Sunday, October 4, 2026

அபுதாபி டி10 லீக் - 8 இலங்கை வீரர்கள் 5 அணிகளுக்கு தேர்வு


இந்த வாரம் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தைத் தொடர்ந்து, 2026 அபுதாபி டி10 லீக்கில் ஐந்து அணிகளுக்காக எட்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் இலங்கை அணித் தலைவர் தசுன் ஷனகா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஈஷான் மலிங்கா ஆகியோர் யாஸ் லயன்ஸ் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர, சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்ஷன மற்றும் சகலதுறை வீரர் ஜனித் லியனகே ஆகியோர் ராயல் டெசர்ட் சாம்பியன்ஸ் அணியில் இணைந்துள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா யுஏஇ புல்ஸ் அணிக்காகவும், துனித் வெல்லலகே அரேபியன் ஏசஸ் அணிக்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா, எமிரேட்ஸ் ஈகிள்ஸ் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேர்வு செய்யப்பட்ட இலங்கை வீரர்கள்

யாஸ் லயன்ஸ்: தசுன் ஷனகா, ஈஷான் மலிங்கா

ராயல் டெசர்ட் சாம்பியன்ஸ்: துஷ்மந்த சமீர, மகீஷ் தீக்ஷன, ஜனித் லியனகே

யுஏஇ புல்ஸ்: நுவான் துஷாரா

அரேபியன் ஏசஸ்: துனித் வெல்லலகே

எமிரேட்ஸ் ஈகிள்ஸ்: குசல் பெரேரா

இதனிடையே, இலங்கையில் பிறந்த வேகப்பந்து வீச்சாளர் அம்ஷி டி சில்வாவும் அரேபியன் ஏசஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும், அவர் தற்போது அமெரிக்காவில் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர்ந்து வருகிறார்.

காலியில் பிறந்த அம்ஷி டி சில்வா, அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்னர் இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் ‘ஏ’ அணிகளில் விளையாடியுள்ளார்.

இந்த ஆண்டு மேஜர் லீக் கிரிக்கெட்டில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர், எதிர்காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அமெரிக்க அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான தகுதியைப் பெறும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

2026 அபுதாபி டி10 லீக் போட்டிகள் நவம்பர் 7ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

you may also like