Saturday, October 10, 2026

அமெரிக்காவை உறைய வைத்த பனிப்புயல் - இலட்சக்கணக்கான வீடுகள் இருளில்


அமெரிக்கா முழுவதும் வீசி வரும் பெரும் பனிப்புயல் காரணமாக, இலட்சக்கணக்கான வீடுகளில் மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதுடன், 10,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பல பகுதிகளில் வீதிகள் பனியால் மூடப்பட்டுள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

டெக்சாஸ் மாநிலத்திலிருந்து நியூ இங்கிலாந்து வரை பனி, பனிக்கட்டி மற்றும் உறைபனி மழை ஆகியவை “உயிருக்கு ஆபத்தான” சூழ்நிலைகளை உருவாக்கி வருவதாகவும், இந்த நிலைமை பல நாட்கள் நீடிக்கக்கூடும் எனவும் அமெரிக்க தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது.

லூசியானா மாநிலத்தில் குறைந்தது இரண்டு பேர் தாழ்வெப்பநிலை காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், இந்த மரணங்கள் பனிப்புயலுடன் தொடர்புடையவை என மாநில சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதேபோன்று, டெக்சாஸ் மாநிலத்திலும் மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

நேற்று (25) பிற்பகல் நிலவரப்படி, 10 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், நாடு முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் கூறுகின்றன.

பரவலாக ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழை காரணமாக, அமெரிக்க மக்கள் தொகையின் பாதிக்கும் மேற்பட்டவர்களான சுமார் 180 மில்லியன் பேர் பாதிக்கப்படலாம் என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

you may also like