற்காக வீட்டை முடக்குவதற்கு இணங்கிக் காய் நகர்த்தினால் வீடுமில்லாமல், வாசலும் இல்லாமல், நடுவீதியில் குந்த வேண்டி நேர்ந்தாலும் நேரலாம்.'' - என்றேன் நான்.

அவர் விள்ங்கியும் விளங்காதவர் போல ''அப்படியா...? '' என்று இழுத்தடித்துப் பதில் தந்தார்.

சம்பந்தப்பட்ட தரப்புகள் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பதற்காக இந்த உரையாடல் சமர்ப்பணம். 

you may also like