Wednesday, October 7, 2026

அரசு பங்களாக்கள் குறித்து பரவும் வதந்திகளுக்கு பிரதமர் முற்றுப்புள்ளி


ஜனாதிபதி மாளிகை மற்றும் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ பங்களாக்களை பயன்படுத்தாமல் இருப்பது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அரசியல் கொள்கைகளில் ஒன்றாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயன்பாட்டில் இல்லாத இந்தக் கட்டிடங்கள் சிதைவடையாமல் பாதுகாக்கப்பட்டு, பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்துவதற்கான விசேட திட்டம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இவ்வாறான அனைத்து கட்டிடங்களையும் வர்த்தக அல்லது பிற பொதுப் பயன்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சில உத்தியோகபூர்வ பங்களாக்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், சட்ட நடைமுறைகளின் ஊடாக அவற்றை உரிய முறையில் கையாள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

இதனிடையே, அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்கள் அல்லது அரசு பங்களாக்களில் வசித்து வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை பிரதமர் மறுத்தார்.

தற்போதைய அமைச்சரவையில் உள்ள எந்தவொரு அமைச்சரும் உத்தியோகபூர்வ இல்லங்களில் வசிக்கவில்லை என்றும், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாடிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் மட்டுமே தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் திட்டமிட்ட வகையில் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார். மேலும், சமூக ஊடகங்களில் வெளியாகும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தவறான கருத்துகளை பாராளுமன்றத்தில் விவாதிப்பது பொருத்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

you may also like