Friday, October 9, 2026

அடுத்த கட்ட போருக்கு தயாராகிறோம்; இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு


பாலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அடுத்த கட்ட போருக்கு தயாராகிறோம் என்று இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே 19 ஆவது நாளாக போர் நீடித்தது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் சுமார் 400 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இதில் ஒரே நாளில் 700 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காசா பகுதியில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 5,000-ஐ தாண்டியுள்ளது.

இதனிடையே ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலின் வடக்கு பகுதி எல்லையை குறிவைத்து தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அந்த எல்லைப் பகுதிகளிலும் சண்டை தீவிரமடைந்துள்ளது.

இந்த சூழலில் இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் நேற்று கருத்து தெரிவிக்கையில்,

பாலஸ்தீனத்தின் காசா பகுதிகளில் ஹமாஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறோம். எங்களை பொறுத்தவரை ஹமாஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்க வேண்டும்.

காசா பகுதி ஆட்சி நிர்வாகத்தில் இருந்து அவர்களை முழுமையாக நீக்க வேண்டும். அடுத்த கட்ட போருக்கு தயாராகி வருகிறோம். இதன்படி காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

you may also like