Saturday, October 10, 2026

அரசின் 600 புதிய பேருந்து திட்டத்திற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு


இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) 600 புதிய பேருந்துகளை இணைக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை தனியார் பேருந்துத் துறையை மேலும் பாதிக்கும் "தேசியக் குற்றம்" எனக் குறிப்பிட்டுள்ள சங்கம், புதிய பேருந்துகளை இணைப்பதன் மூலம் அரசுப் போக்குவரத்து சேவையின் நிதி மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் தீர்க்கப்படுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு புதிய பேருந்துகள் வாங்கப்படுவதில் எதிர்ப்பு இல்லை என்றாலும், முறையான சாத்தியக்கூறு ஆய்வு இன்றி அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தனியார் போக்குவரத்து துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போதும் பொதுப் போக்குவரத்தில் பெரும்பாலான பயணிகளுக்கு சேவை வழங்குவது தனியார் பேருந்துகளே என்பதால், அரசுப் பேருந்து சேவையை விரிவுபடுத்தும் முன் அதன் விளைவுகள் குறித்து முழுமையான மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இலங்கை போக்குவரத்து சபை நாளொன்றுக்கு சுமார் 20 மில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்குப் பதிலாக, அரசுப் போக்குவரத்து சேவையில் நிலவும் செயல்திறன் குறைபாடுகளை முதலில் சரிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அத்துடன், அரசுப் பேருந்து சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் தமது சங்கம் பரிசீலித்து வருவதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

you may also like