Friday, October 9, 2026

இரகசியம் - பரகசியம் (01.11.2024)


ஊழல், மோசடி, குளறுபடிகள் தொடர்பான நபர் ஒருவரை வடக்குடன் பெரிதும் தொடர்பு பட்ட ஒரு சபையின் தலைவராக ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்காவின் அரசு நியமித்தமையை ஒட்டி அந்த நபரின் குணாதிசயத்தை வெளிப்படுத்துவதற்காக அவர் தொடர்பில், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.குணபாலனின் அனுபவத்தை நேற்று இப்பத்தியில் விவரித்து இருந்தேன்.

அதை வாசித்து விட்டு நேற்று எனக்கு பலர் தொலைபேசி அழைப்புகள் எடுத்தனர். அவை பெரும்பாலும் அந்நபர் தொடர்பான பல்வேறு விடயங்கள் பற்றிய முறைப்பாடுகளாக இருந்தன. அவற்றையெல்லாம் விவரிப்பது என் வேலை அல்ல. அதனால் விட்டுவிட்டேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பி., ஐ.தே.கட்சி, சுயேச்சைக் குழு என்று பல தரப்புக்களுடன் தேர்தலில் நின்ற இந்த நபர், இப்போது தேசிய மக்கள் சக்தியின் பெயரை கெடுப்பதற்கு அதனோடு அணி சேர்ந்து இருக்கிறார் என்று எனக்கு நேற்று வந்த தொலைபேசித் தகவல்கள் விவரித்தன.

ஒரு நபர் குறித்து இவ்வளவு முறைப்பாடுகளா, அவற்றையெல்லாம் கவனிக்காமல் இந்த நியமனமா என்று எனக்குள் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

இதற்கிடையில் ஒரு விடயத்தை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றது ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு.

பனை அபிவிருத்திச் சபை நியமனம் தொடர்பிலேயே அந்த அமைப்புக் கேள்வி எழுப்பியுள்ளது.

தேர்தல் சட்டங்களுக்கு முரணான வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்திச் சபைக்கு மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், அக்டோபர் 29 அன்று, ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

அக்டோபர் 10 ஆம் திகதி அன்று பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பதவிக்கு செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை நியமிக்கப்பட்டமையோடு, அதைத் தொடர்ந்து 12 நாள்கள் இடைவெளியில் அவர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக விநாயகமூர்த்தி சகாதேவன், அக்டோபர் 22 அன்று அதே பதவிக்கு நியமிக்கப்பட்டார். மேலும், தேர்தல்கள் ஆணைக்குழு விதித்துள்ள தடைகளுக்கு மத்தியிலும் தலைவர்கள் மாற்றம் மற்றும் பல புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கு பொறுப்பான அமைச்சர் அனுமதி அளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

செப்டம்பர் 25 அன்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் மற்றும் தேர்தல் சட்டத்தில், குறிப்பாக அரச அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன் அனுமதி பெறாமல், தேர்தல் காலத்தில் அரச நிறுவனங்களில் எந்தவொரு ஆள்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் அல்லது இடமாற்றங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முக்கியமான தேர்தல் காலகட்டத்தில் சட்டத்தை மதிக்காத வகையில் அரசாங்கம் நடந்துகொள்வது கேள்விக்குரிய சூழ்நிலையை எழுப்புகிறது.

இவ்வாறான நியமனங்கள் மூலம், பொதுமக்களின் நம்பிக்கை பலவீனப்படுத்துவதுடன் தேர்தல் நடைமுறையின் நேர்மைக்கும், ஜனநாயக செயல்முறையின் நியாயத்தன்மையும் கேள்விக்குட்படுத்தப்படலாம். இது குறித்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் அமைப்புக் கோருகிறது.

பொது நிறுவனங்கள் மீதான அரசியல் பக்கச்சார்பு அல்லது தேவையற்ற செல்வாக்கின் சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக பொதுத் தேர்தல் முடியும் வரை பொது நிறுவனங்களில் இத்தகைய நியமனங்களை இடைநிறுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு மேலும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக்கொண்டு இருக்கும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனமானது இவ்வாறான நிலைமைகளை தொடர்ந்தும் கண்காணிப்பதோடு, பொது நிறுவனங்களில் நெறிமுறை மற்றும் சட்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது. - என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

you may also like