Thursday, October 8, 2026

இரகசியம் - பரகசியம் (20.01.2023)


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை திருகோணமலையில். அதற்கு முன்னர் கட்சியின் மத்திய குழு இன்று அங்கு கூடுகின்றது. நாளைய தேர்தல் தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகள் இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தத் தேர்தலை ஒட்டி கட்சிக்கு வெளியில் பலத்த சண்டப் பிரசண்டம் தாராளம். அது தப்பில்லை. தமிழர்களின் வரலாற்றுப் பெருமைமிக்க கட்சி அது என்பதால் ஆதரவாளர்கள், பொதுமக்கள் மத்தியில் இழுபறி இருக்கும். அது தவிர்க்க முடியாததுதான்.

ஆனால் கட்சி பிரமுகர்கள் நாகரிகம் பேண வேண்டும். அது தவறியிருப்பது கண்டனத்துக்குரியது. தலைமைக்கு உட்கட்சித் தேர்தல் நடப்பது கட்சியின் ஜனநாயகப் பண்புகளை வலுப்படுத்தும் என்று பிரதான வேட்பாளர்கள் இருவரும் - சிறிதரனும் சுமந்திரனும் - கூறி வருகின்றார்கள். அது உண்மைதான்.

உட்கட்சித் தேர்தல் கட்சிக்குரிய ஜனநாயக மாண்புகளுடனும் உரிய பண்புகளுடனும் நடத்தப்படுமானால் அந்த முறைமை கட்சியை வலிமைப்படுத்தும் என்பது உண்மைதான்.

பிரதான வேட்பாளர்கள் இருவரும் அந்தப் பண்புகளை மதித்துத்தான் நடந்து வருகின்றனர். இருவருமே கட்சியின் தலைவர் தேர்வில் வாக்களிக்கப் போகும் பொதுக்குழு உறுப்பினர்களைச் சந்தித்து ஆதரவைக் கோரி வருகின்றனர். அதுதான் முறைமை. அது சரியே. அதிலும் கூட பெரும்பாலும் நாகரிகம் பேணி வருகின்றனர். தங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை கூறுகின்றார்கள். எதிர்த் தரப்புக் குறித்து மோசமான விமர்சனங்களுக்கு இறங்கவில்லை. தலைவர் தேர்தல் முடிந்த பின்னர் ஒரு கட்சிக்குள் ஒன்றாகப் பயணிக்க வேண்டிய யதார்த்தம் புரிந்தவர்கள் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இந்தத் தேர்தலில் டம்மி வேட்பாளராக இறங்கிய சீனித்தம்பி யோகேஸ்வரன் அந்த நாணயத்தை - பண்பை - தவறவிட்டு சின்னத்தனமாக நடந்து கொண்டுள்ளார்.

அதன் மூலம் அவர் யாருக்காக டம்மி வேட்பாளராக இறங்கினாரோ - அல்லது அவரை யார் டம்மி வேட்பாளராக இறக்கினாரோ - அவரையும் சின்னத்தனமானவராக்கிவிட்டார் என்பதுதான் உண்மை.

'சுமந்திரன் தலைவராக வந்தால் தமிழ்த் தேசியம் அழிவது உறுதி' என்று தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாள் இருக்கையில் யாழ்ப்பாணத்துக்கு வந்து, பகிரங்கமாக ஊடகவியலாளர் மாநாடு நடத்தி, அவர் அறிவித்திருப்பது அவர் யாரை ஆதரிக்கின்றாரோ அவருக்குத்தான் இழுக்கு.

இதில் இரண்டு விடயங்கள்.

முதலாவது - இந்த விவகாரத்தில் தமிழரசுக்குள் இன்னும் பலருக்குப் பட்டறிவு பட்டுத்தெளிந்தும் வரவில்லை போலும். கடந்த பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இப்படி இதே போன்ற தமிழ்த் தேசியக் கருத்தியலுடன் கட்சிக்குள் இருந்து சுமந்திரனுக்கு எதிராகப் பிரச்சாரப் பீரங்கிகள் புறப்பட்டு, கடைசியில் என்னவானார்கள்? தங்களுக்கு அதுவரையில் இருந்த பதவியை பொதுமக்கள் பிடுங்கிக் கொண்டமையைத்தான் அவர்கள் பிரதிபலனாக - பரிசாக - இதே போன்ற ஒரு தேர்தலின் பெறுபேறாகக் கண்டார்கள்.

பொதுமக்களிடம் அவர்கள் படித்த அதே பாடத்தை, சீனித்தம்பி யோகேஸ்வரன் அணியும் தமிழரசுப் பொதுக்குழு உறுப்பினர்களிடம் படிக்க நேர்ந்தாலும் நேரும்.

அடுத்தது - இப்படிக் கூறிய சீனித்தம்பி யோகேஸ்வரனும் அவரது கூட்டணியும், தப்பித் தவறி சுமந்திரன் பொதுக்குழு உறுப்பினர்களால் தமது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் அதற்குப் பின் எந்த முகத்துடன் கட்சிக்குள் இருந்து இயங்குவர்? அண்ணா தி.மு.க. மாதிரி 'அண்ணா தமிழரசுக் கட்சி' தொடங்க வேண்டியதுதான். (அவர்கள் பெரும்பாலும் தம்பி பிரபாகரனின் வாரிசுகள் தாங்களே என்று பம்மாத்து நடிப்புக் காட்டுவதால் 'அண்ணா தமிழரசு' அல்ல 'தம்பி தமிழரசுக் கட்சி' தொடங்கினால் பொருத்தமாக இருக்கும்.)

சீனித்தம்பி யோகேஸ்வரனின் சொந்த இடமான மட்டக்களப்பில் கருணா தனது கட்சியின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து, தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை பற்றிப் பேசியிருக்கின்றார். அதை ஒட்டிய விமர்சனங்கள்தான் இப்போது ஊடகங்களில் அதிகம் வருகின்றன.

கருணாவை 'எட்டப்பன்', 'காக்கை வன்னியன்' என்று ஒப்பீடுகள் தாராளமாக நடக்கின்றன.

'சுமந்திரன் தலைவராக வந்தால் தமிழ்த் தேசியம் அழிவது உறுதி!' என்று தமிழரசுக் கட்சியினருக்கு அரசியல் பாடம் போதிக்கும் மாமேதை சீனித்தம்பி யோகேஸ்வரன், தானைத் தலைவன் கருணாவை வரவேற்று மாலை அணிவித்து அரசியல் செய்து, பிள்ளையானுடன் சேர்ந்து கோவில் வழிபாடு நடத்தி தமிழ்த் தேசியத்தை வளர்க்கும் காட்சிகள் அடங்கிய படங்களை மட்டக்களப்பில் இருந்து சில நண்பர்கள் அனுப்பி இருந்தனர். அதை இங்கு, இச்சமயத்தில் இடம் பெற செய்வது பொருத்தம் என்று நினைக்கிறேன்.

அப்படி கருணாவுக்கு மாலை அணிவித்து அரசியல் செய்வது தப்பில்லை. பிள்ளையானுடன் சேர்ந்து பிள்ளையாரை வழிபடுவதும் தப்பில்லை. அதையெல்லாம் செய்து கொண்டு, சுமந்திரன் தமிழரசுத் தலைவரானால் தமிழ்த் தேசியம் அழிந்து விடும் என்று 'தேசியக் கயிறு' விடுவதுதான் தப்பு. அதுவும் உள்கட்சி தேர்தல் விடயத்தில் இப்படிப் பொதுமேடை ஏறி , கட்சியை நாறடிப்பது பெரும் தப்பு.

நாளைக்கு பின்னர் கட்சித் தலைமையை ஏற்கப் போகின்றவர், சீனித்தம்பி யோகேஸ்வரனின் இந்த சின்னத்தனம் குறித்து எத்தகைய பிரதிபலிப்பைக் காட்டப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

சம்பந்தனும் மாவையும் தமது தலைமைத்துவத்தின் போது கோட்டை விட்ட விடயம் கட்சியின் கட்டுக்கோப்பு, ஒழுங்கைப் பேணத் தவறியமைதான். சீனித்தம்பி யோகேஸ்வரனின் நடத்தை விடயத்தில் - அவரின் பகிரங்கக் கருத்து வெளிப்பாட்டு நடவடிக்கையையே - கட்சிக் கட்டுக்கோப்பு மற்றும் ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கான முதல் அமிலச் சோதனையாக புதிய தலைவர் பயன்படுத்தினால் கூட நல்லது.

புதிதாகத் தலைவராகத் தெரிவாகின்றவரும் மாவையர் மாதிரி கட்சித் தலைமையை வகித்து, அதைத் தலைவராக நடத்துவதை விடுத்து, வெறும் போராட்ட முழக்கங்களோடு அடங்கி விட்டால், தமிழரசுக்குப் பாடை கட்ட வேண்டியதுதான்...! 

you may also like