- by Editor
- 8 months ago
அனோஜனின் மரண தண்டனை இரத்து செய்யப்பட்டதை வரவேற்ற சாணக்கியன்
-
- by Editor,
- 8 hours ago
- in இலங்கை செய்திகள்
சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வழக்கில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி அனோஜனின் குடும்பத்தினருக்கும், அவருக்காகத் தொடர்ச்சியாகப் பாடுபட்ட அனைவருக்கும் பெரும் ஆறுதலையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நம்பிக்கையளிக்கும் முன்னேற்றமானது, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், இராஜதந்திரப் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், அரசியல் மற்றும் மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அக்கறையுள்ள பொதுமக்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியையும் ஒற்றுமையையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தச் சாதகமான முன்னேற்றத்துடன் முயற்சிகள் முடிவடையவில்லை எனச் சுட்டிக்காட்டிய இரா. சாணக்கியன், தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, சிவராசா அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணையும் நாளிலேயே இந்த முயற்சிகள் முழுமை பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைவாக, அனோஜனை இயன்றளவு விரைவாகப் பாதுகாப்பாக இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்காக இலங்கை மற்றும் சவூதி அரேபிய அதிகாரிகள் தங்களுக்கிடையிலான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் எனத் தாம் மனப்பூர்வமாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டு முயற்சிக்குப் பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் தனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொண்ட இரா. சாணக்கியன், அவர்களின் அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் ஒற்றுமை அளப்பரியவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அனோஜனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள இந்தச் சாதகமான முன்னேற்றத்தை நன்றியுணர்வுடனும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும் வரவேற்பதாகத் தெரிவித்த அவர், சிவராசா அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்குத் திரும்பி, தனது அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணையும் நாளே உண்மையாகக் கொண்டாடப்பட வேண்டிய நாளாகும் என மேலும் வலியுறுத்தியுள்ளார்.