Wednesday, October 7, 2026

இந்திய அணியை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி!


தென்னாபிரிக்கா, இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற தென் தென்னாபிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

தென்னாபிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது.

2ஆம் நாள் இறுதியில், தென்னாபிரிக்க அணி 66 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

டீன் எல்கர் 140 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் கலத்தில் இருந்தார்.

இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில் நேற்று(28) 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது.

யான்சன் - எல்கர் ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக விளையாடினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யான்சன் அரை சதம் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து ஆடிய டீன் எல்கர் 185 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதன் காரணமாக தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸ்-இல் சகல விக்கெட்டுகளையும் இழந்தது 408 ஓட்டங்களை குவித்தது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 163 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.

2ஆவது இன்னிங்சில் இந்திய அணியின் துவக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ஓட்டங்களிலும், கேப்டன் ரோகித் சர்மா ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய சுப்மன் கில் 26 ஓட்டங்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபுறம் விராட் கோலி நிலைத்து நின்று பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

எனினும், இந்திய அணி 131 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் தென்னாபிரிக்க அணி இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா சார்பில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 76 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

தென்னாபிரிக்கா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பர்கர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், யென்சென் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


you may also like