Friday, October 9, 2026

ஆசிய நாடுகளுக்கு உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம்


நீடித்த அமெரிக்கா - ஈரான் மோதல் உலகளாவிய உர விநியோகத்தை பாதித்தால், ஆசிய நாடுகள் கடுமையான உணவுப் பணவீக்க அபாயங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எச்சரித்துள்ளது.

உர விநியோகம் குறைவதும், அதன் விலைகள் அதிகரிப்பதும் விவசாயிகளின் உற்பத்திச் செலவுகளை உயர்த்தி, பயிரிடுதலைக் குறைக்கக்கூடும். இதன் விளைவாக, 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வளைகுடா பிராந்தியம் மற்றும் சீனா போன்ற முக்கிய உர விநியோகஸ்தர்களிடமிருந்து ஏற்படக்கூடிய விநியோகத் தடைகள், மேலும் உயர்ந்து வரும் எரிசக்தி விலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து சிக்கல்கள் ஆகியவை இந்த நிலையை மோசமாக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைட்ரஜன் அடிப்படையிலான யூரியாவின் விலை ஏற்கனவே ஒரு டன்னுக்கு சுமார் 700 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாகவும், இது மோதலுக்கு முன்பிருந்த 465 டாலருடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆசியாவின் பல நாடுகள் உள்நாட்டு உணவு உற்பத்தியை அதிகமாகச் சார்ந்துள்ளதால், இத்தகைய உர விநியோக இடையூறுகள் நேரடியாக உற்பத்தியை பாதிக்கக்கூடும். அதேவேளை, இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் உணவு இறக்குமதியிலும் பெரிதும் சார்ந்துள்ளன என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், நீடித்த மோதலும் உயர்ந்த எண்ணெய் விலைகளும் இணைந்தால், ஆசியாவில் கோடிக்கணக்கான மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை சந்திக்க நேரிடலாம் என உலக உணவுத் திட்டமும் எச்சரித்துள்ளது.

உணவு மற்றும் உர விலைகளை கட்டுப்படுத்த அரசுகள் மானியங்களை வழங்க வேண்டிய சூழல் உருவாகலாம். ஆனால் இது அரசுகளின் நிதிச் சுமையை அதிகரித்து, சமூக மற்றும் பொருளாதார அபாயங்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வலியுறுத்தியுள்ளது.

you may also like