- by Editor
- 1 year ago
இரகசியம் - பரகசியம் (02.03.2024)
தமிழரசுக் கட்சித் திருவிழா போன்ற ஒன்று நமது சுகாதார அமைச்சிலும் நடக்கின்றது என்றார் நண்பர் ஒருவர்.
எனக்கு விளங்கவில்லை. என்ன விடயம் என்றேன். அவர் விளக்கிக் கூற விடயம் மலைப்பானது எனக்கு.
இரண்டு பூனைகளுக்கு இடையில் அப்பத்துக்குச் சண்டை வர, குரங்கு அதைப் பங்கிடும் சாக்கில் ஏப்பமிட்ட கதை நமக்குத் தெரியும்.
தமிழரசு கட்சியின் தலைமையை ஒட்டி சிறீதரன் - சுமந்திரன் அணிகளுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு நீதிமன்றம் வரை போக, விவகாரம் மாவைக்கு வாய்த்து விட்டது. தமது பத்து வருடத் தலைமைத் தர்பார் இன்னும் சில காலத்துக்குச் சிக்கலின்றி ஓடும் என்று அவர் மனப்பால் குடிக்கும் நிலைமை.
அதைத்தான் நம் நண்பர் இன்னொரு விடயத்துடன் ஒப்பிட்டார். கனகச்சிதமாகத் தமிழரசுக் கட்சி நாடகத்துடன் அதுவும் பொருந்திப் போனது.
மத்திய அரசின் கீழ் இருக்கும் யாழ் போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி. அதற்கு மேலதிகமாக வடக்கு மாகாண சபையின் கீழ்வரும் சுகாதார அமைச்சின் வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளராகவும் அவரை நியமித்தனர். மத்திய அரசின் அதிகாரியிடம் மாகாண சபையின் நிர்வாகத்தைக் கையளிப்பதா? இது பகிரப்பட்ட அதிகாரத்தை மத்திய அரசு மீளப் பறிக்கும் உத்தி என்றெல்லாம் குரல் எழுப்பப்பட்டது. சர்ச்சை கிளப்பப்பட்டது.
இதனால் வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் தெரிவுக்கு நேர்முகத் தேர்வு என்றார்கள் - தமிழரசுக் கட்சித் தலைவர் தேர்தல் மாதிரி.
பழைய பெரும்பான்மை இனத்தவர் ஒருபுறம், மன்னாரில் பணியாற்றும் நம்மவர் மறுபுறம் என்று நேர்முகத் தேர்வில் இழுபறி நேர்ந்தது - சுமா, சிறீ இழுபறி போல.
கடைசியில் நேரமுகத் தேர்வு இடம்பெற்று ஒருவர் தேர்வாகி விட்டார், இதோ நியமனம் என்றனர். சிறீதரன் தேர்வானது மாதிரிப் போலும்.
இத்தனை விடயங்களையும் இரகசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தவர் ஒரு பக்கத்தைக் கிள்ளிவிட அவர்கள் நேர்முகத் தேரவின் புள்ளியிடலில் ஒரு விடயத்திற்குக் குறைந்த புள்ளி வழங்கப்படுவதை ஏற்க முடியாது என வழக்குத் தாக்கல் செய்தனர்.
இந்த விடயம் வடக்கு மாகாணப் பணிப்பாளருக்கு மட்டுமானதல்ல. நாட்டின் ஒன்பது மாகாணப் பணிப்பாளர் நியமனத்துற்கும் பொருத்தமானது என்பதனால் அனைவரும் அதில மூழ்கி விட்டனர். இதனால் தற்போது வழக்குத் தீர்ப்பிற்காக சுகாதார அமைச்சுக் காத்திருக்கின்றது - தமிழரசு நீதிமன்ற முடிவுக்குக் காத்திருப்பது போல.
இங்கும் இடம்பெற்ற நேர்முகத் தேர்வு பிழை என ஏற்றுக்கொண்டால், மீண்டும் முதலிலிருந்து நேர்முகத் தேர்வு இடம்பெற வேண்டும். இடம்பெற்ற முறையை சரியென வாதிட்டால், தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
அதனால் தற்போதைய மாகாண சுகாதார பதில் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தியின் இருப்பு சில காலத்திற்கு அசைக்க முடியாது என்கின்ற நிலை வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் ஏற்பட்டு விட்டது. - மாவையின் கையில் தமிழரசு விழுந்த மாதிரி என்றார் அந்த நண்பர்.
எப்படி தமிழரசுக் கட்சியின் வழக்கிற்கு தீர்வு எட்டுவது கடினமோ, அதேபோன்றே தற்போது வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் நியமனம் தொடர்பான தாவாவுக்கும் தீர்வு எட்டுவதுதம் கடினம்தான்...!
அதனால், மாவையைப் போல டாக்டர் சத்தியமூர்த்தியின் காட்டிலும் மழைதான் போலும்...!