Sunday, October 11, 2026

ஆரம்பத்தில் சந்தேகம்; இனிமேல் ஒத்துழைப்பு: ஹக்கீம் தெரிவிப்பு


"அரசியல் தீர்வுக்கான உலகத் தமிழர் பேரவையின் முயற்சியை ஆரம்பத்தில் நானும் சந்தேகத்துடனே பார்த்தேன். இருந்தாலும் அவர்களைச் சந்தித்துக் கதைத்த பிற்பாடும், அவர்களுக்கு இன்று பல இடங்களில் இருந்தும் கிடைக்கின்ற அவர்களின் வேலைத்திட்டத்துக்கான ஆதரவும், ஆசீர்வாதமும் எங்களையும் சிந்திக்கத் தூண்டியுள்ளது."

- இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியை உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் நேற்று நேரில் சந்தித்து இன நல்லிணக்கத்துக்கான இமயமலைப் பிரகடனத்தைக் கையளித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில் ரவூப் ஹக்கீம் எம்.பியும் கலந்துகொண்டார். சந்திப்பின் நிறைவில் ஊடகங்களிடம் அவர் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வைத் தேடி இந்தக் காலகட்டத்தில் உலகத் தமிழர் பேரவையினர் முன்னெடுக்கும் இப்படியான புதிய முயற்சியை நாங்கள் வரவேற்கின்றோம். இது வெற்றியடைவதற்கான உதவி, ஒத்தாசைகளை எங்களால் இயன்ற சந்தர்ப்பங்களில் வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றோம்." - என்றார்.

you may also like