Friday, October 9, 2026

அக்குரேகொட இரட்டைக்கொலை - நீதிக்காக சட்டத்தரணிகள் வீதியில்


அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் இன்று (16) எதிர்ப்புப் பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

இப்படுகொலை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று (15) மாலை அதன் அனைத்து உறுப்பினர்களையும் கொழும்புக்கு அழைத்திருந்தது.

இதன்போது நாட்டின் அனைத்து சட்டத்தரணிகளும் இன்றைய தினம் (16) நீதிமன்றப் பணிகளிலிருந்து விலகியிருக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, இன்று நாடு முழுவதும் உள்ள சட்டத்தரணிகள் நீதிமன்றப் பணிகளிலிருந்து விலகியுள்ளனர்.

இதனால் நீதிமன்ற சேவைகளைப் பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சில நீதிமன்றங்களுக்கு முன்னால் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் பூதவுடல்கள் கொழும்பிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், நேற்று மாலை பிடிகல, கொடமுன பகுதியில் அமைந்துள்ள அவர்களின் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

தற்போது பூதவுடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்தரணிகள் மற்றும் பிரதேசவாசிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன. 

you may also like