Friday, October 9, 2026

இனி காத்திருப்பு இல்லை -அரசாங்கத்திற்கு வழங்கிய அவகாசம் இன்றுடன் நிறைவு


தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 48 மணி நேர கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த காலத்திற்குள் அரசாங்கம் எவ்வித சாதகமான பதிலும் வழங்காத பட்சத்தில், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இன்று நிறைவேற்றுக் குழு கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜயசிங்க தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், நியாயமான கோரிக்கைகளையே முன்வைத்து வருவதாகவும் கூறினார். வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் தீர்வுகளை கண்டறியும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே சங்கம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், அரசாங்கம் தேவையான நெகிழ்வுத்தன்மையுடன் இந்த பிரச்சினையைத் தீர்க்கத் தயாராக இல்லை என்றும், இதனைத் தீர்ப்பதற்குத் தலையிடுமாறு கோரி மத்திய செயற்குழு சுகாதார அமைச்சருக்கு 48 மணி நேர அவகாசம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். இன்றுடன் அந்த கால அவகாசம் முடிவடைவதாகவும் கூறினார்.

குறித்த காலப்பகுதிக்குள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், தேவையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மத்திய செயற்குழுவால் நிறைவேற்றுக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நாட்டிற்கு தெளிவுபடுத்தப்படும் என்றும் வைத்தியர் சமில் விஜயசிங்க தெரிவித்தார்.

you may also like