- by Editor
- 4 months ago
இன்று நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய (18) புதுப்பிக்கப்பட்ட வானிலை அறிக்கையின்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்கள் உள்ளிட்ட காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான அளவில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்பும் காணப்படுகிறது.
அநுராதபுர மாவட்டத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை உருவாகும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், மேலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை வேகமுடைய ஓரளவு பலத்த காற்று அவ்வப்போது வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக அதிகரிக்கும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.