Saturday, October 10, 2026

அரசியல் நோக்கங்களுக்காக இன, மத உணர்வுகளைத் தூண்டுவதாக குற்றச்சாட்டு


இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்றில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளையும் மோதல்களையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதன் பின்னணியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான பல்வேறு சக்திகள் இருக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள், யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பரப்புபவர்கள் உள்ளிட்ட சில தரப்பினர், தங்களது அரசியல் அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காக மக்களைப் பயன்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக இன மற்றும் மத அடிப்படையிலான தூண்டுதல்களுக்கு மக்கள் பலியாகக் கூடாது என வலியுறுத்திய கவீந்திரன் கோடீஸ்வரன், தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த காலங்களிலும் இன முரண்பாடுகள் மற்றும் அசம்பாவிதங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டையும் மக்களையும் பாதுகாக்க அனைத்து சமூகங்களும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.

you may also like