Thursday, October 8, 2026

ஆட்டிசம், விசேட தேவையுடைய பிள்ளைகளை இணைத்து புதிய கல்வித் திட்டம்


விசேட தேவையுடைய பிள்ளைகள், ஆட்டிசம் மற்றும் பிற நரம்பியல் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகள், சாதாரண முன்பள்ளி மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்கும் வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் புதிய வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், விசேட தேவையுடைய பிள்ளைகளை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி தனித்தனியாகக் கற்பிக்கும் பழைய நடைமுறையிலிருந்து விலக அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறினார்.

இந்த வேலைத்திட்டம் சமூக சேவைத் திணைக்களத்துடன் இணைந்து ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளுடன் கூடிய செயற்பாட்டு அடிப்படையிலான கல்வி மற்றும் நடத்தை மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், அவர்களை சாதாரண மாணவர்களுடன் இணைந்து வளரச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர் விளக்கினார்.

மேலும், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் முதல் கட்டமாக, விசேட தேவையுடைய பிள்ளைகளை கையாளும் முறைகள் தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த முயற்சிக்கு தனியார் துறையில் இயங்கும் பல முன்னணி விசேட கல்வி மற்றும் பராமரிப்பு நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் தேசியக் கல்வி முறைமையில் ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வியைப் பெறும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான வாய்ப்புகள் தற்போது குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்காலத்தில் அவர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யக்கூடிய உள்ளடக்கமான முன்பள்ளி கல்வி முறைமையை நாடு முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தினார்.

you may also like