- by Editor
- 8 months ago
அனுராதபுர போராட்டத்தை எவராலும் தடுக்க முடியாது - இந்திக அனுருத்த
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
அனுராதபுரத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணியைத் தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும், அனுராதபுரத்தின் ஏதேனும் ஓர் இடத்தில் இந்த போராட்டத்தை நடத்துவதை எவராலும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிராமங்கள் மற்றும் நகரங்களில் வாழும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குரலாகவே அனுராதபுர போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அனுராதபுர மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உரம் கிடைக்காத நிலை காணப்படுவதுடன், வறட்சியான காலநிலை காரணமாக மக்கள் பல்வேறு துயரங்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ‘சல் காது’ அரங்கத்தை போராட்டத்திற்காக கோரிய போதிலும், சட்டதிட்டங்களை காரணம் காட்டி அதனை வழங்க அரசாங்கம் மறுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் வளர்ச்சி தொடர்பில் அரசாங்கத்துக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தங்களை தினமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து அடக்குமுறைகளை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும் இந்திக அனுருத்த குற்றஞ்சாட்டினார்.
“அரங்கம் மறுக்கப்பட்டாலும், அனுராதபுரத்தின் ஏதேனும் ஓர் இடத்தில் போராட்டம் நிச்சயமாக நடைபெறும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பிலும் கருத்து
22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில், இது நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள கருத்துக்கும் இந்திக அனுருத்த ஆதரவு தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பது தொடர்பில் மக்களுக்கு ஆட்சேபனை இல்லை எனக் குறிப்பிட்ட அவர், நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் நிலையில், குறுக்கு வழியில் அரசாங்கம் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பதையே மக்கள் எதிர்ப்பதாக தெரிவித்தார்.
நாட்டின் உயரிய நீதித்துறைக்கும் நீதிபதிகளுக்கும் களங்கம் ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.